மதுரை தந்த மாணிக்கம் – I

மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர்  —–  ஐ.மாயாண்டி பாரதி (சுதந்திரப் போராட்ட வீரர்)

மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர், இவர் மாசிலா தேசபக்தர் தனது படிப்பு, திறமை, பணம், உழைப்பு ஆகிய யாவற்றையும் தேசவிடுதலைக்கே அர்ப்பணம் செய்தவர். இவரை மதுரை மக்கள் வைத்திய நாதய்யர் என்று அழைப்பது இல்லை. அய்யர் என்றே பெருமையுடன் அழைப்பார்கள்.

அய்யரை எனக்கு 1930 முதல் தெரியும். அவருடைய வீடு மேலச் சந்தைப்பேட்டை தெருவில் நியூ காலேஜ் ஹவுஸ்க்கு கீழ்புரம் உள்ளது. எங்கள் வீடு அதற்கும் கீழ்புரம் மேலமாசி வீதியில் உள்ளது. பக்கத்து தெருதான். அதனால் அடிக்கடி அவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பழகும் வாய்ப்பும் கிடைத்தது. பக்தனாகும் பேறும் கிடைத்தது. அப்போது எனக்கு வயது 13. எனது அண்ணன் மண்டையன் என்ற கருப்பையாவுக்கு வயது 19, நாங்கள் அய்யரின் சீடர்கள். நாங்கள் மட்டுமென்ன? மதுரையே. வைத்தியநாதய்யர் ஒரு சிறந்த வழக்கறிஞர். காங்கிரஸ் தலைவர். காந்தி சீடர். ராஜாஜி பக்தர். அரிசனங்கள் தங்கள் தந்தை எனப்போற்றும் அரும்பெரும் தலைவர். கதர் ஜிப்பா, தார்ப்பாய்ச்சி மடிதார் வேட்டி, ரோஜாப்பூக் கரைபோட்ட மடிப்புத் துண்டு, நெற்றியில் விபூதிப்பட்டை, உச்சிக்குடும்பி, பாமரரும் புரியும் தமிழில் பேச்சு. ஒய்வு கிடைத்த போதெல்லாம் தக்ளி, ராட்டினம் நூற்பார். பொதுக் கூட்டம் நடக்கும் போது கூட தரையில் அமர்ந்து ராட்டினம் நூற்பார். தேசவிடுதலைப் போருக்கு வீட்டுக்கு வீடு சென்று ஆள பிடிப்பார். அய்யர் அழைக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், தெருப் பெரியவர்கள் உடனே அய்யர் வீடுசென்று அய்யர் பேச்சைக் கேட்பார்கள். அவ்வளவு மரியாதை, அதை அவர்கள் பெரும் பெருமையாகவும் கருதினார்கள்.

கோர்ட்டுக்கு போவார். வருவார், அதே வேலையாக இருக்கமாட்டார். பெட்டிப்பணம் வந்தால் அதை பொது வேலைக்கே கொட்டிவிடுவார். அவர் வீடு ஒரு அன்னசத்திரம், முழு நேர தொண்டர்களுக்கு பணம். சிறையில் அடைபட்டிருப்பவர்கள் குடும்பங்களுக்கு உதவி, ராஜாஜி மதுரைக்கு வந்தால், அய்யர் வீட்டில்தான் ஜாகை. ராஜாஜியின் ஊழியர் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ளுவேன். முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வீட்டில் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த ஊழியரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டு மென்பது காந்தியின் கட்டளை. தலைவர்களின் குடும்பத்திற்குள் ஜாதிய அசூசை நீங்குவதற்கு அதுவும் ஒரு வழி என்பது காந்தியின் கருத்து இந்த வகையில் சகல வேலைகளையும் செய்து வந்தார். அய்யரின் துனைவியார் அகிலாண்டம்மாள் சாதிவேற்றுமை பாராட்ட மாட்டார். கக்கன்ஜியைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வந்தார். ஏறக்குறைய அவரது வீடு ஒரு ஹரிஜனவீடு மாதிரியே இருக்கும். ஆண்டாண்டு காலமாக அடர்ந்து கிடக்கும் தீண்டாமை அழுக்கை மனதிலிருந்து பிய்த்து எறிவது சுலபமா? ஆனால் வைத்திய நாதய்யர் வீட்டில் அது சுலபமாக இருந்தது. காந்திஜியின் அருளாசியால் அவரால் வளர்க்கப்பட்ட கக்கன் அவர்கள், பிற் காலத்தில் தமிழ்நாடு காங் கிர ஸ் கமிட்டித்தலைவராகவும், தமிழக அரசில் அமைச்சராகவும் விளங்கினார்.

பிறப்பு வளர்ப்பு

ஏ.வி.அய்யர் அவர்களின் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம். விஷ்ணம் பேட்டை கிராமம். தந்தை அருணாசலம் அய்யர், தாயார் லட்சுமி அம்மாள், இவர்களுக்கு 4 குமாரர்கள், 4 குமாரத்திகள். வைத்தியநாதர் 2வது மகன். தந்தை அருணாசலம் புதுக்கோட்டையில் குடியேறி மகாராஜா பள்ளியில் கணக்கு வாத்தியாராகப் பணியாற்றினார்.

