மதுரை தந்த மாணிக்கம் – III

ஆலயப்பிரவேசம்

ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார்.

மதுரையில் அய்யரைப் போலவே, மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்களும் விளங்கினார். இருவரும் சேர்ந்து என் போன்ற தொண்டர்களுடன் ஹரிஜன சேவையில் முழு மூச்சுடன் இறங்கினர். நாடு விடுதலை அடையும். அது அடைகிறபோது அடையட்டும், அதற்கும் பாடுபடுவோம். ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மில் ஒரு பகுதியினரை நாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோமே, அவர்கள் எப்போது விடுதலை அடைவது? ஆகவே அவர்களின் முன்னேற்றத்துக் காக அதிகம் பாடுபடுவோம் என்பது அவர்களின் கருத்து.

மீனாட்சியம்மன் கோவிலில் ஹரிஜனங்கள் நுழையக்கூடாதென்றும் நாடார்கள் நுழையக் கூடாதென்றும் இருந்தது. மக்களின் எண்ணமும் அப்படி இருந்தது. இந்தச் சட்டத்தையும் உடைக்க வேண்டும். மாசுபடிந்த மக்களின் எண்ணத்தையும் சரிப்படுத்த வேண்டும். இது இலேசான வேலையல்ல. எத்தனையோ காலமாக பிடித்துள்ள பீடை.

இதை அகற்றுவதற்குத் தலைவர்கள் அய்யர் என்.எம்.ஆர். டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகாலா பட்டாபிராமய்யா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை மட்டப்பாரை வெங்கட்ராமய்யர், முதலானோரும் என்போன்ற மாணவர்களும் மதுரை நகரின் வீதிகளிலும் சந்துகளிலும் வீட்டுக்கு வீடாகவும் சென்று தீண்டாமை விலக்கு ஆலயப் பிரவேச அவசியம் பற்றி தீவிரப் பிரச்சாரம் செய்தோம். இப்படி 5 வருடம் பிரச்சாரம் நடந்தது.

இவ்வாறு தீண்டாமை ஒழிப்புக்கும் ஆலயப் பிரவேசத்துக்கும் ஆதரவாகப் பொதுமக்களின் மனதை பக்குவப்படுத்தினார்கள். ஆலயப் பிரவேச மாநாடும் நடத்தினார்கள். இப்படி அய்யர் 1935ஆம் ஆண்டு முதல் அவர் கண்களை மூடிய 1955ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தலைவராக இருந்து சேவை செய்தார்.

மீனாட்சி கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.எஸ்.நாயுடு அவர்களும் அவரது குழுவினரும் கோவில் நுழைவுக்கு ஆதரவு காட்டினர். ராஜாஜியின் மந்திரிசபை, ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டுவர தாமதம் ஏற்பட்டது. இனியும் பொறுப்பதற்கில்லை என்று அய்யர் 1939 ஜூலை 8இல் ஆலயப் பிரவேசம் என அறிவித்தார்.

இந்நிலையில் வைதீகச் சண்டியர்கள் ஒரு நோட்டீஸ் வெளியிட்டனர். அந்த நோட்டீஸ் “மீனாட்சிக் கோவிலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் பார்’ என்று சவால் விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் வைத்திய நாதய்யர் தம் வீட்டிலிருந்து பூஜை சாமான்களைத் தனது காரில் வைத்துக் கொண்டு, கக்கன், மற்றும் பல ஹரிஜனங்கள், ஒரு நாடார், தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளர் எல்.என்.கோபால்சாமி, உசிலம்பட்டி வி.முத்து ஆகியவர்களுடன் மீனாட்சி கோவில் தெற்குக்கோபுர வாசலை அடைந்தார். எதிர்ப்பாளர்களைக் காணவில்லை. தயாராக நின்ற அறங்காவலர் ஆர்.எஸ்.நாயுடு அனைவரையும் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் விபூதிப் பிள்ளையாரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு பொற்றாமரைக் குளத்தில் கைகால் சுத்தம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கர்ப்பக் கிரகத்திற்குச் சென்றனர். பட்டர்கள் பூஜை செய்தனர். ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடந்துவிட்டது என்று அம்மன் சன்னதி வாசலில் வந்து தரையில் படுத்து கும்பிட்டு, பிரகடனம் செய்தனர்.

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் இது. மதுரையயங்கும் ஒரே பரபரப்பு. மகிழ்ச்சி ஆரவாரம் அன்று முழுவதும் பூஜைகள் ஒழுங்காக நடைபெற்றன.

வைதீகக் குடுக்கைகள்

ஆனால் தீண்டாமையை ஆதரிக்கும் சனாதன வைதீகக் குடுக்கைகள் ஆத்திரப்பட்டன. மீனாட்சி கோவில் பட்டர்களிடமிருந்த சாவிகளைப் பிடுங்கிக் கொண்டு கோவில் கதவுகளைப் பூட்டிவிட்டனர்.

இதையறிந்த ஆர்.எஸ்.நாயுடு அவர்கள் பூட்டை உடைத்து கதவைத் திறந்துவிட்டார். ஆனால் வைதீகக் குடுக்கைகள் சும்மா இல்லை. கோவிலில் மீனாட்சியம்மன் இல்லையயன்றும் லா.நடேசய்யரின் வீட்டுக்கு அம்மன் வந்து விட்டதாகவும் கூறி வீட்டில் ஒரு சிலைவைத்து அம்மனுக்கு பூஜை செய்தார்.

