பேராசிரியர் அ.மார்க்ஸின் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

https://facebook.com/raattai/ https://raattai.wordpress.com/ இல் கடந்த 3 வருடங்களாக காந்தி, பெரியார், அம்பேத்கர் மற்றும் இந்திய வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்துவருகிறேன். 2009-இன் ஈழப் பெருந்துயருக்குப் பின் சர்வதேச சமூகம் ஏன் நம்மை கைவிட்டது? நமக்கான சரியான அரசியல் எது? எங்கு தவறு இழைத்தோம்?  போன்ற கேள்விகள் காந்தியின் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆரம்பத்தில் காந்தி பற்றிய பதிவுகளை தேடிப்படிக்கும் போது பெரும்பாலும் அவை விமர்சனம் என்ற பெயரில் அவதூறாக இருப்பதையே கண்ணுற்றேன். பேராசிரியரின் “காந்தியும் தமிழ்ச்சானதனிகளும்” (2007 – 2ஆம் பதிப்பு) மற்றும் இணையத்தில் கிடைக்கும் அவரது மற்ற பதிவுகளும் காந்தி பற்றிய வேறொரு சித்திரத்தை எனக்களித்தன.

பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுவது போல் காந்தியை எளிமையாகப் புரிந்து கொள்வது மிகக் கடினம். மேலோட்டமாகத் தெரியும் பாமரத்தனத்திற்கும் அப்பாவித்தனத்திற்கும் அப்பால் அவரது கருத்துகள் ஆழமானவை, சிக்கலானவை (கா.த.ச 75). பெண்களை குடும்பத்திற்குள் சிறைபடுத்தாமல் அரசியல் களத்தில் இறக்கிவிட்டதில் காந்தி அளவிற்கு யாரும் இல்லை என்கிறார் பேராசிரியர். எனது நண்பர் ஒருவர் காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மென்பொருள் நிறுவனத்தில் மேலதிகாரியாக வேலை பார்த்தவர். வேலையை விட்டுவிட்டு தற்போது இயற்கை விவசாயம், காந்தியின் ஆதாரக் கல்வி திட்டத்தை மாதிரியாகக் கொண்டு பள்ளி அமைத்தல் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். “ஏங்க இப்படி காந்திய வேலையா இழுத்துப் போட்டு அலையுறீங்களே வீட்டம்மா திட்டமாட்டாங்களா?” என்று கேட்டேன். “அதான் காந்தியே வழிகாட்டியிருக்கிறாரே” என்று பதிலளித்துவிட்டு பிறகு விளக்கினார். காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே தனது மனைவியை போராட்ட களத்துக்கு அழைத்துச் சென்றவர். கஸ்தூரிபா காந்தி அரசுக்கு எதிராக போராடி 1913 இல் சிறை சென்றவர்! அன்று ஆரம்பித்தவர்தான் கடைசி வரை காந்தியோடு பயணித்து ஆகாகான் சிறையில் தனது இறுதி மூச்சை விட்டார். எப்பேர்ப்பட்ட மனுஷி! எனது நண்பர் காந்திய பணிகளுக்கும் அவரின் மனைவியை அழைத்துச் சென்று இருவரும் சேர்ந்தே சேவை செய்கிறார்களாம். அவரது மனைவி முன்பைவிட தற்போது அதிக சந்தோசமாக இருப்பதாக சொன்னார். இந்தக் காலத்திலும் கூட அந்த அரையாடைக் கிழவர் ஒரு இளைஞரை பாதித்து இருக்கிறார். அவருக்கு இயற்கையை, வாழ்க்கையை, மனைவியை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

185755_10150150389256675_6173445_n1921 இல் ஈரோட்டில் 2 பெண்கள் காங்கிரஸ் நடத்திய கள்ளுக்கடை மறியலை முன் நின்று நடத்தினார்கள். வேறு யாராக இருக்க முடியும்? ஆம்! பெரியாரின் மனைவி நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும்! 5.12.1923 அன்று சுதேசமித்திரனில் வந்த செய்தி “4.12.1923 செவ்வாய்க் கிழமை திருச்சி தெப்பக்குளம் முனிசிபல் சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்களின் மனைவியார் ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் அவர்கள் பிரேரேபிக்க, ஸ்ரீமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே காங்கிரஸ் கமிட்டிக்கு முதல் பெண்மணி. இந்தச் சிறப்பைப் பெற்றவர் நாகம்மையார் என்பது பெருமை மிக்க நிகழ்வு காங்கிரசுக்கும், தமிழ்நாட்டிற்கும்.” (தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார் – பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்). உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் 1930-1931 வரையில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் சிறை சென்றனர். அதில் கணிசமானோர் பெண்கள். “பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்’ என்று செ.17 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி பகிரங்கமாக அறிவித்தார்.

