1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை

(பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் ராஜகுருவின் தாயும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் வீற்றிருக்க சர்தார் கிஷன்சிங் உரையாற்றினார்)

ராஜகுருவின் அன்னை இங்கு வீற்றிருக்கிறார்கள். இவருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் இந்த அன்னைக்கு தலை வணங்குகிறேன்.







சர்தார் கிஷன்சிங்

தலைவர் அவர்களே ! சகோதர சகோதரிகளே ! சற்று நேரத்துக்கு முன்பு உங்களுக்கு முன்னால் என்பால் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானம் பற்றி நான் பேச வேண்டும் என்று எனக்கு கூறியுள்ளனர். பண்டிட் மாளவியா அவர்களின் உள்ளத்தில் இந்தப் பிள்ளைகள் (பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்) பால் எவ்வளவு அன்பு என்பதைக் கேட்டுக் கொண்டுமல்லாது பார்த்துக் கொண்டுமிருக்கிறேன்.

மாளவியாஜி இந்தப்பிள்ளைகள் மீது பரிவு கொண்டிருந்தார். இவர்களுடைய உயிரைக் காப்பாற்ற மாளவியாஜி எவ்வளவு முயன்றார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும்.அரசாங்கம் இவர்களுக்கு மரணதண்டனை தராமல் வேறு ஏதாவது தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதில் மாளவியாஜி எவ்வளவு முனைப்பாக இருந்தார் என்பது எனக்கு தெரியவந்து கொண்டிருந்தது. இது அவருடைய அன்பில்லாமல் வேறென்ன ?

நமது மரியாதைக்குரிய மோதிலால் நேரு இந்தப்பிள்ளைகளை எப்போதும் கவனத்தில் வைத்திருந்தார்.பண்டிட்ஜி இந்தப்பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் இவ்வளவு பெரிய மனிதராக இருந்தபோதிலும் அவருக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் இவர்களைச் சந்தித்து வந்தார். இது அவரது அன்புதானே !தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை இவர்களுக்காக ஒதுக்கிக் கொண்டு அவர்களை இவர்களை கவனித்து வந்தனர்.நான் ஒரு சிறிது பேசி முடித்துக் கொள்கிறேன். அதிகம் பேச என்ன இருக்கிறது ?முக்கியமான விசயங்களை பண்டிட் ஜவகர்லால் நேருவும், பண்டிட் மாளவியாவும் கூறிவிட்டனர். இந்தப் பிள்ளைகளை எப்படி தூக்கிலிட்டார்கள் என்பதை நீங்கள் செவிமடுத்தீர்கள். அவற்றைத் திரும்பக் கூறி என்ன பயன் ? அரசாங்கம் எவ்வளவு நியாயத்தையும், நீதியையும் கடைபிடித்தது என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் நாடு அடிமைப்பட்டு கிடக்கிறது. அடிமைத்தனத்தை களைய நாம் முயலவேண்டும் என்பதையும் நான் அறிவேன். எந்த ஒரு நாட்டையும் விடுவிக்க உயிர்த்தியாகங்கள் செய்யவேண்டும். நமது நாட்டிலோ இன்னும் பல சிரமங்கள் உள்ளன. இங்கு ஒரு இனம் மற்ற இனத்தை நம்புவதில்லை. இந்து-முஸ்லீம் கலவரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தச் சச்சரவுகளை ஒழித்து தங்கள் பாதையை செப்பனிட்டுக் கொள்வது இளைஞர்களுக்குரிய கடமையாகும்.

