இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள்

இராஜாஜி அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, எழுத்தாளராக தமிழகத்தில் ஒளிர்ந்தவர். தொரப்பள்ளியில் ஒரு கிராம அதிகாரியின் புதல்வராகப் பிறந்து. படித்து, சேலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக உயர்ந்தவர். தனிப்பட்ட அளவில் உயரிய ஒழுக்கமுடைய எளிய வாழ்வினை இறுதிவரை வாழ்ந்தவர். கூர்த்தமதி கொண்டவர் இராஜாஜி. எனவே புகழை விட கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்தவர். அரசியலில் செக்குலரிசத்திற்கு ஆதரவாக இருந்தவர். எனவே சமத்துவம், சுதந்திரமுடைய ஜனநாயக சமுதாயம் மலர்வதை வாழ்நாள் இறுதிவரை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்.
1919களில் மகாத்மா காந்தியை சென்னையில் சந்தித்ததிலிருந்து அவரின் மனச்சாட்சியின் காவலராக அகில இந்திய அரசியலில் சிறந்தோங்கி வந்தவர். உலக அரங்கில் இடம் பிடித்தவர். இத்தகைய சிறப்பிற்குரிய இராஜாஜி மகாத்மா காந்தியின் சமூக மறுமலர்ச்சிக்கான நிர்மாணத் திட்டங்களை ஏற்று, முதன்மையாகக் கதர் கிராமத் தொழில்கள் மற்றும் அரிசன சேவையில் ஈடுபட்டவர், தனது எழுத்துக்கள் வாயிலாகவும் சீர்திருத்தப் பணிகளை எடுத்துக்காட்டி வந்தவர்.
g9
1900இல் இராஜாஜி 23ஆவது வயதிலே சாதி பேதம் கூடாது என்பதை உணர்ந்தார். பிறப்பினால் இருந்த சமயப் பண்பும், ஆங்கிலப் படிப்பும் மற்றும் மகாத்மா காந்தியின் தொடர்பு காரணமாக அவர் சீர்திருத்தவாதியானார். டாக்டர் சுப்பராயனின் கலப்பு மணத்தை உடனிருந்து நடத்தினார். பல சமபந்தி போஜனங்கள் நடத்தினார். சிதம்பரத்தில் அரிசன சுவாமி திரு. சமஜானந்தருக்கு நந்தனார் பாடசாலை கட்டப் பேருதவி செய்தார். சேலம் நகரசபை உயர்நிலைப் பள்ளி மாணவர் இல்லத்தில் முதல் முதலாக இரு அரிசன மாணவர்களைச் சேர்த்தார். இதனால் ஊரில் பெரிய எதிர்ப்பு உண்டாயிற்று. சாதி இந்து மாணவர்கள் சிலர் இல்லத்திலிருந்து விலகினர். இராஜாஜி மீது நகர சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் வந்தது. கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலோர், பிராமணரல்லாத சாதி இந்துக்கள் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை கவர்னருக்குப் புகார் அனுப்பினர். இராஜாஜி செய்தது மத வி­யத்தில் தலையிடுவது என்று கூறி கவர்னர் தடையுத்தரவு போட்டார். அதன்பின் மக்களிடத்தில் இராஜாஜி தனது சாதி சமரசப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினார்.
