காந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்

அவந்திகா கோகலே எழுதிய காந்தியடிகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1918 மார்ச்சில் திலகர் எழுதிய முன்னுரை
 
தமிழாக்கம் : வாத்தியார் மோகன்
 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம். கடைபிடிக்க ஏற்றது என்பதே உண்மை. இதற்கு எதிரான வாதங்கள், காரணங்கள் சிரமப்பட்டு கண்டுபிடித்துக் கொண்டு இருப்பது தேவை இல்லாத ஒரு வேலை என எனக்குத் தோன்றுகிறது.

காந்திஜியைப் போன்ற பாரிஸ்ட்டர்கள் பலர் இருக்கிறார்கள். அவருடைய தந்தை இந்திய மாநிலம் ஒன்றின் அமைச்சராக இருந்தார். பலருக்கும் காந்திஜியைப் போன்ற பெற்றோர்கள் இருக்கின்றனர். அவரைப் போலவே எளிமையானவர்களாகவும், நேர்மையாளராகவும் பலர் இருக்கிறார்கள்.

மேற்கத்திய கலைகள், அறிவியல் இவற்றில், பல இந்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள். பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டவுடனேயே அவைகளில் பயின்று பல இந்தியர்கள் தற்போது சிறந்து விளங்குகிறார்கள். நம்மில் அறிவுடையவர்களில் பலர் 100 அல்லது 150 வருடங்களில் உலக நாடுகளின் பலவற்றின் வரலாறுகள், புவியியல்கள், அறிவியல் சாதனைகள் என்று எல்லாவற்றிலும் கைதேர்ந்தவர்களாகி விட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்ற நம்மவர் பலர் மேற்கத்திய சந்தைகள் பற்றியும் அறிவார்ந்த, மற்றும் வாத விவாதங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர்களாகி விட்டனர். மேற்கத்திய சமூக பழக்கங்கள், அவர்களின் சம்பிரதாயங்கள், பண்புகள் என இவைகளிலும் ஊறத் தொடங்கி விட்டனர். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களாகிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்தக் குணத்தின் சிறப்பே எந்தத் துறையில் இருக்கிறார்களோ அதில் தலைவராக இருப்பார்கள் என்பதுவே. தான் இருக்கும் சூழல் மீது ஒரு தாக்கம் ஏற்படுத்தியே தீருவார்கள். இந்த உயர்ந்த குணத்தால் இவரை பின்பற்றும் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி விடுவார்கள். மகாத்மா காந்தியின் மிக உயர்ந்த குணங்களில் இதுதான் முதன்மையானது.

சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டே ஆகவேண்டும். நம் நாட்டின் நிலை அப்போது தான் உயரும். இப்படி நடந்தால்தான் அரசியலில் சீர்த்திருத்தங்கள் வரும் என்று சில இந்தியர்கள் கருதுவதாகத் தெரிகிறது. காந்திஜியின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும், இந்த கருத்து தவறானது என்று புரிந்து விடும். எல்லாவிதமான சீர்திருத்தங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும், நாட்டின் தலைவரிடம் ஒரு ஆற்றல் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிறிது ஆற்றலாவது இருந்தால் மட்டுமே இவைகளை செயலில் காட்ட முடியும்.

இந்த ஆற்றல் இல்லாவிட்டால் எல்லா ஞானங்களும், அறிவும் பயன்படாமல் போகும். எனவே நம் எல்லா முயற்சிகளும் இந்த அடிப்படை ஆற்றலை ஏற்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த உணர்வு காந்தியிடம் ஏற்பட்டிருக்கா விட்டால் அரசியல் சீர்திருத்தம் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டு செயல்பட்டிருக்கவே மாட்டார். தென்னாப்பிரிக்காவில் வாழும் நம் இந்தியர்களுக்காக அவர் செய்தது சமூகப் பணி மட்டுமல்ல. அந்தப் பணி தென்னாப்பிரிக்க அரசியல் நிர்வாகத்திலும் சீர்திருத்தம் செய்வது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

உண்மையிலேயே தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் அடக்குமுறை குணம் தான் காந்திஜியை சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கத் தூண்டியது. அவர் அங்குள்ள இந்தியர்களையும், எதிர்ப்பை தெரிவிக்க வைத்தார்.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை காந்திஜி உணர்ந்திருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடிமக்கள் இந்தியர்கள் என்றால், வெள்ளை இனத்தவர்களுக்கு உண்டான எல்லா உரிமைகளும் நமக்கும் உண்டு. இதுதான் உண்மை.

