மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்

காந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968)

தமிழில் : காஞ்சி சு.சரவணன்

கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில் மிக குறிப்பாக,  அவரது அடிப்படை கொள்கைகளுள் ஒன்றான தீண்டாமைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் தூதாபாய் குடும்பத்தாரையும் ஆசிரம வாசிகளாக தங்களோடு சேர்ந்து வாழ அழைத்தார்.

ஆசிரியர் தூதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் அவரது ஒன்றரை வயது மகள் லட்சுமி ஆகியோரை ஆசிரமத்தில் சேர்ப்பது அன்றைய நாளில் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மேலும் ”இச்சம்பவம் ஆசிரமத்திற்கு உதவி புரிந்து வந்த நண்பர்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது” என குறிப்பிடும் காந்தியடிகள், இதற்கென ஒரு அத்தியாயத்தையே தன்னுடைய சுய சரிதை நூலில் ஒதுக்கியுள்ளார். தூதாபாயின் மகள் லட்சுமியை, காந்தி தன்னுடைய மகளாகவே கருதி வளர்த்தார். தன்னுடைய சுயசரிதையில் இது குறித்து குறிப்பிட்டிருந்தாலும்  லட்சுமி அவர்களைப் பற்றிய வாழ்க்கை அதிகம் அறியப்படாமலே உள்ளது.

தற்போது (20.10.1968), அஹமதாபாத் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் மிக எளிய இரண்டு அறை கொண்ட ஒரு சிறிய இல்லத்தில் வாழ்ந்து வரும் திருமதி லட்சுமிபென்னுக்கு 54 வயதாகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் தன்னுடைய ஒன்றரை வயதில், சிறுமியாக காந்தியடிகளின் கோச்ரப் ஆசிரமத்திற்குள் நுழைந்த அவரிடம் காந்தி பற்றி பேசும் போது அவரது முதுமை தோய்ந்த முகத்தில் குதூகலம் கலந்த ஏக்கம் தோன்றியது.

காந்தியடிகளுடனான உங்களுடைய பெற்றோரின் முதல் சந்திப்பு உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அப்பொழுது நான் ஒரு சிறு பெண். அந்த முதல் சந்திப்பு குறித்து என் தந்தை பின்னர் எனக்கு கூறியுள்ளார். என் தந்தை பம்பாய் நகரத்தில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். தக்கர் பாபா (பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றியவர்) அவர்கள் தான் எங்களை காந்திஜியிடம் அனுப்பினார். நாங்கள் சில நாட்கள் கோச்ரப் ஆசிரமத்தில் தங்கினோம். காந்தியடிகள் சில கண்டிப்பான விதிமுறைகளை ஆசிரமத்தில் ஏற்படுத்தியிருந்தார். அவர், உணவு தானியங்களை அரைப்பது,  கிணற்றில் இருந்து நீர் இரைத்துக் கொண்டு வருவது போன்ற பணிகளை தானே செய்வார். சுமார் 50 பேர் ஆசிரம வாசிகளாக இருந்தனர். ஆசிரமத்தின் சமையல் பணிகளில் காந்தி ஈடுபட்டார். ஆசிரம சமையலில், பருப்பு மற்றும் காய்கறி போன்ற உணவு வகைகளில் காந்தி உப்பு சேர்க்க மாட்டார்.  நாங்கள் சென்ற அன்று அவருடன் சேர்ந்து சாப்பிட எங்களையும் அவர் அழைத்ததாக என் தந்தை கூறினார். அனைவரும் உணவருந்திய பின் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு எடுத்துச் செல்லுமாறு இராமா என்பவரை காந்தி அழைத்தார். அவர் ஆசிரமத்து பணியாள் என்று என் தந்தை கருதியிருக்கிறார். பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடத்திற்கு அவருடன் சென்ற என் தந்தையாருக்கு, சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு எடுத்து வந்த பணியை செய்த அந்த நபர் வேறு யாருமல்ல காந்தியடிகளின் மகன் இராமதாஸ் என்ற தகவல் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது.

காந்தியடிகளின் ஆசிரமத்தில் உங்கள் குடும்பத்தார் அனுமதிக்கப்பட்டதற்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்ததா?

