கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை

(13. 3. 1928 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.)

தலைவர்களே! சீமான்களே! சீமாட்டிகளே ! நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும் இத்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

நம் தேசத்தினர் கலாசாலைகளில் படித்து வெளிவந்தவுடன் கவர்ன்மெண்டு உத்தியோகங்கட்கும், கிளர்க்கு வேலைகட்கும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவ்வேலைகட்கன்றி வேறு வேலைகட்கு உபயோகமானவர்களாக இருக்கவில்லை. கவர்ன்மெண்டிலும் எத்தனை பேருக்குத்தான் உத்தியோகம் கிடைத்தல் கூடும்?

இந்தியாவில் ஸ்கூல்பைனல் பரீட்சையில் தேறியவர்கட்கு எத்தனை பேருக்கு உத்தியோகம் கிடைக்கிறதென்று கணக்கிட்டால், ஆயிரத்துக்கு ஒரு பேரும், எப்.ஏ., பி.ஏ., எம்.ஏ.,க்களில் ஆயிரத்துக்கு இருபத்தைந்து பேருக்குமேல் உத்தியோகம் கிடைப்பதில்லை. மற்றவர்க்குப் பிழைப்புக்கு வழியில்லாமலிருக்கிறது.

வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக் கூறுகிறேன். 1924ஆம் வருஷத்தில் மீண்டும் நான் வக்கீல் தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம் இருபது வக்கீல்கள் என்னுடனிருந்தனர். இப்பொழுது நாற்பது வக்கீல்கள் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது மாதம் ரூபாய் நானூறு, ஐந்நூறுதான் வருகின்றது. பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம்.

தொழிற்கல்வி

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும். பணமுள்ளவர்கள் தேச்சரித்திரம், பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம், சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும், பேசவும். அவசியமானால் உபந்யாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்க வேண்டும், தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்க வேண்டும்.

நன்செய், புன் செய், தோட்டம் ஆகிய வற்றில் மாண வ மாண விகளுக்குப் பயிற்சியளித்தல் அவசியமாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும், ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

புஞ்சை, நஞ்சைகளில் வேலை செய்வதற்குக் கூட கல்வி அவசியமாவெனக் கேட்கலாம். இருபது வயதுவரை வெயிலில் நின்று வேலை செய்யாத பழக்கத்தால், இருபது வயதுக்கு மேல் நன்செய். புன்செய் ஆகியவற்றில் வேலை செய்தல் கஷ்டமாக இருக்கின்றது. எனவே, சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும்.,

நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில் செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொள்வதுண்டு, ஆனால் வெளியில் வந்து பத்திரிகை ஆபிசில் உதவி ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன். ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும், சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால், விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள். என் செய்வது!

இனி, கலாசாலைகளில் ஒருமணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத் தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்தல் அவசியமாகும்.

ஆதித்திராவிடர்கள்

நேற்று ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் (ஜெயங் கொண்டபுரம் மெ.ராம. மெ.) அவர்களால், ஆதித் திராவிடர்களுக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும், மேல் ஜாதியாருக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும் பார்த்தேன். ஆதித் திராவிட பள்ளிப் பிள்ளைகட்கு வேட்டி வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்னும் வேண்டும் சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறார்கள். எனினும் அங்குக் கொடுக்கப்படும் கல்வி முறையைக் கண்டபொழுது எனக்கு ஒரு சந்தேக முண்டாயிற்று. அதனை இங்கும் தெரிவிக்கிறேன்.

தனவைசியர்கட்குப் பணமுடை யில்லாதிருக்கலாம். அவர்கள் நாற்பதினாயிரம் ஜனங்கள்தான், மற்ற ஜனங்கள் அவ்வாறில்லை, எனவே, அவர்களுக்குத் தொழிற்கல்வி போதிக்க வேண்டும். அத்தொழிலில் வரும் வரும்படி யை அவர்கள் பெற்றோர்கட்குக் கொடுத்துவிடலாம். ஆதித் திராவிடர்கள் நன்கு படித்துவிட்டாலும் உத்தியோம் கிடைத்தா லல்லாவா சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்?

படித்தவர்கள் எல்லோருக்கும் உத்தியோகம் கிடைத்து விடுமா? ஒவ்வொரு கலாசாலையிலும், குருகுலம் போல தோட்டம், நன்செய், புன்செய் முதலியன ஏற்படுத்தித் தொழிற்கல்வி போதிக்க வேண்டும்.

ஆதித் திராவிட மாணவர்கட்குப் பன்னிரண்டு மணி வரை விவசாயமும், அதற்குமேல் பாஷா ஞானமும் போதிப்பது மேன்மை தரும். பணமில்லாமல் ஒருவனும் ஒரு வேலையும் செய்ய முடியாது. தரித்திரனாக ஒருவன் இருப்பானாயின் அவன் அறிவு திறம்பட வேலை செய்வதில்லை. அரசாங்கத்தாரால் அனைவருக்கும் உத்தியோம் கொடுக்க முடியுமா என்பதுபற்றி நான் ஒன்றும் கூற முடியாது.