ஆனால் நடப்பது என்ன? வெள்ளை இன மக்கள் மற்ற இனத்தவர்கள் தங்களுடன் இருக்க காரணம், ஊழியம் செய்யவே என நினைக்கிறார்கள். தங்களின் மற்ற சாம்ராஜ்ய குடிமக்களான இந்தியர்களுக்கு சமஉரிமை தர விருப்பமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள் உடனே, வெள்ளையர்கள் மற்ற இனத்தவர்கள் உடன் இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் என்று முடிவு கட்டிவிடக் கூடாது.

அவர்களுக்கு மற்ற இனத்தவர்கள் ரொம்பவே தேவைப்படுகிறார்கள். மிக அதிக அளவில் செல்வம் பூமிக்கடியில் இருக்கிறது. அதிக நிலம் சாகுபடி செய்யாமலே கிடக்கிறது. ஆனால் வெள்ளையரிடம் போதிய மனித சக்தி இல்லை. இந்த இயற்கைச் செல்வத்தை பெற்று பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இதுவரை அவர்களுடன் வந்து தங்கிய அனைத்து வெள்ளையரும் இரண்டு கைகளுக்கு நான்கு கைகளால் கூட வேலை செய்தாலும், நூற்றுக்கணக்கான மனிதர்கள் செய்யும் வேலையை செய்யக்கூடிய ஆற்றல் படைத்த இயந்திரங்களை பயன்படுத்தினாலும், இந்த முயற்சிகளை விடவும், பூமிக்கு அடியில் தென்னாப்பிரிக்காவிலுள்ள கனிம வளங்களை முழுவதுமாகவும், சரியாகவும் பயன்படுத்த அதிக எண்ணிக்கையில் மனிதர்களின் உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்துள்ளார்கள். முன்பு நீக்ரோக்களை எப்படி வெள்ளையர்கள் நடத்தினார்களோ அதே போல் இந்தியர்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஊழியர்களாக, சேவகர்களாகப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். மிருகங்களைப் போலவும் தங்கள் மீதான ஒரு சுமை போலவும் நடத்துகிறார்கள். இந்தியர்களின் உழைப்பை சுரண்டி தங்களை பணக்காரராக்கிக் கொள்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள ஆட்சியாளர்கள் யார்? வெள்ளையர்கள்தான். எனவே இருவருமே தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பரிதாப நிலை பற்றிக் கவலைபடுவதே இல்லை. பல வருடங்களாக இந்தச் சுரண்டல் நடந்தது. காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும் வரை சிறிது அளவுகூட இந்தியர்கள் நிலையில் முன்னேற்றம் இல்லை. தங்கள் இழிநிலையை இந்தியர்கள் உணர்ந்தார்கள். ஆனால் என்ன பயன்? ஒன்றுமே செய்ய இயலாதவராகவே இருந்தனர்.

காந்திஜி தன் தனிமனித ஒழுக்க வாழ்க்கை மூலமாக எப்படி எதிர்ப்பதைச் சொல்லிக் கொடுத்தார். அவர் எப்படி இதனை சாதித்தார் என்பது மிக விளக்கமாக இப்புத்தகத்தில் உள்ளது. மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து மீண்டுவர காந்தி அவர்களுக்கு எவ்வாறு உதவினார் என்பதை மிக நுணுக்கமாகவே ஆய்வு செய்வது தேவையாகிறது. அநீதியான ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வது கிளர்ச்சி ஏற்படுத்துவதாகாது.

இந்த முயற்சியை, கிளர்ச்சி ஏற்படுத்துவதற்கு முயற்சி என்று (குற்றம்) சொல்லும் அரசிற்கு நீதி பற்றி எந்த அக்கறையும் இல்லை என்றே பொருள். ஒழுக்கங்கள் மீதும் அநீதிக்கு எதிரான குரல்கள் மீதும் அனைத்து மக்களையும் சமமாக கருதுவது பற்றியும் அக்கறை இல்லை என்றே பொருள்.

மக்களின் நலன் தான் ஒரு அரசாங்கத்தின் உற்ற துணை, உண்மையான பலம், இதுவேதான் நல்ல ஒரு அரசின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்றே நாம் முடிவாக இருக்கிறோம். மக்களின் நலனே இலக்காக, எல்லா அரசிற்கும் அது எந்த இடத்திலிருந்தாலும், இருக்க வேண்டும். இந்தக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், அக்கொள்கையின் நீட்சியாகவே அநீதியை எதிர்த்தல் என்பதாகி விடும். இதுபோன்ற எதிர்ப்பு கண்டிப்பாக ஒரு நீதியோடு இயங்கும் அரசிற்கு அவசியமாகும். கடமைகளைச் செய்யப் பயன்படும்.