இராஜாஜி சேர்மனாக இருந்தபோது கடும் சோதனை நிகழ்ந்தது. கிராமத்தில் தண்ணீர்க் குழாயைச் சரி செய்யும் பொருட்டு அரிசன பிட்டர் ஒருவர் சுகாதார அதிகாரியால் நியமிக்கப்பட்டார். இதனைக் கண்ட கிராம மக்கள் மிக ஆத்திரமுற்றனர். உடனே அந்த அரிசன சிப்பந்தியை மாற்றிவிட்டு ஒரு சாதி இந்துவை நியமிக்கும்படி கேட்டனர். அதன்படி செய்யாவிட்டால் தாங்கள் குழாயில் தண்ணீர் பிடித்துக் குளிக்கவோ, சமையல் செய்து சாப்பிடப் போவதோ இல்லை என்று பிடிவாதமாகப் பேசினார்கள். இராஜாஜி சமாதானம் கூறினார், கேட்கவில்லை. பெண்கள் உண்ணா விரதமிருந்தனர். “அரிசன் என்பதற்காக அவரை மாற்றச் சொல்வது நியாயமல்ல, அப்படிச் சொல்வது அரசையும் என்னையும் சாதி பேதத்தை ஒப்புக்கொள்ள வைப்பதாகும். அதற்கு நான் இணங்க முடியாது. சாதிபேதம் பார்த்தால் சமய ஆச்சாரமாகாது. எனவே உண்ணவிரதத்தை விட்டுவிடுங்கள்” என்று கூறினார். அவருடைய உறுதி இறுதியில் வெற்றி பெற்றது.
இராஜாஜியைச் சாதியை விட்டு விலக்கினார்கள்
இராஜாஜியின் சீர்திருத்த நடவடிக்கைகளை வெறுத்த அவரது உறவினர்கள் அவரை சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். நாவிதரும், சலவைத் தொழிலாளரும் அவருக்கு வேலை செய்யாதபடி தடுக்கப்பட்டனர். அதனால் அவருடைய சமூக சீர்திருத்த ஆர்வம் கூடியது குறையவில்லை. இராஜாஜி தன் சமூகத்தாரின் அறியாமைக்கு வருந்தினார், வெறுக்கவில்லை. தான் செய்வது ‘அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’ என்ற குறள் நீதிக்கு இசைந்ததென்று நம்பினார்.
காந்தியின் புதல்வருக்குத் தன் மகளை மணம் செய்வித்தல்
காந்தியடிகளின் இளைய மகன் திரு.தேவதாஸ் காந்திக்கு தன் இளைய மகள் லெட்மியைத் திருமணம் செய்து தந்தார். தேச பக்தர்கள் எல்லோரும் இதைப் பாராட்டினர். குலம் கோத்திரத்தைப் பாராமலும், பேசும் மொழியைப் பாராமலும் சாதாரண மக்கள் போல் இனத்துக்குள்ளே சம்பந்தம் செய்து மகிழ்ச்சியடைய நினையாமலும் இராஜாஜி உன்னத நோக்கத்துடன் மகளைக் கலப்பு மணம் செய்து தரத் துணிந்தார்.
ஆலயப் பிரவேசத்திற்கு அஸ்திவார மிட்டார்
1918ம் ஆண்டு மதுரையில் இராஜாஜி தலைமையில் மகாநாடு நடைபெற்றது. தலைமை உரையில் நாடார்களுக்கு ஆலயப்பிரவேச உரிமையளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார். இவருடைய பேச்சினால் மதுரை நாடார்கள் சமூகம் மிகவும் உற்சாகமுற்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாடு கூடுவதற்கு விக்டோரியா எட்வர்டு ஹாலும் பிரதிநிதிகள் தங்குவதற்கு இராணி மங்கம்மாள் சத்திரத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாடார் பிரதிநிதிகள் அங்கு போய்த் தங்குவதற்கு மிகவும் தயங்கினார்கள். ஏனெனில் அங்கு தங்க உரிமை இல்லாதிருந்தது. இராஜாஜி மாநாடு கூடும் இரண்டு நாட்களுக்கு அவர்களைச் சத்திரத்தில் மற்றவர்களுடன் தங்கியிருக்கச் செய்துவிட வேண்டும் எனத் தீர்மானித்தார். அதன்படி திரு.