அரசியல் விஷயங்களைக் குறித்து நான் ஒன்றும் இப்பொழுது அதிகமாய்ப் பேசுவதில்லை. சாரமாகச் சொல்வதுண்டு. அரசியலைப் பற்றிப் பேச நண்பர்களான திரு ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி அவர்களே தகுதியுடையவர்கள். ஏனென்றால், சில சமயங்களில் பொய் பேச நேரலாம், புகழும்படி நேரலாம். எனவே நான் அதற்குச் சிறிதும் அருகனல்ல. நான் பேசினேனானால் “ஸ்பிரிட்’ உண்டாகிவிடும். உடனே என் மனதில் உள்ளன வெல்லாம் வெளியில் வந்துவிடும்.

உடனே இன்னும் நான்கு வருஷமோ, நாற்பது வருஷமோ. ஜெயிலுக்குப் போகவேண்டுவதுதான். பின்னர் என் பெண்டாட் டி , பிள்ளைகளெல்லாம் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான்,

பொருளில்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது. அதற்குத் தொழிற்கல்வி, விவசாயம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும். சட்டசபை மெம்பர்களிடம் சொல்லிக் கட்டாயமாக விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றைப் போதிக்க வேண்டுமென்று மசோதா கொண்டு வரச் செய்யுங்கள். அதனை அவர்கள் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் அவர்கட்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்,

தன வைசியர்கள் கலாசாலை போன்றவைகளுக்குப் பொருள் நல்குவது சந்தோஷத்தைத் தருகின்றது. ஆனால், பணத்தைப் பிறரிடம் தொடுத்தால் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படக் கூடாது. எனினும் வறுமையுடையவனிடம் பணப்பொறுப்பை விடுதல் தகாது. ஏனெனில், தனக்குத் தேவையிருக்கும்போது அப்பணத்தை உபயோகப்படுத்தி விடுவான்.

பெண்மக்கள் நிலை நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச் செய்து விட்டனர். இந்நாட்டில் இது இல்லையென எண்ணுகிறேன். பிள்ளைபெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப் போல் பெண்கட்கும் சமஉரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும். ஆனால், அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களா என்று பார்க்கின், இல்லை , ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்,

இந்நாட்டில் மனைவியோடு பேசுவது கஷ்டமென்று எனது நண்பர் சொன்னார். இது மிக மோசமானது. பெண்களும் தங்கள் கணவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும்.

எச்சில் இலையில் சாப்பிடும் வழக்கம் எங்கள் ஜாதியில் உண்டு. இங்கு உண்டோ என்னமோ தெரியவில்லை. (உண்டு, உண்டு என்று ஜனங்கள் கூறினர்.) பிராமண வீட்டிலும் இருக்கிறதா? இருக்கிறது என்றனர்.) நாகரிகமில்லாதவர் என்பவரிடத்தில்கூட இக்கொடுமை இல்லை ,

அயலூருக்கு விருந்துக்குப் போயிருந்தாலும், ஆயிரம்பேர் சாப்பிட்ட இலைகளில் என் இலையைத் தேடிப் பார்த்து அதிலேயே என் மனைவி சாப்பிடவேண்டும். அதில் மண் விழுந்திருக்கும். இன்னொருவருடைய இலையில் அப்பளங்கள் விழுந்திருக்கலாம். அவைகளைக் கவனிப்பதில்லை. எச்சில் இலையை நாய்களன்றோ தின்னும்? முருங்கைக் காயைக் கடித்து மென்று தின்று விட்டுத் துப்பியிருப்பேன்; (சிரிப்பு) அதில் உண்ண வேண்டும், அப்படி யில்லாவிட்டால் புருஷன்மேல் பற்றில்லாதவளென்று கூறப்படுகிறது. எச்சிலிலையில் சாப்பிடாவிட்டால், “புருஷன் இலையில் சாப்பிடாத தேவடியாள்’ என்று சொல்லுகின்றனர்.

எனக்குக் கல்யாணம் ஆனது முதல், எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன். பெண்கட்கும் சம சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆனால், கல்வி இல்லாத அக்காலத்தில் தீர்ப்பளிக்கும் உரிமை புருஷனிடம் இருக்கவேண்டும். உரிமை பெறப் பெண்கள் போராடுதல் வேண்டும்.

பத்திரிகைச் சண்டை

உள்ளூர் சம்பந்தமாக ஒன்று கூற விரும்புகிறேன். தனவைசியர்களால் நடத்தப்படும் இரண்டு பத்திரிகைகள் கொடிகட்டிச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதனை நான் இலோசாக நினைத்தேன். பிச்சப்பா சுப்பிரமணியன் செட்டியார், “குமரன்’ ஆசிரியருக்கும் ‘ஊழியன்’ ஆசிரியருக்கும் நண்பர். பார்க்கும் பொழுது இருவரிடத்திலும் ஒரே விதமான அன்பிருக்கிறதாகவே தோன்றுகின்றது. அவர் தலையிட்டால் இச் சண்டையை ஒழித்து விடலாம். ஆனால் அவர்கள் இருவர்களையும் சமாதானப் படுத்த முடியாதென்று சொல்லுகிறார்கள். சந்தாதார்கள் கூட்டம் போட்டு இம்மாதிரி ஒருவருக்கொருவர் சொந்தச் செய்திகளைக் குறித்துச் சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்க வேண்டும். குமரனில் ‘இதோடு முடித்து விட்டோம்’ என்ற குறிப்பைப் படித்துப் பார்த்தேன்.

இதழ்: திராவிடன், 15,3.1928)

1 thoughts on “கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை

  1. பிங்குபாக்: வ.உ.சி. சொற்பொழிவு | சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக