ஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாடும் – ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி

30 நவம்பர் 1920 ரௌத்திரி கார்த்திகை 16

வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென் காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன,’ அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று “பஹிரங்கக் கடிதம்” மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள வேறு சில நண்பர்கள் என்னிடம் நேராகவும் கேட்டனர். இந்த நண்பர்களுக் கெல்லாம் இங்கு பொதுவாக மறுமொழி யெழுதிவிடுதல் பொருந்து மென்றும், அவர்களுக்கு இஃது திருப்தி தருமென்றும் நினைக்கிறேன். இவர்களெல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வியின் சுருக்கம் பின்வருமாறு:

“ஒத்துழையாமை விஷயத்தில் உம்முடைய முடிவான கொள்கை யாது? சுதேசமித்திரன் பத்திரிகை ஒத்துழையாமையை பகிரங்கமாகவும் முடிவாகவும் எதிர்க்காவிடினும், அதில் உள்ளூர அபிமான மில்லாதது போல் காணப்படுகிறதே? அப்படியிருக்க, நெடுங்காலத்து தேசாபிமானியாகிய நீர் இந்த ஸமயத்தில் அப்பத்திரிகையில் வேலை செய்ய அமர்ந்தது நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

இவர்களுக்கு நான் தெரிவிக்கும் உத்தரம் பின் வருமாறு. தென் இந்தியாவில் தேசியக் கக்ஷிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்று தான், ஆரம்பமுதல் இன்றுவரை, ஒரே நெறியாக, நிலை தவறாமல் நின்று, வேலை செய்து கொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ்நாட்டில் யாரும் அறியாதாரில்லை. ஸமீபத்தில் நடந்த கல்கத்தா விசேஷ காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்றின் விஷயத்தில் மாத்திரம் ஸ்ரீமான் சுதேசமித்திரன் பத்திராதிபர், பெரும் பகுதியாரின் தீர்மானம் இப்போது கார்யத்தில் நிறைவேற்ற முடியா தென்று சொல்லும் ஸ்ரீயுக விபின சந்த்ரபாலர், சித்த ரஞ்ஜனதாஸர் முதலிய பழுத்த தேசாபிமானத் தலைவர்களின் கொள்கையை ஆமோதிக்கிறார், ஒத்துழையாமையைத் தவீர தேச விடுதலைக்குச் சரித்திர பூர்வாங்கமான வேறு வழிகள் இருக்கின்றன. இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரமாகவும், ‘தீர்வை மறுத்தல்’ முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும், அனுஷ்டித்தால், ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதனால் விளையக் கூடும்.

எனினும் இப்போது காண்பிக்கப் பட்டிருப்ப தாகிய முதற் படியின் முறைகளால் அந்தப் பயன் எய்துவது ஸாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்ட ஸபை ஸ்தானங்களை பஹிஷ்காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களை யெல்லாம் பிடித்துக் கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தி யோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன், அதனால் குறிப்பிட்ட பயனெய்திவிடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.

என்னுடைய சொந்த அபிப்பிராயப்படி, ஸ்வ தேசியக் கொள்கைகளை மேன்மேலும் தெளிவாகவும், உறுதியாகவும், ஜனங்களுக்குள்ளே ப்ரசாரம் புரிவதும், ராஜரீகச் சதுரங்க விளையாட்டில், ஸமாதானமாகலே, எதிரி கலங்கும்படியானதோர் ஆட்டமாடி, ஸரியான ஸமயத்தில் ஸ்வராஜ்யத்தைக் காட்டி யெடுத்துக் கொள்ள முயற்சி புரிவதுமே – சரித்திர ஸம்பதமான உபாயங்களாகும். இந்த முறையில் ஜனங்கள் சட்டத்தை யுடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சயத்துக் கிடமில்லாமலே வேலை செய்ய முடியும், ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திவே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜவீதி யிருக்கையிலே சந்து, பொந்துகளின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராதபடிக்கே, நமக்கு ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி காலதேச வர்த்தமானங்களும், தெய்வ சக்தியும் தமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும் போது பல இந்தியருக்குப் பிராணனச் சேதமும் மற்றப் பெருஞ் சேதங்களும் விளைக்கக் கூடிய குழப்ப வழியில் நாமேன் போக வேண்டும்? ஸ்ரீமான் காந்தியின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேச நலத்தை விரும்புகிறார்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை அவர்களை எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லாமல், ஸ்வ ஜனங்களென்ற அன்பு மிகுதியால் அவர்களை இயன்றவரை ஆதரித்துக் கொண்டும் வருகிறது. அபிப்ராய பேதமுடையவர்களும் தேசாபிமானிகளாக இருப்பாராயின், அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்த வேண்டுமென்ற நியாயத்துக்கு இத்தருணத்தில், சுதேசமித்திரன் பத்திரிகை ஓரிலக்கியமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கனம் பெருந்தன்மை பாராட்டும் பத்திரிகையைக் கூட மஹாத்மா காந்தியின் புது முறையை முற்றிலும் அனுஷ்டித்துத் தீர வேண்டுமென்ற கருத்துடைய என் நண்பர் சிலர் பொதுமையும், தீர்க்காலோசனையுமின்றிப் பல வழிகளிலே பழி கூறி வருவதைக் காணுமிடத்து எனக்கு மிகுந்த மன வருத்த முண்டாகிறது. தேச பக்தர்களுக்குள்ளே முடிவான கொள்கைகளைப் பற்றியன்று; வெறுமே தற்கால அனுஷ்டானங்களைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டாகும் போது உடனே பரஸ்பரம் ஸம்சயப்படுதலும் பழி தூற்றுதலும் மிகக் கொடிய வழக்கங்களென்று நான் நிச்சயமாகவே கூறவல்லேன். இந்த நிலைமை என் மனதில், சில வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை, தென்கலைச் சண்டைகள் நடப்பதையும், வீடு வெள்ளை பூசுதல் விஷயமான ஓரபிப்பிராய பேதத்தைக் கொண்டு தமக்குள்ளே சண்டை செய்து பிரியும் மதி கெட்ட ஸ்திரீ புருஷரின் நடையையும் நினைப்புறுத்துகிறது.

இந்தக் குணத்தை நம்மவர் அறவே விட்டொழி தாலன்றித் தற்காலம் இந்தியா இருக்கும் நிலையில், நாம் விடுதலைக்காகப் பொது முயற்சி செய்வதில் பல இடுக்கண்கள் விளையக் கூடும். எடுத்ததற் கெல்லாம் ஜாதிப்ரஷ்டம் செய்யத் தீர்மானிக்கும் குணத்தை நாம் ராஜாங்க விஷயங்களில் செலுத்தினால், பெருங் கேடுகள் வந்து குறுக்கிடும், “உன்வழி உனக்கு; என்வழி எனக்கு; இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷ்யத்தில் நீயும் நானும் ஒன்று பட்டிருக்கிறோம், எனவே நாம் பரஸ்பரம் இயன்ற வரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தேவெறுமே இருப்போம், ஆனால் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்” என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்,

இவ்வித உணர்ச்சி நம்மவருள் பலப்பட்டு சுதேசமித்திரன் முதலிய மேன்மையார்ந்த கருவிகளைப் போற்றிக் கையாண்டு, நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலை யேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்- நல்ல நாள்-எப்போது வரப்போகிற தென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s