“விதியுடன் ஓர் ஒப்பந்தம்” – நேரு

டில்லி அரசமைப்புச் சட்ட அரங்கில் (Constitution Hall) அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடியது.

ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்

“விதியுடன் ஓர் ஒப்பந்தம்” என்ற புகழ்பெற்ற அந்த உரை —————–

“நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழித்தெழுந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது. ஒரு காலகட்டம் நிறைவடைந்து பழையதிலிருந்து புதுமைக்கு மாறும் நிலையில், நீண்ட நெடிய காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா பேசத் தொடங்கும் போதுதான் வரலாற்றில் அரிதான ஒரு தருணம் வருகிறது. இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் இன்னும் விரிவான நிலையில் மனிதகுலம் அனைத்திற்குமான சேவைபுரிவதற்கு இத்தகைய புனிதமான ஒரு தருணத்தில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்ளும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது ஆகும்.

“வரலாற்றின் விடியலில், இந்தியா தனது முடிவற்ற தேடலைத் தொடங்கியுள்ளது. திக்கு தெரியாத பல நூற்றாண்டுகள், இந்தியாவின் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் சார்ந்த அதன் தீவிர முயற்சிகளினாலும், தோற்றப் பொலிவினாலும் நிரம்பியுள்ளன. நல்லது, கெட்டது எது நடந்திருந்தபோதிலும் இந்தியா தனது தேடலின் பார்வையை ஒருபோதும் இழந்ததில்லை. அதற்கு வலுட்டியிருக்கும் லட்சியங்களையும் மறந்துவிடவில்லை. துரதிருஷ்டமான ஒரு காலகட்டத்தை நாம் இன்றுமுடித்து வைத்திருக்கிறோம். இந்தியா தன்னைத் தானே மீண்டும் கண்டறிந்துகொள்ளும். நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் சாதனை ஒரு தொடக்கம்தான். நமக்காகக் காத்திருக்கும் மகத்தான வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பம் ஒன்றின் தொடக்கம் தான். இந்த சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கும்,வரும் காலத்தின் சவால்களை ஏற்றுக் கொள்வதற்குமான துணிவும், விவேகமும் உள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?

“சுதந்திரமும், அதிகாரமும் பொறுப்புணர்வைக் கொண்டுவருகிறது. இந்தப் பொறுப்புணர்வு இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், இறையாண்மைகொண்ட அமைப்பான இந்த சபையிடமே இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புவரை உழைப்பின் அத்தனை வலிகளையும் நாம் தாங்கிக்கொண்டோம். இந்தத் துயரத்தின் நினைவுகளில் நமது இதயங்கள் கனத்துக் கிடக்கின்றன. இவற்றில் சில வலிகள் இன்னமும் கூட தொடர்கின்றன. இருந்தபோதிலும், கடந்தகாலம் முடிந்துவிட்டது, எதிர்காலம்தான் இப்போது நமக்கு கண்முன் தெரிகிறது.

“எதிர்காலம் என்பது தொல்லையில்லாததோ, ஓய்வாக இருக்கவேண்டியதோ அல்ல. இடைவிடாத முயற்சியுடன் இருக்கவேண்டியது. அப்போதுதான் நாம் அடிக்கடி மேற்கொண்டிருக்கும் உறுதிமொழிகளையும், நாம் இன்று மேற்கொள்ளவிருக்கும் உறுதிமொழியையும் நிறைவேற்றமுடியும். இந்தியாவிற்கான சேவை என்பது கோடிக்கணக்கான துன்புறும் மக்களுக்கான சேவை. வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்பையே இது குறிக்கிறது.

“நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிக உயரிய மனிதரின் லட்சியம், ஒவ்வொருவரின் கண்களிலிருந்தும் வழிந்தோடும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதே ஆகும். இது நமக்கு எட்டாததாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்ணீரும், வேதனைகளும் இருக்கும் வரையிலும் நம்முடைய வேலை முடியப்போவதில்லை.

“ஆகவே நாம் உழைத்தாக வேண்டும். வேலை செய்தாக வேண்டும். நம்முடைய கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் கடினமாக உழைக்கவேண்டும். இந்தக் கனவுகள் இந்தியாவிற்கானவை. ஆயினும், நாம் தனித்து வாழ்ந்துவிட முடியுமென்று ஒருவரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா தேசங்களும், மக்களும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருப்பதால், இந்தக் கனவுகள் உலகம் முழுவதிற்கும் ஆனவையும் கூட. அமைதி என்பது பிரிக்க முடியாதது. சுதந்திரமும் அப்படியே. வளமும், பேரழிவும் கூட இந்த உலகிற்குத் தொடர்பில்லாத தனித்தனித் துண்டுகளாகப் பிளவுபடுத்த முடியாதவை.

“இந்திய மக்களை அவர்களின் பிரதிநிதிகளாகிய நாம், இந்த மாபெரும் வீரச் செயல்களுக்குத் திடமான நம்பிக்கையுடன் எங்களுடன் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அழிவுக்கு இட்டுச்செல்லும் அற்பமான விமர்சனங்களுக்கு இது உகந்த நேரமல்ல. பகைமை பாராட்டுவதற்கோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கோ இது சமயமல்ல. இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் வாசம் செய்யக்கூடிய சுதந்திர இந்தியா என்ற உன்னதமான மாளிகையை நாம் கட்டி எழுப்பவேண்டும்.

(1947ஆகஸ்ட் 14 அன்று, அரசியல் நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை – தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள், தொகுதி−1, பக்கம் 25 )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s