சட்டத்தை மீறி ஆலயப்பிரவேசம் செய்ததாக, அய்யர் வகையறா மீது கோர்ட்டில் பிராது தொடுத்தனர். முதன்மந்திரி ராஜாஜி அவர்கள் கவர்னர் மூலம் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கச் செய்து முன்தேதியிட்டு ஆலயப் பிரவேசத்தைச் செல்லுபடி ஆக்கினார்.

மீனாட்சி கோவிலைத் தொடர்ந்து அழகர்கோவில், திருப்பரங்குன்றம், திருமோகூர், பழனி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற கோவில்களும் ஹரிஜனங்களுக்குத் திறந்துவிடப் பட்டன.

மீனாட்சி கோவில் பட்டர்களையும் பூஜை செய்யவிடாமல் வைதீகர்கள் தடுத்துவிட்டதால், அய்யர் பல ஊர்களுக்கும் ஆள் அனுப்பி பணம் செலவழித்து சிவன் கோவில் பட்டர்களை வரவழைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தார்.

இவ்வாறு ஆயிரம் வருட தீய பழக்கம் அடிமாண்டு போகுமாறு ஐயர் செய்தார். இதைப்பற்றி இன்றைய சமுதாயம், குறிப்பாக ஹரிஜன சமுதாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா!

சமூக பகிஷ்காரம் 

ஏ.வி.அய்யர் 1930இல் வேதாரன்யத்தில் தண்டிக்கப்பட்ட போது, அபராதத் தொகையை வசூலிப்பதற்காக அய்யரின் காரை போலீசார் ஏலம் விட்டார்கள் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. என்னே மதுரை மக்களின் தேசபக்தி.

அய்யர் அலிப்புரம் சிறையிலிருந்த போது அவரின் மூத்த குமாரர் சுந்தரராஜன் திடீரென காலமானார். காலமான தகவல் அய்யருக்கு தெரியாது. பலவாரங்கள் கழித்து கேள்விப்பட்டு பரோல் லீவில் வெளியில் வந்து மகனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தார். தன் மகளுக்கும் திருமணத்தை முடித்துவிட்டு பரோல் முடிந்து சிறை சென்றார்.

அய்யரது வயோதிகத் தந்தை மரண முற்றபோது உறவுக்கார அய்யர்கள் கேதம் கேட்கவரவில்லை. பகிஷ்கரித்து விட்டார்கள்.

குடும்பமே சிறைசென்றது

அய்யர் சிறை சென்றார், அய்யரின் தர்ம பத்தினி அகிலாண்டம்மாளும் 2 தடவை சிறை சென்றார். மகன் வை.சங்கரனும் 6 மாதம் அலிப்புரம் சிறையில் இருந்தார். அய்யரின் தம்பி சுப்பிரமணியனும் சிறைசென்றார். அய்யரின் குமஸ்தா சின்னக்கிருஷ்ணனும் சிறைசென்றார். அய்யரின் வீட்டு வேலை கோபாலும் சிறை சென்றார். இது ஒரு தியாகிகளின் குடும்பம். இவர்களுக்கு எத்தனை கும்பிடுபோட்டாலும் போதாது.

ஆக்கப்பணிகள்

கள்ளுக்கடை மறியல், அன்னிய ஜவுளிக்கடை மறியல், கதர்த் தொழில் அபிவிருத்தி, தேசீயக்கல்வி, முதியோர் கல்வி, கிராமக் கைத் தொழில் வளர்ச்சி, ஹரிஜன குழந்தைகள் கல்விகற்க பள்ளிகளும் விடுதிகளும் அமைத்தல், ஹரிஜன சேவை, இந்து முஸ்லீம் ஒற்றுமை தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு ஆகியவை அய்யர் ஆற்றிய அரும்பணிகள் இவற்றை சிறுகச் சிறுகக் கூறினாலும் விரிந்து கொண்டே போகும்.

தமிழ்நாட்டின் விடுதலைப் போரில் மதுரை மாவட்டம் தான் தலைமை தாங்கியது என்றால், அய்யர் அவர்களின் மாசுமருவற்ற தேச சேவை தான் காரணம். தமுக்கு அடிப்பதிலிருந்து தலைமை தாங்கும் வரை தேசத்தலைவர் ஏ.வைத்தியநாதய்யரே செய்தார். அவரது தொண்டர்கள்தான், நாகபுரி கொடிப் போராட்டம், சென்ç ன நீலன்சிலை உடைப்புப் போராட்டம், சென்னை அன்னியத் துணிக்கடை மறியல், வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகம் ஆகியவற்றில் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

மதுரை தூங்குவதில்லை. அய்யர் போன்ற அரும்பெரும் தலைவர்களின் சுயநலமற்ற தொண்டு காரணமாக தேச விடுதலைப் போரும் தொய்வு இல்லாமல் நடந்து கொண்டே யிருந்தது.

அய்யர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கண்ணை மூடினார். மதுரையே கண்ணீர்விட்டு அழுதது. ஒரு மைல் நீள இறுதியாத்திரை மறுநாள் நடந்தது.

வானளாவி நிற்கும் அழகிய மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களைப் போன்று ஏ.வி.அய்யரின் திருநாமம் உலகப் புகழுடன் ஓங்கிநிற்கும்.

– முற்றும்

(மதுரை காந்தி நினைவு நிதி வெளியீடு)

Image Source

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s