காந்தியின் “ஆன்மீகம்”

அவரவர் உணவுக்கு அவரவரே வேலை செய்ய வேண்டும் என்றே கடவுள் மானிடரை படைத்திருக்கிறார்.வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர் திருடர். பசி என்ற ஒரே வாதம் தான் இந்தியாவை, நூற்கும் இராட்டைக்கு ஓடும்படி செய்திருக்கிறது. நூற்கும் தொழில் மற்றெல்லாத் தொழில்களிலும் மிகவும் மேன்மையானது. ஏனெனில், அன்புத் தொழில் இது. அன்பே சுயராஜ்யமாகும், அவசியமான உடலுழைப்பு வேலை, மனதை அடக்கும் என்றால் நூற்கும் இராட்டை மனதை அடக்கும். அநேகமாக சாகும் நிலையில் இருந்து வருபவர்களான கோடிக்கணக்கான மக்களைக் குறித்தே நாம் சிந்தித்தாக வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நம் நாட்டுப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நூற்கும் இராட்டையே புத்துயிர் அளித்து நீர் வார்ப்பதாகும். “சாப்பாட்டுக்காக வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்க நான் ஏன் நூற்க வேண்டும் ?” என்ற கேள்வி எழலாம். “என்னுடையது அல்லாததை நான் தின்று கொண்டிருப்பதனால் தான் என்பதே” அக்கேள்விக்கான பதில்.

அந்நியத்துணியை எரித்துவிடவேண்டும் என்று நான் கூறும்பொழுது ஒவ்வொருவருவம் அவர்களது அந்நியத்துணியை எரித்துவிட வேண்டும் என்றுதான் கோருகிறேன். என் அந்நியத்துணியை நான் எரிக்கும் போது என் அவமானத்தையே நான் எரிக்கிறேன். நிர்வாணமாக இருப்பவர்களுக்கு வேண்டியது துணியல்ல. மாறாக அவர்களுக்கு இருக்கும் ஒரே தேவை பிழைப்புக்கு வேலை. அதைக் கொடுக்காமல் அவர்களுக்குத் துணி கொடுத்து அவர்களை அவமதிக்க நான் மறுத்துவிடுவேன். அவர்களுக்கு காப்பாளராக இருக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன். ஆனால், அவர்களை ஏழ்மைப்படுத்துவதற்கு நானும் உதவியாக இருந்திருக்கிறேன் என்பதை அறிந்ததால் அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பேன். என் சாப்பாட்டில் மிஞ்சியதையோ, வேண்டாமென்று எறிந்துவிடும் துணியையோ அவர்களுக்குக் கொடுக்கமாட்டேன். நான் உண்ண எடுத்து வைத்துள்ள நல்ல சாப்பாட்டையும், உடுத்த எடுத்த வைத்திருக்கும் நல்ல துணியையும் அவர்களுக்கு அளித்து வேலையிலும் அவர்களுடன் பங்கு கொள்வேன். – யங் இந்தியா 13/10/1921

பசி
ஏழைகளின் கந்தல் துணியில் முடிபோட்டு வைத்திருந்த செப்புக் காசுகளை,களிம்பேறிய தம்படிகளை நான் அவர்களிடம் இந்தக் கையால் வாங்கியிருக்கிறேன். அவர்களிடம் நான் புது நாகரிகங்களைப் பற்றியும் முன்னேற்றங்களைப் பற்றியும் பேசவா ? அவர்களிடம் போய் வேதாந்தம் பேசுவது அவர்களைப் புண்படுத்துவது ஆகும். பேசினால் என்னையும் உங்களையும் கொடிய அரக்கர்களாகப் பாவிப்பார்கள். அவர்களறிந்த தெய்வம் கருணையற்ற கொடுங்கோல் தெய்வமெல்லவா ?

கோபமும்,பயங்கரமும் நிறைந்த தெய்வந்தான் அவர்கள் கண்டது. இவர்களிடம் நான் ஆண்டவனைப் பற்றி என்ன பேச முடியும் ? பேச எனக்கு தைரியமில்லை. இந்த ஏழை மக்களின் ஒளியற்ற கண்களைப் பார்க்கும் போது அவர்களிடம் ஆண்டவனைப் பற்றிப் பேச எனக்கு எப்படி மனசு வரும் ? ரொட்டியே அவர்களுக்கு தெய்வம். ஊமைப் பிராணிகளிடம் நான் சாஸ்திரம் பேசுவதைப் போலவே ஆகும். அவர்களுக்குக் கூலிதரும் வேலைக் காட்டிய பிறகே நான் அவர்களிடம் ஆண்டவனைப் பற்றி பேச முடியும். இங்கே நாம் உட்காந்து நன்றாக காலைப் பலகாரம் முடித்து மத்தியான சாப்பாடு என்னவாக இருக்கலாம் என்று யோசனை செய்யும் நிலையில் நாம் தெய்வ ஆராய்ச்சி செய்யமுடியும். ஒரு வேளை ரொட்டிக்குத் திண்டாடும் நிலையில் வாழும் மக்களிடம் நான் தெய்வ ஆராய்ச்சி செய்ய முடியுமா ? அவர்களுக்கு கடவுளின் அவதாரமே ரொட்டியும் வெண்ணெய்யும் தான். ஏழைக் குடியாவனர்கள் நிலத்தை உழுது ரொட்டி சம்பாதித்துக் கொள்வார்கள். அந்த ரொட்டிக்கு வெண்ணெய் கிடைக்க ராட்டையைக் கொடுத்தேன். இன்று நான் முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்டு பசியில் தவிக்கும் அந்த ஏழை மக்களின் தனிப் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன் – யங் இந்தியா 15-10-1931(லண்டன்)

“நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்” (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: “CWMG” நூல் 89, பக்கம் 125).

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s