மதுரை தந்த மாணிக்கம் – II

ஈ.வெ.ரா. பெரியாரை பாதுகாத்தார்

1946இல் வைகை வடகரையில் திராவிடக் கழக மாநாடு. சில தி.க தொண்டர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று சாமி சிலைகளைப்பற்றி கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். தகவலைக்கேட்ட மதுரை மக்கள் ஆவேசமாக எழுந்து தி.க. தொண்டர்களை மாநாட்டுப் பந்தல்வரை விரட்டிச் சென்றதோடு மாநாட்டுப் பந்தலுக்கும் தீ வைத்து விட்டார்கள். அப்போது ய­னாய் நகரில் தங்கியிருந்த மாநாட்டுத் தலைவரான ஈ.வெ.ரா. பெரியார் அவர்களையும் மக்கள் சூழ்ந்து விட்டார்கள். போலீஸாலும் தடுக்க முடியவில்லை. தகவல் அறிந்த அய்யர், அங்கு விரைந்து சென்று நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியார் அவர்களையும் ஏனைய தி.க தலைவர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார்.

ஏ.வி. அய்யர் சட்டமன்ற உறுப்பினராக (1947-52) இருந்தார். 1947-ல் இரயில்வே ஸ்டிரைக் நடந்தது. அடக்குமுறை கடுமையாக இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு முக்கிய கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவருக்கோ கைது வாரண்ட் போலீஸ் வேட்டை.

பி. ராமமூர்த்தி வைத்தியநாதய்யரை அணுகினார். சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டினார். எதிர்த் தரப்பினராக இருந்தாலும் அய்யர் அதைப் பொருட்படுத்தவில்லை. தனது காருக்கு அடியில் பி.ஆரை படுக்கவைத்துக் கொண்டு சென்னை சென்றார். வழியில் போலீஸார் காரை நிறுத்தி விசாரித்தபோது, அய்யர் நான் எம்.எல்.ஏ. காரில் யாரும் இல்லை. அவசரமாக சென்னை செல்ல வேண்டி யிருக்கிறது. தாமதிக்க நேரமில்லை என்று கூறி சோதனை போட விடாமல் செய்து சென்னை கொண்டு சேர்த்து விட்டார்.

மத மோதல் ஏற்படாமல்

1946இல் பண்டித நேரு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். மதுரையில் ஹர்த்தால், மதுரை தென்பகுதியில் சில கடைகள் திறந்திருந்தன. அதனால் சச்சரவு மூண்டு மதக்கலவரத்துக்கு இட்டுச் சென்றது. மேலமாசி வீதி தெற்கு மாசி வீதியில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் ஆயுதமேந்தி குவிந்தனர். தென்பக்கம் முஸ்லீம்கள் ஆயுதபாணிகளாகக் குவிந்தனர். மோதினால் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்படும்.

அய்யர் ஒடோடிச் சென்றார். இருதரப்புக்கும் இடையில் இருந்த இடைவெளியில் தரையில் கைகூப்பிப் படுத்து சமாதானமாகப் போகும்படி வேண்டினார். இருசாராரும் கலைந்து சென்றனர். மோதல் ஏற்படாமல் தடுத்து விட்டார். கான்பூர் கனேஷ் சங்கர் வித்யார்த்தி காட்டிய வழி இது.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

1930இல் காந்திஜியின் உப்புப் போராட்ட தண்டியாத்திரையைத் தொடர்ந்து சென்னையில் ராஜாஜி தலைமையில் நாகப்பட்டணத்தை யடுத்த வேதாரண்யம் கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பை அள்ளி ராஜாஜியும் என்.எஸ்.வரதாச்சாரியும் மற்றும் உள்ள தொண்டர்களும் கைதானார்கள். அப்போது திருச்சி டி.எஸ்.எஸ். ராஜன் தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், ஒமாந்தூர் ராமசாமி ரெட்டியார் சங்கு சுப்பிரமணியன், ஜி.ராமச்சந்திரன், ருக்குமணி லட்சுமிபதி, மற்றும் ஏராளமானோர் சிறைப்படுத்தப்பட்டனர்.