ஒரு சில ஆசிரம வாசிகளுக்கு பிடிக்கவில்லை. வைதீகமான குடும்பப் பிண்ணனி கொண்ட கஸ்தூரிபா மற்றும் சில பெண்களுக்கு எங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனால் காந்தி உறுதியாக இருந்தார். ஆசிரமத்தையே சமூக பகிஷ்காரம் செய்யப்போவதாக வதந்திகள் பரவியது. ஒரு நாள் பிரச்சினை முற்றியது, ஆசிரமத்திற்கு நிதியுதவி புரிந்தவர்கள் எங்களின் வருகையால் அதனை நிறுத்திக் கொண்டனர். ஆசிரமத்தை இதற்கு மேல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இத்தகைய விளைவுகளால் காந்தியடிகள் எவ்வித பதற்றமும் அடையாமல், ஆசிரமத்தை மூடிவிட்டு ஹரிஜன்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கே அனைவரும் சென்று விடலாம் என்று முடிவெடுத்தார். எனினும், இப்பிரச்சினை மிக குறுகிய காலத்திற்கே நீடித்தது. ஒரு நாள், பகல் பொழுதில், ஒரு செல்வந்தர் ஆசிரமத்திற்கு வந்தார், தன்னுடைய பெயரை கூட கூறாமல் போதுமான அளவிற்கு நிதியை நன்கொடையாக ஆசிரமத்திற்கு அளித்தார். ஆசிரமம் பாதுகாக்கப்பட்டது.

அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது, ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தீர்களா?

நான் அப்போழுது சிறு குழந்தை என ஏற்கனவே கூறியிருந்தேன் அல்லவா, இன்னும் சிறிது வளர்ந்த பிறகு என்னை தன்னுடைய மகளாக வளர்க்க விரும்புவதாக காந்தி என் பெற்றோரிடம் கூறினார். நாங்கள் மீண்டும் பம்பாய்க்கு திரும்பிவிட்டோம். என் தாய் என்னை பிரிவதற்கு தயங்கினார். ஆனால் என் தந்தை அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார். அவர் என் தாயிடம் “தீண்டாமையின் கொடுமையிலிருந்து நமது மகள் இலட்சுமியை விடுவிக்க அவளை காந்தியின் வளர்ப்பு மகளாக வளர விடவேண்டும்” என்று கூறினார்.

இது உங்கள் தந்தை ஒரு முற்போக்கு சிந்தனையுடையவர் என்று காட்டுகிறது. பம்பாய் நகரத்திற்கு அவர் எப்படி வந்தார்?

என் தந்தை செளராஷ்டிராவில் உள்ள அம்ரேலி நகரிலிருந்து வந்தவர். அம்ரேலி நகரம் பரோடா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. என் தந்தை, படித்தவர், அவருடைய காலத்தில் அவர் முற்போக்கானவராகவே இருந்தார். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் என் பெற்றோரின் திருமணம் அன்றைய பரோடா சமஸ்தானத்தின் மதிப்பு மிகு அரசர் காலஞ்சென்ற சாயாஜிராம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

உங்கள் குடும்பம், கோச்ரப் ஆசிரமத்திலிருது மீண்டும் பம்பாய்க்கு கி.பி. 1915 – இல் வந்த பிறகு என்ன ஆயிற்று?

கி.பி.1920-21-ஆம் ஆண்டு வாக்கில் காந்தி பம்பாய்க்கு வருகை புரிந்தார். அவ்வருகையின் போது என் பெற்றோரை சந்தித்து இம்முறை என்னை தன்னோடு சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லி என்னை அவருடன் அழைத்துச் சென்றார். அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும். ஆசிரமத்திற்கு நான் புதிது என்பதால் அங்கிருப்பவர்களைப் பற்றி எனக்கு எதுவும் அப்பொழுது தெரியாது. ஆனால், காந்தியடிகளின் மகன் தேவதாஸ் என்னை கவனித்துக் கொண்டார். கஸ்தூரிபாவும் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். என்னை குளிப்பாட்டுவது, என் சிகையை அலங்காரம் செய்வது போன்றவற்றை அவர் செய்தார்.நான் காந்தியின் ஹரிஜன குழந்தையானேன்.

பல வருடங்களுக்கு அங்கு வசித்ததைப் பற்றியும் பின்னர் அங்கிருந்து விடைபெற்ற அனுபவத்தையும் கூறுங்கள்:

14 ஆண்டுகள் ஆசிரமத்தில் வாழ்ந்தேன். பர்தோலியில் உள்ள ஸ்வராஜ்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் ஒரு தென்னிந்திய பிராமணர், அவரது பெயர் மருலய்யா. குஜராத்தில் அனைவரும் அவரை மாருதிதாஸ் என அழைத்தனர். என் திருமண சமயத்தில் காந்தியடிகள் சிறையில் இருந்தார். ஆசிரமவாசிகளுள் ஒருவரும் பாரம்பரிய இசைக் கலைஞருமான
திரு நாராயண்ராவ் கரே எங்களது திருமணத்தை நடத்தி வைத்தார். ஆசிரமத்திற்கு அருகில் உள்ள லால் பங்களாவில் எங்கள் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஏனெனில், ஆசிரமத்தில் திருமண நிகழ்ச்சி எதுவும் நடைபெறக் கூடாது மற்றும் ஆசிரமத்தை சேர்ந்த திருமணமாகாத இளம் பெண்கள் யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் காந்தியடிகளால் ஆசிரமத்தில் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது.