ஆனாலும் பல வருடங்களாக காரணமில்லாத வெறுப்பின் பாதிப்பு, சுயநலம் பிடித்த சில மனிதர்களின் செயல்களில் வெளிப்படும். அந்த சில சுயநல மனிதர்கள், இந்த சிறப்பான கொள்கைகள் பற்றி புரிந்து கொள்வதில்லை. துரதிருஷ்டவசமாக இவர்கள் அநீதிக்கும், அடக்கு முறைக்கும் காரணமாகி விடுகிறார்கள்.

இதுபோன்ற குழுக்களை ஒரு அரசு தண்டிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சுயநலமிக்க, பொய் கூறித் திரியும் மக்களின் உதவியும் தேவைப்படுகிறது ஒரு அரசிற்கு. காலம் காலமாக நடைமுறை யிலுள்ள சில செயல்கள் செய்வதற்கு இந்த மனிதர்கள் பயன்படுகிறார்கள். எனவே ஒரு அரசால், இவர்களை தண்டிக்க முடிவதில்லை. தொடர்ந்து ஏற்படும் பாதிப்பினால், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலோ, தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்தபடி இருந்தாலோ இப்பிரச்னை பற்றி கவனம் செலுத்துகிறார்கள். தூங்கியபடியே இருக்கும் ஒரு நாயை இடறிவிடுவதை எந்த அரசும் விரும்புவது இல்லை. தினமும் ஒரே விதமான செயல்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாதவரை எந்த கவலையும் கொள்ளாது ஒரு அரசு. மனித இயற்கை எப்போதும், நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கத்தின்படியே செல்வதை தான் விரும்பும். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் வழக்கம் போலத்தான்.

எந்த ஒரு நாட்டின் தலைவனுமே தேவைப்பட்டால் ஒழிய எந்த மாற்றமும் ஏற்படுத்தமாட்டார். அந்த நேரத்தில் நிலவி வரும் ஒரு அமைப்பினால் தீமை ஏற்படுகிறது என்பது உறுதியானால் அல்லாது, எந்த ஒரு சிறு மாற்றமும் எந்தத் தலைவரும் செய்ய விரும்ப மாட்டார்.

இதுபோன்ற ஒரு சிக்கலான சூழலில், நாட்டுப்பற்று உடையவர்களும், சமுதாய அக்கறை உள்ளவரும், மக்களின் சக்தியை வெளிக்கொணர வேண்டும். வெற்றிகரமான முறையில் போராட வைக்க வேண்டும். தேவையான நியாயமான சீர்த்திருத்தங்கள் ஏற்பட்டே ஆக வேண்டும். இதுபோன்ற ஒன்றைதான் காந்திஜி வெற்றிகரமாக (தென்னாப்பிரிக்காவில்) செய்துள்ளார். எனவேதான் நம்முடைய பாராட்டுதல்களுக்கு ஏற்புடையவராகிறார். நம் மரியாதைக்குரியவ ராகவும் இருக்கிறார்.

காந்திஜியின் (சத்தியாக்கிரக எதிர்ப்பு) சாத்வீக எதிர்ப்பிற்கு பின்னால் உள்ள (அதிசய) சக்தி பற்றி சில வார்த்தைகள் சொல்லி ஆக வேண்டியுள்ளது. ஒரு அரசாங்கம் இயற்றிய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டால் அநீதி என்ற முத்திரை குத்தப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாக நடந்தாலும் அநீதிச்செயல் என்றே கூறப்படுகிறது.

இந்தச் சட்டங்களை இயற்றியவர்கள், அரசு அதிகாரிகள். இச்சட்டங்களின் நோக்கம், அமைதியும், ஒழுங்கு கடைபிடிக்கவே இயற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். நாட்டு நலனுக்காக பாடுபடும் ஒருவருக்கு மிக அதிக அளவிலான துன்பங்களை ஏற்கும் சூழல் ஏற்படுகிறது. தேவையான சமூக சீர்திருத்தம் ஏற்படுத்த விரும்புவரால் இதுபோன்ற துன்பங்களை சந்திக்கவே நேருகிறது. சமூக சீர்திருத்தமே அவரின் அந்நேர ஆசை. எனவே எந்நேரமும் துன்பம் என்பதே அவருக்கு பரிசாக கிடைக்கிறது.