1906 ஆம் ஆண்டு நானும் எனது சகோதரனும் கல்கத்தா சென்றிருந்தோம். அது ஒரு காலம். அப்போது நாட்டில் இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை. வங்காளத்தில் மட்டும் அப்போது வேலை துவங்கியிருந்தது. நாங்கள் கல்கத்தா போனபிறகு அங்குள்ள நிலைமையைக் கண்டு லாகூரில் நாங்கள் வேலை செய்வோம் என்று சொன்னோம். அப்போது பஞ்சாப்பில் இப்போது இருப்பது போன்ற நிலைமை இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக பேசும் துணிவு எவருக்கும் இல்லை. அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்களை எதிர்த்தால் கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன. சட்டத்தை எதிர்ப்பது என்பது துயரத்தை விலை கொடுத்து வாங்குவது போலத்தான். என் சகோதரன் அஜித்சிங் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் உடனே நாடு கடத்தப்பட்டான். சிறிய அளவில் செயல்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சர்தார் சுரக்சிங் முன்பே சிறையில் இருந்தார். அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய தொண்டு அலாதியானது. அவரை தரிசிக்க வேண்டும் என்பது என ஆசை. ஆனால் நாங்கள் சிறையிலிருக்கும் அவரைப் பார்க்கச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிவிட்டிருந்தார். நாங்கள் கல்கத்தாவில் இருந்து திரும்பிவந்து லாகூரில் வேலை துவங்கிய உடனே சிறையில் அடைக்கப் பட்டோம். சிறையில் இருந்து திரும்பிய போது பகத்சிங் பிறந்திருந்தான். எங்களுடைய ஆசை,விருப்பம் எல்லாம் இந்தக் குழந்தை நாட்டுக்குப் பயன்படவேண்டும் என்பதுதான். எங்கள் விருப்பப்படியே  தன் உயிரை நாட்டுக்கு அவன் அர்ப்பணித்து விட்டான். இன்று நாடே அவனுக்காக கண்ணீர் சிந்துகிறது. இன்றுள்ளது போல் அன்று நிலைமை இல்லை. அவனுக்கு நாட்டிற்கு தொண்டாட்டுவதற்கான கல்வியை அளித்தோம். அன்று இப்போதுள்ளது போல கல்வி வசதிகள் கிடையாது.நாட்டுத் தொண்டில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவனுடைய கல்வியை கவனிக்க எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. என்னால் அவனை அதிகம் படிக்கவைக்க முடியவில்லை. ஏனேனில் நான் வெகுநாள்கள் சிறையில் இருக்க நேரிட்டது. எனவே அவனுக்கு உயர்க்கல்வி அளிக்க முடியவில்லை. நான் சிறையில் அடைபட்டதால் அவன் பள்ளிக்குச் செல்வதை பாதியில் நிறுத்திவிட்டான். இந்தியத் தாயின் அடிமைத்தளைகளை அறுத்தெறியும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவன் கூறிக் கொண்டிருப்பான். அந்த சபதத்தில் உறுதியாக இருந்தான். கடேசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் அவனுக்கு திருமணம் செய்துவைக்க முயன்றோம். “தம்பி , எங்களுக்கு வயதாகிவிட்டது. எங்கள் பேச்சைக் கேள்”  என நாங்கள் சொல்வது வழக்கம். ஆனால் எங்கள் பேச்சு அவனுக்குப் பிடிக்காது. அவன் மனதில் நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற கனல் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்தது. திருமணப் பேச்சுகள் எழுந்த உடனே அவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவன் கணேஷ் சங்கர் வித்யார்த்தியுடன் இருந்தான் என்பது பிறகு தெரியவந்தது. டில்லியில் பகத்சிங்கும் குருதத்தும் இணைந்து வேலை செய்தார்கள். எனது குடும்பத்தினர் பகத்சிங்கைப் போலவே குருதத்தையும் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தினர். “தத் பகத்” எங்கே என சேர்த்தேதான் நாங்கள் கேட்போம். இரு தூர மாநிலங்களைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அவர்களை வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லவே முடியாது. ஒன்றாகவே இருப்பார்கள்; சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; எழுவார்கள். ஒருவர் மற்றவரின் வலியை அறிவார்கள். இருவரும் ஒன்றாகவே டில்லியில் வைத்து பிடிபட்டனர். அவர்கள் பிடிபட்ட போது நான் அவர்களைப் பார்க்க டில்லிக்குச் சென்றேன். நான் அவனுக்காக வழக்காட தொடங்குவேன் என அவன் கலவரப்பட்டான்.அவனுக்காக நான் வழக்காடுவதை அவன் ஒருபோதும் விரும்பவில்லை. அரசாங்கம் இறுதிவரை அவனை முறையற்று நடத்தியது. சாதாரண நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்காமல் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரித்தார்கள். இது என்ன நியாயம் ? அது மட்டுமல்ல, தூக்கு தண்டனைக்குப் பிறகு அவர்கள் செய்தது வெட்ககரமானது. தூக்கில் போடும் முன் எங்களை சந்திக்கவும் விடவில்லை. தூக்கு தண்டனைக்கு முன் தங்கள் உறவினர்களைச் சந்திக்கலாம் என சட்டம் சொல்கிறது. ஆனால் எங்களைச் சந்திக்கவிடவில்லை. சிறை சூப்பிரண்டென்டைக் கேட்டால் டெப்புடி கமிஷனரைக் கேட்கவேண்டுமென்பார். டெபுடி கமிஷனரைக் கேட்டால் உள்ளூர் ஆட்சி அமைப்புகளைக் கேட்காமல் எதுவும் செய்யமுடியாது என்பார்.