நீங்கள் ஒரு ஹரிஜன், உங்கள் கணவரோ ஒரு பிராமணர், இது உங்களிடையே எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லையா?

இல்லை, எங்களிடையே இதனால் எந்த பிரச்சினையையும் எழுந்ததில்லை. சமூகத்திலிருந்தும் எந்த பிரச்சினையும் எழவில்லை. பர்தோலி ஆசிரமத்தில் அவருடன் சேர்ந்து வாழ சென்றேன். பிறகு நாங்கள் அஹமதாபாத்தில் வசித்தோம். 1946 ஆம் ஆண்டு எனது கணவர் மரணமடைந்தார். அதன் பிறகு, அஹமதாபாத்தில் உள்ள ஜவுளி ஆலையில் செவிலியர் பணிக்கு சேர்ந்து சமீப காலம் வரை அப்பணியில் இருந்தேன். மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்பட்டு ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தினால் பணியை தொடர் முடியாமல் போனது. எனது மகன் ஹரிபாய் காதி வாரிய அலுவலகத்தில் சுருக்கெழுத்தராக பணி புரிகிறான்.

உங்கள் திருமணத்திற்குப் பிறகு, உங்களைப் பற்றி காந்தியடிகள் எத்தகைய மனப்பான்மையை கொண்டிருந்தார்?

ஓ!!, அப்பொழுதும் அவர் என்னுடைய அன்பிற்குரிய தந்தையாகவே இருந்தார். மற்ற பெற்றோர்களைப் போலவே, வருடந்தோரும் தங்களோடு வந்து தங்குமாறு காந்தியும் கஸ்தூரிபாவும் எனக்கு கடிதம் எழுதுவர். நானும் அவர்களோடு சென்று தங்குவேன். பாபு (காந்தி) என் மகனோடு  நீண்ட நேரம் விளையாடுவார். மீண்டும் என் கணவரின் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது மற்ற அன்னையரைப் போலவே, கஸ்தூரிபாவும் சமூக வழக்கப்படி நிறைய பொருட்களை ஒரு மகளுக்கு செய்யும் கடமையாக அன்போடு எனக்கு கொடுத்தனுப்புவார். அதை காந்தியும் வலுயுறுத்துவார். அவ்வப்போது, தவறாமல் காந்திக்கு நான் கடிதம் எழுத வேண்டும், அவ்வாறு கடிதம் போட 8 லிருந்து 10 நாட்களுக்கு மேல் கடந்து விட்டால், ”உன்னுடைய ஆரோக்கியத்தை உன் தந்தைக்கு தெரிவித்து ஒரு கடிதம் எழுத கூட நேரம் இல்லாமல் போய்விட்டதோ” என்று அவர் என்னிடம் கோபித்துக் கொள்வார்.

காந்தியடிகள் மரணித்த போது என்ன மாதிரியான உணர்வை வெளிப்படுத்தினீர்கள்?

அன்று என்னுடைய பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன், அபோதுதான் ஒருவர் திடீரென்று என்னிடம் வந்து, “பாபு (காந்தி) மறைந்து விட்டார்” என்று தெரிவித்தார். நான் அதை நம்பவில்லை. இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் அந்த கெட்ட செய்தியை உறுதி செய்தார். நான் திகைப்படைந்தேன், உடனே விமானம் மூலம் டெல்லி செல்ல துடித்தேன், ஆனால் அதற்கு வசதியில்லை. அடுத்த மூன்று நாட்களில் ஹிஸ்டீரியா நோயாளி போல் ஆனேன். ஒரு நாளைக்கு அதிக பட்சம் 100 முறையாவது மூர்ச்சை எனக்கு ஏற்பட்டது. பின்னர், நான்காவது நாள் டெல்லி மற்றும் அலகாபாத்திற்கு அவரது அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தேன்.

தகவல் கொடுத்து உதவியவர் திரு அ.அண்ணாமலை,இயக்குநர் , தில்லி தேசிய காந்தி அருங்காட்சியகம்.

Related posts :

காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)

காந்தியின் ஆசிரமத்தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம்

 

பின்னூட்டமொன்றை இடுக