சட்டங்களை மறுப்பது தவறு என்று உணர்கிறார் அவர். அதே நேரம் அவைகளுக்கு உடன்பட்டுப் போவதும் இயலாத ஒன்று என்ற புதிரான ஒரு சூழலுக்கு தள்ளப்படுகிறார். இந்த இக்கட்டான சூழலில் தான் சாத்வீக எதிர்ப்பு என்ற புதியமுறையை காந்தி கண்டுபிடித்தார். இந்த சாத்துவீக எதிர்ப்பு, சாத்வீக தடை, சத்தியாகிரகம் என்ற பெயரில் காந்தியால் அழைக்கப்படும் முறையை கண்டுபிடித்தார். அதோடு நில்லாமல், தன் தவத்தால், அந்த சத்தியாகிரகத்தை புனிதப்படுத்தினர். இதுபோன்ற எதிர்ப்பு முறை எல்லா காலத்திலும் செயல்படுத்த முடியுமா எனக் கூற முடியாது. நியாயமான முறையாகத் தோன்றினாலும் எல்லா இடத்திலும் சத்தியாகிரகம் செயல்படுத்த முடியுமா சந்தேகம்தான். ஆனாலும் இந்த முறைக்கு மிக அதிக அளவிலான களங்கள் உண்டு என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஒரு சட்டத்தை மறுப்பதால் ஏற்படும் தண்டனைகள் என்று பல உண்டு எந்நேரமும், ஆனாலும் அந்தச் சட்டமே அநீதியான ஒன்றாக இருந்துவிட்டால், அதுவும் அரசு நிர்வாகத்தால் செயல்படுத்தியே ஆகவேண்டிய சட்டங்களை எப்படி எதிர்ப்பது? இச்சூழலில்தான் நம்முடைய சத்தியம், நியாயம், தர்மம் இவைகளின் மீதான நம்பிக்கையை பரிசோதிக்கும் நேரம் ஏற்படுகிறது.

அநியாயமான சட்டங்களை எதிர்க்கும்போது ஏற்படும் சூழல் இது. சத்தியம், நியாயம், இரண்டையும் கைகொண்டவர்கள் இதுபோன்ற அநியாயமான சட்டங்களை எதிர்ப்பதை ஒரு தலையாய கடமையாகவே கருதுகிறார்கள். ஒரு ஆன்மிகக் கடமையாக நினைப்பார்கள்.

ஆனாலும் சத்தியம், நீதி இவைகளின் மீதான நம்பிக்கையும், உறுதியும் இந்த வகை மனிதர்களிடம் உயர்ந்த நிலையில் இருக்கும். இதனால் மற்ற எந்த கருத்துமே பெரிதாகத் தெரியாது. இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இயங்குவார் இவர். தன் கடமையைச் செய்வது ஒன்றுதான் தன் சுதர்மம் என்ற எண்ணம் ஒன்றுதான் இவரை ஆக்கிரமித்தப்படி இருக்க வேண்டும். இதைத்தான் ஒழுக்கத்தின் வீரம், சத்தியமாக இருத்தல், குணநலன்கள் உடையவர் என்றெல்லாம் கருதப்படுவார்.

பிறப்பு அல்லது சமுதாய நிலை என்பதெல்லாம் இந்த நிலையில் இருக்க அவசியமில்லாதவை. மிக உயர்ந்த அறிவாற்றல்கூட இதற்கு தேவைப்படாது. இதுதான் ஆன்மிகச் சக்தி. உபநிடதங்களின் போதனையும் இதுவே. இந்த ஆன்மிகச் சக்தி பயிற்சியால் பெறமுடியாது. உயர்ந்த அறிவாலும் கூட பெற முடியாது. ஆனாலும் கீதையின் கூற்றுபடி “மனஉறுதி உடைய ஒரு மனிதன் தவம் செய்வதால் இந்த ஆன்மிக ஆற்றலை பெறலாம். சிறிது கூட சுயநலமில்லாமல் இருந்தால் போதும், இந்த சக்தி கிடைக்கும்” என்கிறது.

உன்னத மனிதர்களின் வாழ்க்கையும், மாமனிதர்களின் வாழ்வும் நம் குணநலன்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. இயற்கையிலேயே சத்தியத்தின் மீது நாட்டம் உள்ள ஒருவரின் நடவடிக்கைகள், இந்த உன்னத மனிதர்களின் வாழ்க்கைகளை பற்றிய படிப்பினால், மேலும் உறுதி ஆவதை கண்கூடாகப் பார்க்கலாம். மன உறுதி இல்லாத மனிதர்களுக்கும், வல்லமை இல்லா மனிதர்களுக்கும் இம்மனிதர்களின் வாழ்வு ஒரு வலிமையான கருவியாகப் பயன்படும்.

காந்திஜியின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். நான் முழு மனதோடு நம் மக்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஒருமனிதன், தன்னுடைய ஆன்மிக ஆற்றலை வளர்க்கவும், ஒழுக்கத்தின் வலிமையை மேலும் வளர்க்கவேதான் (வாழ்க்கை) காந்தியின் வாழ்க்கையை படிக்க நான் பரிந்துரைக்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s