கிருஷ்ணய்யங்கார், திரு. நாராயண அய்யர், ஜார்ஜ் ஜோசப், ஆதிசேஷாத்திரி நாயுடு ஆகியவர்களிடத்தில் கருத்தினைக் கூறினர். எப்படியாவது நாடார்களைச் சத்திரத்தில் தங்க வைக்க மதுரைப் பிரதிநிதியை மதுரை ஜில்லா போர்டு அங்கத்தினரை அணுகி எடுத்துரைத்தனர். பின் அனுமதி உடனே கிடைத்தது. நாடார்கள் முதன் முதலாக இராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கினர். மாநாடு தலைமையுரையில் “தொழில் முயற்சியிலும் தெய்வபக்தியிலும் முன்னேறியுள்ள நாடார் சமூகத்தினரை தென் மாவட்டங்களில் இந்து ஆலயங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்யத் தடை செய்திருப்பது இந்து மதத்திற்கே ஒரு பெரிய களங்கம். இந்த அநியாயத்தை இனியும் நீடிக்கவிடக் கூடாது. அவர்களை நீண்டகாலமாகக் கோவிலுக்குள் விடாமலிருந்தும் அவர்கள் மதுரை மீனாட்சியின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருப்பதற்கு அவர்களை நாம் பெரிதும் பாராட்டவேண்டும்” என்று ஆணித்தரமாக இராஜாஜி கூறினார். ஆலயப் பிரவேசத் தீர்மானம் வருவதற்கு முதல்நாள் நடைபெற்ற கூட்டத்தில் நாடார்களை ஆலயங்களுக்கு அனுமதிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஒரு சிலர் ஆட்சேபித்தும் அது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. “இந்த நல்ல தீர்மானத்தைச் சிலர் எதிர்ப்பது எனக்கு மிகவும் வருத்தம் தருகிறது. இதை ஒருவர் கூட எதிர்க்காமல் ஏகமனதாக நிறைவேற்றுவதே நமக்கு அழகாகும். நாடார்களில் ஒரு சிலர் கள் தொழில் செய்பவராயிருக்கலாம். ஆனால் உயர்ந்த சாதியினர் எனப்படுபவர்களிலும் கள் இறக்குபவர்கள், விற்பவர்கள், குடிப்பவர்கள் சிலர் இல்லையா? அவர்களும் ஆலயப் பிரவேச உரிமை பெற்றிருக்கும் போது நாடார்களுக்கும் அவ்வுரிமையை அளிப்பது தானே நியாயம். அவர்களைப் பிற்பட்டவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களுக்குத் தானே கடவுள் முன் செல்ல முதலுரிமை வழங்கவேண்டும். ஆகவே தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று பேசினார்.
இராஜாஜி அளித்த அபயம்
“அரிசனங்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று அனைவரும் பேசியது சரிதான். ஆனால் அதற்காக அவர்கள் சர்க்கார் சட்டம் இயற்ற வேண்டும், என்று பேசியது எனக்குத் திருப்தி தரவில்லை. இப்போதிருப்பது மக்கள் ஆட்சி. எந்த மக்கள் எங்களைப் பதவியில் வைத்தார்களோ அவர்களே ஹரிஜனங்களைக் கோவிலுக்குள் மனமுவந்து அழைத்துப் போனால் அம்மக்களால் வைக்கப்பட்ட சர்க்கார் அதை ஆமோதிக்காமல் என்ன செய்யும்? ஆனால் அப்படி அழைத்துச் சென்றால்,ஒருவேளை சட்டமும் கோர்ட்டுத் தீர்ப்புகளும் குறுக்கிட்டு வழக்குகள் தொடரப்படலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடும். அவ்வித நிலைமை ஏற்பட்டால் அவர்களைப் பாதிக்காதபடி எட்டாம்நாள் சட்டம் போட்டுத் தருகிறேன்” என்று கூறினார். தீர்மானம் ஏகமனதுடன் நிறைவேற்றப் பட்டது. இராஜாஜி பேசிய அழகும் உருக்கமும் புரட்சிக் கருத்துக்களும் வந்திருந்த யாவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தின. கூட்டத்தில் கலந்துகொண்ட நாடார் – அரிசன பிரதிநிதிகளின் மகிழ்ச்சிக்கு அளவு ஏது? தமிழ் தெரியாத திருமதி ராமேஸ்வரி நேரு, மக்களின் ஆனந்தத்தையும் அம்மக்கள் இராஜாஜியின் மீது வைத்திருந்த பக்திப் பெருக்கையும் பார்த்து மிகவும் ஆச்சரியமுற்றார். மதுரையில் வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது அரிசனங்கள், நாடார் சமூகம் சார்ந்த ஐந்து நபர்களை அழைத்துக் கொண்டு ஆலயப்பிரவேசம் செய்யப்பட்டது. வைத்தியநாத அய்யரும் ராஜாஜியும் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டனர். ஆலய நுழைவு உரிமையைச் சட்டமாக இராஜாஜி கொண்டுவந்தார்.