அருணாசலம் அவர்கள் உடல் நலிவுற்றது. குடும்பத்துடன் மதுரைக்கு வந்து குடியேறினார். வைத்திய நாதர் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். எல்லா பாடங்களிலும் முதலாவதாகத் தேறி, எஸ்.எஸ்.எல்.சி.யில் தங்கப்பதக்கம் பெற்றார். அரசின் ஸ்காலர்´ப் கிடைத்தது. அதிலேயே மேற்படிப்பு படித்தார். பிறகு மதுரைக் கல்லூரியில் எஃப்.ஏ வரை படித்தார். பிறகு சென்னை ராஜதானி கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

விபின் சந்திரபாலர்

சென்னை கடற்கரையில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் விபினச் சந்திரபாலர் தேசவிடுதலையின் அவசியம் குறித்து ஆணித்தரமாகவும் ஆவேசமாகவும் பேசினார். விபினச் சந்திரபாலர் லோகமான்ய பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய் ஆகியோர்களின் நண்பர். பாரதி, சிவா, வ.உ.சி. திரு.வி.க. சக்கரைச் செட்டியார், சிங்கார வேலர் ஆகிய மாபெரும் தேசபக்தர்களால் சென்னைப் பொதுக் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டவர். அந்தக் கூட்டத்தில் நமது வைத்திய நாதனும் கலந்துக் கொண்டு பாலரின் வீரஉரை கேட்டு தேச ஆவேசம் பெற்றார்.

வைத்தியநாதனுக்கு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 18. மனைவி அகிலாண்டத்துக்கு வயது 9. வைத்தியநாதருக்கு சுந்தரராஜன், கரன், சதாசிவம் என்ற 3 புத்திரர்களும், சுலோசனா, சாவித்திரி என்ற 2 புத்திரிகளும் பிறந்தனர்.

சி.ஆர்.தாஸ் சந்திப்பு

மதுரையில் வைத்தியநாதர் வக்கீல் தொழில் பார்த்துக்கொண்டிருந்த போது தேசத் தலைவர் சி.ஆர்.தாஸ் மதுரைக்கு வந்தார். அவரிடம் வைத்தியநாதர் ஒரு ஆலோசனை கேட்டார். வக்கீல் தொழிலைக் கைவிட்டு, முழு நேர ஊழியராக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு மகாத்மாகாந்தி அறைகூவல் விடுத்திருப்பதால் அவ்வாறு செய்ய விரும்புவ தாக வைத்தியநாதர் சி.ஆர்.தாஸிடம் கூறினார். அதற்கு தாஸ், நீங்கள் வக்கீல் தொழிலை விட்டு விட்டால், முழு நேர ஊழியராக ஆகலாம். ஆனால் தொழிலையும் கவனித்து, பகுதிநேரம் மட்டும் பொது வேலைக்கு ஒதுக்கினால், நூற்றுக்கணக்கான ஊழியர்களை உங்கள் வருமானத்திலிருந்தே தேவையான உதவிகள் புரிந்து உருவாக்க முடியும்.

சி.ஆர்.தாஸ் அறிவுரைப்படியே அய்யர் தன் கருத்தை மாற்றிக்கொண்டு வக்கீல் தொழிலையும் பொது அரசியலையும் இணைத்து நடத்திவந்தார். இதன் மூலம் மதுரை நகரிலும் மதுரை மாவட்டத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் உருவாவதற்கு வழிகோலினார்.

உபசரிப்பும் உதவிகளும் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மதுரைக்கு வந்தால், வைத்தியநாதய்யர் வீட்டில் தங்கு வார்கள். பாபு ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், வி.ஜே.பட்டேல், கமலாதேவி சட்டோபாத்யாயா, மதன் மோகன் மாளவியா, ஜம்னாலால் பஜாஜ் போன்ற தலைவர்கள் வைத்தியநாதய்யர் வீட்டில் தங்குவார்கள்.

காந்திஜி, ஜவஹர்லால் நேரு முதலான தலைவர்கள் மதுரைக்கு வந்தால் அலைமோதி வருகின்ற ஜனக்கூட்டத்துக்கு அய்யர் வீடு தாங்காது. அதனால் அவர்கள் மதுரைக்கு வெளிப்புறத்தில் முனிச்சாலையில் உள்ள என்.எம்.ஆர். சுப்புராமன் பங்களாவில் தங்குவார்கள்.

ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் மதுரை சிறையிலிருந்து விடுதலையடைந்தபோது அவரை வரவேற்று அழைத்துவர யாருமில்லை. கேள்விப்பட்டு அய்யர் ஒடினார். ஜார்ஜ் ஜோஸப் அவர்களை வரவேற்று, வீட்டிற்கு அழைத்துவந்து கதராடை அளித்து உபசரித்து ஊருக்கு (கேரளத்துக்கு) செல்ல ஏற்பாடுகளும் செய்தார்.

துர்க்காபாய் (பின்னர் துர்க்காபாய் தேஷ்முக்) அவர்கள் மதுரை சிறையிலிருந்து விடுதலையான போது, சிறைவாசலுக்குச் சென்று அய்யர் வரவேற்றார். வீட்டில் உபசரித்து, கதராடைகள் வழங்கி ஊருக்குச் செல்ல உதவிகளையும் செய்தார்.

……….தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s