அய்யர் தலைமையில் மதுரைத் தொண்டர்கள் வேதாரண்யம் சென்றனர். அவர்களுக்கு உணவு அளிக்கக் கூடாது என்று கலெக்டர் உத்தரவு. ஆயினும் மக்கள் பலவழிகளிலும் உணவளித்து உபசரித்தனர். போலீஸ் அடக்கு முறை மிருகத்தனமானது. தடியாலும், புளியவிளாரினாலும் அடிப்பார்கள். சிறையிலும் அடைப்பார்கள். என் அண்ணன் மண்டையன் என்ற கருப்பையாவையும் இவ்வாறு அடிபட்டு கிழிந்த சட்டை வரிவரியாய் முதுகில் காயத்துடன் வீடுவந்து சேர்ந்தார். அய்யரும் அடிபட்டு தரையில் இழுத்துச் செல்லப்பட்டு 6 மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டார். இந்தப் போராட்டத்துக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள் தமது உப்பளத்தை கொடுத்து உதவினார்.

சட்டமறுப்பு

1932 சட்டமறுப்பு போராட்டத்தின் போது ஐயர் திலகர் சதுக்கத்தில் 144 தடை உத்தரவை மீறி, அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசினார். அதனால் ஐயருக்கு 1 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

செய் அல்லது செத்துமடி

1942ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஜப்பானியப்படைகள் இந்தியாவின் எல்லைக்கே வந்து விட்டன. அதன் கூட்டாளியான ஜெர்மன் படைகள் ஈரான், ஈராக் ஆப்கானிஸ்தானத்தின் வழியாக இந்தியாவுக்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தன. இவ்விதம் இந்திய நாட்டைக் கிழக்கிலும் மேற்கிலும் கிடுக்கிப் பிடியில் அமுக்கிடும் ஆபத்து ஏற்பட்டபோது நாட்டை ஆளும் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மறுத்த நிலையில் இனி பொறுப்பதற் கில்லை என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி வெள்ளையரை இந்தியாவை விட்டு வெளியேற்றும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. மகாத்மாஜியோ, இது இறுதிப்போர், சுதந்திரம் எனக்கு நாளைக்கு வேண்டாம், இன்றைக்கே வேண்டும், விடுதலைக்கான போராட்டத்தில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தத்தம் செய்து விட்டேன். இந்தியாவை விட்டு ஆட்சியாளர்களே வெளியேறுக, தேசமக்களே போராட்டத்தில் நாட்டைவிடுதலை செய்க அல்லது செத்து மடிக என்று அறைகூவல் விடுத்தார். தேசம் எரிமலையயன வெடித்தது,

மதுரையில் திலகர் சதுக்கப் பொதுக்கூட்டத்தில் தடை உத்தரவை மீறி “இது இறுதிப்போர், மகாத்மா தலைமையில் மதுரை மக்கள் தம் பாரம்பரியத்துக்கு ஏற்பப் போராட்டத்தில் குதிக்க வேண்டும்” என்று அய்யர் வீரமுழக்கம் செய்தார். அய்யருக்கு 6 மாதத் தண்டனை அலிப்புரம் ஜெயிலில் நானும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். மறுநாள் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பட்டேன்.

மதுரை வீதிகளில் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் போர் மூண்டது. பல இடங்களில் துப்பாக்கிச் சுடு / பலர் மாண்டனர், நூற்றுக்கணக்கானோர் சிறையிலடைக்கப் பட்டனர். ஒரு தலைவரும் வெளியில் இல்லை. அய்யர் அலிப்புரத்திலிருந்து சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனதும் சிறைவாசலிலேயே கைது செய்யப்பட்டு தஞ்சை ஸ்பெ­ல் சப் ஜெயிலில் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப் பட்டார். அப்போது நான் சிறைவாசியாக அங்கு இருந்தேன். 1945இல் தான் விடுதலையானோம்.

…….. தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s