அஜித்சிங்



அஜித்சிங்

“என்னைத் தூக்கில் போட்டுவிடுங்கள் !கவலைப்பட வேண்டாம் .அதுதான் நல்லது; எங்களைத் தூக்கில் போட்டால் ஒரே வாரத்தில் விடுதலை கிடைத்துவிடும்” என்று அவன் எங்களிடம் முன்பே சொல்லியிருந்தான். பிரைவு கவுன்சில் போனாலும் பயனில்லை. ஏனெனில் அடிமைகளுக்குப் புகார் செய்ய உரிமை கிடையாது என்பான் அவன். போலீஸ் எனக்கிழைத்த அக்கிரமங்கள் குறைவா என்ன ? என்னை பொய் வழக்கில் சிக்கவைத்து முடிந்தவரை கொடுமை செய்தனர். அவனுக்காக சரியாக வழக்காட எனக்கு அவகாசம் கிடைக்காதபடி செய்துவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் தன்னைச் சந்திக்கலாம் என அவன் சொன்னான். ஆனால் அதற்கு அடுத்த வாரமே “இது நமது இறுதி சந்திப்பு” எனச் சொல்லிவிட்டான். கடைசி நாளன்று நாங்கள் உறவினர்கள் அவனைச் சந்திக்கலாம் என்று கடிதம் வந்தது. ஆனால் நாங்கள் சென்று சந்திக்கும் முன்பே அவனைத் தூக்கில் போட்டுவிட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வந்துவிட்டது. இது தான் அரசாங்கத்தின் நீதி ?!

இளைஞர்களுக்கு நான் இரண்டு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அமைதி காக்கவேண்டும். மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலை செய்யவேண்டும். நீங்கள் அங்கனம் செய்தால்தான் இந்தியத் தாயின் அடிமைத்தளையை அறுக்க முடியும். நம்முடைய தளபதிக்கு (காந்தி) முழு ஒத்துழைப்பையும் அளியுங்கள். அவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவருக்குத் துணை நில்லுங்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள். அப்போதுதான் நாட்டை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவிக்க முடியும்.

– சர்தார் கிஷன்சிங

(மொழிபெயர்ப்பு : இந்தி-ஆங்கிலம் – மு.ஞானம், தமிழில் – சுனில் கிருஷ்ணன்)

1929 ஏப்ரல் 8 ல் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசி பதுகேஷ் மற்றும் பகத்சிங் கைதானார்கள். 1929 ஏப்ரல் மாத இறுதியில் பகத்சிங்கின் தந்தை கிஷன் சிங் சிறையில் இருக்கும் பகத்சிங்கைப் பார்க்க தில்லி சென்றார்.சிறையில் அவரைப் பார்க்கக் கோரி சமர்ப்பித்த மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. ஏப்ரல் 26, 1929 ல் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் வழக்கு சம்பந்தமாக வழக்குரைஞர் எவரையும் அமர்த்த வேண்டாம் என பகத்சிங் கேட்டுக் கொண்டார். ஆனால் மே 4, 1929 இல் காங்கிரஸ்காரரும் பிரபல வழக்குரைஞருமான திரு. அசப் அலி மூழமாக புதிய மனுவை சமர்பித்தார் கிஷன் சிங். சிறைக்குச் சென்று சந்திக்க அனுமதி கிடைத்தது. சந்திப்பில் உடன் இருந்தவர்கள் அசப்அலி மற்றும் சிறைகாவலர். மற்றொரு வழக்கான சாண்டர்ஸ்(Saunders) கொலையில் வேண்டுமென்றே தன்னை குற்றவாளியாக சேர்த்திருப்பதாக பகத்சிங் கூறினார். வழக்கிற்காக காசை விரயமாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். எனினும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யப்படலாம் என அச்சுறுத்தல் இருந்ததால் வழக்குரைஞரை நியமிக்க கிஷன் சிங் எத்தனித்திருந்தார். வெடிகுண்டு வீசிய வழக்கிற்காக ஜூன் 6, 1929 இல் பகத்சிங் தயாரித்துக் கொடுத்த அறிக்கையை  திருத்தி மேலும் மெருவூட்டி நீதிமன்றத்தில் அவர் தரப்பிற்காக வாசித்தவர் அசப் அலி. குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை வழங்கப்பட, வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. இரண்டரை நாள்கள் அசப் அலி வாதாடினார். பகத்சிங்கும் தன் தரப்பை எடுத்துரைத்தார். எனினும் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட போது பகத் கல்கத்தாவில் இருந்தார் என கிஷன்சிங் வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். பகத்சிங்கிற்கு இவ்விசயம் தெரியவர தனது தந்தையை கடிந்துகொண்டார்.