ஆலயப் பிரவேச வழக்கில் ராஜாஜி
திருப்பதி அருகில் உள்ள திருச்சானுர் கோவிலுக்குள் பக்திப் பரவசத்தால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வழக்கத்திற்கு விரோதமாய் ஆலயத்தில் நூழைந்த குற்றத்திற்காகக் கீழ்க் கோர்ட்டில் ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச உரிமைக்கு வாதாட முடிவு செய்தார்.
“நான் ஆஜராகிப் பேச வேண்டுமானால் அதற்கு முன் வழக்கு நடத்திய பி.முனுசாமி நாயுடு சம்மதம் வேண்டும். 1) கோவிலுக்குள் நுழைந்ததன் மூலம் (இந்து) மதத்தை அவமதித்தார். 2) தடையை மீறி உட்புகுந்தார். என்பது குற்றச்சாட்டு. இராஜாஜி “ இந்து சமயக் கொள்கைகள் வேறு, அதன் சமூகப் பழக்கவழக்கங்கள் வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. ஒரு காலத்தில் ஒரு மதத்தினர் அனுசரிக்கும் ஒரு சமூக வழக்கம் மதக் கொள்கையாகாது. இந்து சமயம் வேதங்களையும், கடவுளை எந்தப் பெயராலும் அழைத்து வழிபடுதல், கர்மபலன், மறுபிறப்பு, மோட்­ம் ஆகிய இவைகளில் நம்பிக்கை வைத்தல் ஆகிய கோட்பாடுகளையும் ஆதாரமாக உடையது. ஒரு சமூகத்தார் பிறப்பின் காரணமாக ஒரு பொது இடத்திற்கு வரக்கூடாது எனும் கட்டுப்பாட்டுக்கும் தீண்டாமைக்கும் இந்து வேதத்தில் ஆதாரம் கிடையாது.” வழக்கு, முருகேசன் கோவிலுக்குள் நின்று கொண்டே சுவாமியை நோக்கி வணங்கிக் கொண்டிருந்தார். அரிசன் கோயிலுக்குள் புகுந்தபோது குளித்துவிட்டு வந்திருந்தாரா? என ராஜாஜி கேட்டார். ஆமாம் குளத்தில் முழுகிவிட்டுத்தான் வந்தார். வேற்றுடம்புடன் வந்தாரா? வெறும் உடம்போடுதான்.. அவர் உடம்பு என்றால் மதச் சின்னங்கள் எதுவும் அவர் நெற்றியில் உடலில் இல்லையா? தாராளமாக இருந்தன. பட்டை பட்டையாக நாமங்களை உடலெங்கும் போட்டுக் கொண்டிருந்தார். இப்படி இந்தக் கோலத்தில் உள்ளே நுழைத்த அந்த ஹரிஜன் மெளனமாகக் கோயிலினுள் புகுந்தாரா? மெளனமாகச் செல்லவில்லை. “கோவிந்தா! கோவிந்தா” ஏழுமலையானே எங்கள் குல தெய்வமே என்றெல்லாம் கோ­மிட்டுக் கொண்டுதான் உள்ளே புகுந்தார். ‘ஓகோ! திருக்குளத்தில் நீராடி, உடலெங்கும் துவாத நாமங்களைத் தரித்து வாய்நிறைய ஆண்டவனின் பெயரைச் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைவதுதான் கோயிலை அசுத்தம் செய்யும் முறையா? என்று கேட்டபோது போலீஸ்காரர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். நீதிபதியும் வழக்கைத் தள்ளிவிட்டார். அந்த ஹரிஜனும் விடுதலையடைந்தான்.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்