தொடர்ந்து நடந்த சாண்டர்ஸ் கொலை வழக்கில் அக் 7,1930 ல் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ்விற்கு தூக்கு தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிஷன்சிங் வழக்கை பிரவி கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லலாம் என முடிவெடுக்கிறார். கவுன்சில் மனுவை நிராகரிக்கிறது. இந்நிலையில் மார்ச் 4, 1931 ல் புகழ்பெற்ற காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகியதைத் தொடர்ந்து காந்தியின் தலைமையின் கீழ் அறவழியில் நடைபெற்ற உப்பு சட்டமறுப்பு போராட்டம் முடிவுற்றது.

மார்ச் 24,1931 ல் தண்டனை நிறவேற்றப்படலாம் என்ற செய்தி கசிந்தது. பகத்சிங்கை இறுதியாக அவரது குடும்பத்தினர் சிறையில் சந்தித்தனர். தனது தந்தையிடம் பகத்சிங் பேருணர்ச்சி மிக்க ஒரு வேண்டுகோள் வைத்தார். “நீங்கள் உங்கள் படைத்தலைவரை (காந்தி) ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும்” என்றார்.

போராட்டம் வெடிக்கலாம் எனக் கருதிய பிரிட்டிஷ் அரசு முந்தின நாள் இரவே தூக்கிலிட ஏற்பாடு செய்தது. இரவு 7.33 மணிக்கு ஏகாதிபத்தியம் வீழட்டும், இன்குலாப் ஜிந்தாபாத் என தோழர்கள் மூவரும் முழங்க தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்கள்.

சடலங்களை லாகூரிலிருந்து 70 மைல்கள் தொலைவில் உள்ளஃபெரொஷ்பூர்  எடுத்துச் சென்று சட்லாஜ் நதிக்கரை ஓரம் வைத்து எரித்தார்கள். சீக்கிய, இந்து மதப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன, சாம்பல் சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டன என பிரிட்ஷ் அரசு அறிக்கை வெளியிட்டது.

சடலங்களை உரிய மரியாதையுடன் எரிக்கவில்லை; பாதி எரிந்த நிலையிலேயே நதியில் வீசப்பட்டன என்ற செய்தி பரவியது. காங்கிரஸ் செயற்குழு அதை ஆய்வு செய்ய டாக்டர் சத்தியபால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. க.சந்தானம்,மெளலானா அப்துல் குவதிர் கசுரி, மாலிக் பர்கத் அலி, ஜீவன்லால் கபூர், லாலா ரைய்சாதா ஹன்ஸ்ராஜ் அக்குழுவில் இடம்பெற்ற மற்ற உறுப்பினர்கள். சாட்சி சொல்ல ஒருவரும் முன்வராத காரணத்தால் அக்குழுவால் உண்மையைக் கண்டறிய இயலவில்லை.

மார்ச் 21,1931 இல் அப்போதைய பஞ்சாப் மாகாண அரசுக்கு பகத்சிங்கின் வழக்குரைஞர் அசப் அலி தண்டனை குறைப்பிற்காக எழுதிய கருணை மனுவை காந்தி பகத்சிங்கின் சுயமரியாதையை பாதிக்காத வண்ணம் திருத்தி அமைத்துக் கொடுத்தார். அசப் அலி அம்மனுவை லாகூருக்கு (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) எடுத்துச் சென்றார்.

லாகூரில் இருக்கும் ஆவணக் காப்பகத்தில் பக்த்சிங் வழக்கு தொடர்புடைய 135 கோப்புகள் உள்ளன. அதில் ஒன்று காந்தி திருத்திக் கொடுத்த கருணை மனு. பாகிஸ்தானில் இருக்கு அறிஞர்களால் கூட அவற்றை அணுக முடியவில்லை. பிரபல இதழியலாளரும் “The Martyr : Bhagat Singh Experiments in Revolution” நூலின் ஆசிரியருமான குல்தீப் நாயார் அக்கோப்புகளைப் பெற முயற்சித்தார்.

2006 இல் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ்வின் 75 வது நினைவு நாளில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராணா பகவாந்தாஸ், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு லாகூர் சதிவழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளில் இருந்து நான்கு தொகுதிகளை மட்டும் அளித்தார்.

இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்த இளம் போராளிகளின் தியாகத்தை என்றும் நினைவில் நிறுத்த, வளரும் இளையத் தலைமுறையிடம் சென்றடைய பாகிஸ்தானிலுள்ள கோப்புகளை பெற இந்திய அரசும், தேசபக்தர்களும் முயற்சி எடுப்பார்களா ?

Source : காந்தி – பகத்சிங் http://on.fb.me/16WX0Gk

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s