ho_11925 பிப்ரவரி 6 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஆரம்பித்தார். காந்தி ஆசிரமம் ஒரு முன்மாதிரியாகச் சமூக மாற்றத்திற்கான வித்தாகத் தீண்டாமை ஒழிப்பு, மதுஒழிப்பு மற்றும் கதரை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. பி.எஸ்.ராமதுரை, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.எஸ்.வரதாச்சாரி போன்ற ராஜாஜியின் சீடர்களும் அவருடன் இணைந்தார்கள். ஆசிரமவாசிகளில் 5 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரமவாசிகளுடன் ஒன்றாக உணவருந்தி ஒரே கூரையின் கீழ் வசித்ததால் சுற்றியிருக்கும் கிராமத்தவரின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துக் கொண்டார்கள். பால், காய்கறிவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. ஆசிரமத்தைக் கொளுத்த ஏற்பாடு நடப்பதாக ஒரு புரளி. ராஜாஜியின் காதுக்கு எட்டியது. தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரமவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அருகில் வசிக்கும் சாதியினரின் குடியிருப்புகளுக்குப் புதிதாகக் கிணறு வெட்டிக் கொடுத்தார்கள். அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று சுத்தப்படுத்தினார்கள். பிள்ளைகளுக்குக் கல்வி போதித்தார்கள். பட்டியல் சாதியைச் சார்ந்த சின்னான் என்பவரைச் சமையலுக்கு அமர்த்தினார்கள். ஆசிரமவாசிகளில் சகன் என்ற முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரும் இருந்தார். அங்கமுத்து என்கிற பட்டியல் சாதி ஆசிரமவாசியை மசூலிப்பட்டினம் அனுப்பி காதி அச்சு வரைகலையைக் கற்றுக் கொள்ள வைத்தார் ராஜாஜி.
தீண்டாமை ஒழிப்பிற்குப் பாடுபட்டவர்கள் பலர் உண்டு. இருபதாம் நூற்றாண்டில் இந்த தீண்டாமை என்னும் தீமையை அகற்ற முயன்று, சொந்த வாழ்வில் ஒயாது ஒழியாது எண்ணற்ற இன்னல்களைத் தாங்கி, ஆயுள் முழுவதும் பாடுபட்டவர். சுமார் முக்கால் நூற்றாண்டு பாடுபட்டவர். அரிசனத் தலைவர்கள் பலர், தங்கள் சாதியின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடத்தான் அவருடைய சாதிபேத ஒழிப்பில் மிகவும் முக்கிய பங்கு கொள்ளச் செய்தது.
– முனைவர் ஆ.இரவிச்சந்திரன் , நூலகர், காந்தி நினைவு அருங்காட்சியகம்
– சர்வோதயம் மலர்கிறது , ஆகஸ்ட் 2016
18-7-1919 விருதுபட்டியில் நடந்த நாடார் மகாஜன சங்கத்தில் தலைமைவகித்து ராஜாஜி பேசியிருக்கிறார்.

22,23 – 11- 1919 மதுரை மாநாட்டில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

முஸ்லீம், கிருத்துவர்,நாடார்,பிள்ளை,நாயுடு,ஐயர் என அனைவரையும் கூப்பிட்டு சமபந்தி போஜனம் நடத்தியிருக்கிறார்.காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆதாரம் : மதுரை மாநாட்டில் நாடார்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டி தீர்மானம் – நாடார் குல மித்திரன் 

Advertisements

2 thoughts on “இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள்

  1. மிகப்பெரிய தலைவர். காமராஜரின் எதிர் கோஷ்டி என்ற கருத்தாலேயே அவரின் வரலாறு மறக்கப் பட்டதோ?

    ஸ்

  2. Pingback: Rajaji’s Views on INTER-CASTE MARRIAGE , WIDOW RE MARRIAGE , iNTER-DINING , DEVADASI SYSTEM & TEMPLE ENTRY | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s