அ.மார்க்ஸ், ‘காந்தி வலியுறுத்திய மரபும் சனாதனிகள் உயர்த்திப் பிடித்த மரபும் வேவ்வேறானவை, காந்தி இந்துமத மரபை அப்படியே ஏற்றுகொள்ளவில்லை’ என்பதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். தன்னால் புரிந்துகொள்ள முடியாத, தார்மீக ரீதியாக ஏற்றுகொள்ள முடியாத சடங்குகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் ஒருபோதும் அடிமையாய் இருக்க மாட்டேன் என்றும் தனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக மேலோங்கியிருக்க தான் அனுமதிக்க மாட்டேன் என்றும் உரைத்தவர் காந்தி. வருணாசிரமிகளின் சனாதனத்திற்கும் தனது சனாதனத்திற்குமான வேறுபாட்டை காந்தி விளக்குவதை இப்புத்தகம் விரிவாகப் பேசுகிறது. மற்ற மத நம்பிக்கைகளுடனான தனது சகிப்புத்தன்மையயே சனாதனிகளுடன், அவர்கள் நம்பிக்கைகளுடன் வேறுபட்டு நிற்கிறது என்கிறார். திலகர், அரவிந்தர் மற்றும் இந்துத்துவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக வன்முறையை கையில் எடுத்தபோது கீதையைப் பயன்படுத்திய விதத்தையும் காந்தி அதே பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை வழியில் களம் கண்ட போது கீதையை மரபுவழி வாசிப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மாற்று வாசிப்பாக எப்படி முன்வைத்தார் என்பதையும் அ.மார்க்ஸ் தெளிவாக இப்புத்தகத்தில் காட்டியுள்ளார்.

காந்தி தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை. வருணாசிரமத்தை ஆதரித்தார் என்ற தவறான புரிதல் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. மார்க் லின்ட்லே (Mark Lindley) அவர்களின் “Changes in Mahatma Gandhi’s Views on Caste and Intermarriage” என்ற கட்டுரையும் அ.மார்க்ஸ் அவர்களின் இந்த கட்டுரைத் தொகுப்பும் எனது கருத்தை மறுபரிசீலனை செய்யவைத்தது. “மகாத்மா” என்ற பட்டத்தைக் கூட காந்தி ஏற்கவில்லை. “இந்து மதம் தீண்டாமையை விட்டொழிக்கும் நாளில் இந்த தேசம் எனக்களித்த “மகாத்மா” என்ற பட்டத்தை ஏற்பேன்” என்கிறார். (நாக்பூர், டிசம்பர் 25, 1920)

ஜன 9, 1915 ல் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார். தன்னுடன் தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் பண்ணையில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த செல்வன் (துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்) என்பவரின் மகனை (நாயக்கர் ) தரங்கம்பாடியில் இருந்து ஆசிரமத்துக்கு ஏப்ரலில் அழைத்து வருகிறார். மே 20-25 1915-இல் அகமதாபாத் நகருக்கு வெளியே (Kocharab) கோச்ராப்பில் ஆசிரமம் அமைக்கிறார். செப் 26 1915 இல் ஒரு பட்டியல் சாதி குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்துகிறார் ( தக்கர் பாபாவின் நண்பர்  தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், கைக்குழந்தையாக லட்சுமி) நவம்பரில் 7 இல் ஆசிரம விதியில் தீண்டாமையை கடைபிடிக்கக்கூடாது என்ற திருத்ததைக் கொண்டுவருகிறார். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவிக்கிறார். நண்பர்களாக பிரிந்துவிடலாம் என மிரட்டுகிறார். மாதம் 7 ரூபாய் செலவிற்கு அனுப்புகிறேன் தனது அக்கா ரலியாத்யுடன் சென்று வசிக்குமாறு கூறுகிறார். காந்தியின் குடும்பத்தினர் பலர் காந்தியின் இந்த செய்கையை கண்டித்தனர். ஆசிரமத்திற்கு நிதியளித்து உதவியவர்கள் பின்வாங்கினர். பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு ஆசிரமத்தை இடம் மாற்றலாம் என முடிவெடுத்தார் காந்தி. எதிர்பாராதவிதமாக அம்பாலால் சாராபாய் என்ற மில் முதலாளி பண உதவி செய்தார். 1917-இல் காந்தியின் உறவினர் குஷால்சந்த் காட்டமாக ஒரு கடிதம் எழுதுகிறார். ஆரம்பத்தில் இருந்தே ஆசிரமத்தில் வருணாசிரமத்தை கடைபிடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். எல்லாரும் சேர்ந்தே உணவு உண்ணுகிறோம் என்று பதில் அனுப்புகிறார் காந்தி. தூதாபாய்க்கு நல்ல வேலை கிடைக்கிறது. ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார். பின் 1920-இல் லட்சுமியை காந்தியின் பொறுப்பில் ஆசிரமத்தில் விட்டுவிட்டு செல்கிறார். காந்தியின் தத்துபிள்ளையாக கஸ்தூரிபாவின் செல்லப்பிள்ளையாக அங்கேயே வளர்கிறார் லட்சுமி. 1931-இல் லட்சுமியை பட்டியல் சாதி அல்லாத ஒருவரையே மணமுடித்து வைக்க தான் விரும்புவதாக தூதாபாயின் அபிப்பிராயத்தை கேட்டு கடிதம் எழுதுகிறார். சென்னையைச் சேர்ந்த பார்ப்பனரான மருதய்யா என்ற மாருதியுடன் ஆசிரமத்தில் வைத்து 1933 மார்சு மாதம் கல்யாணம் நடந்திருக்கிறது. 1927 முதல் ஆசிரமத்தில் ஒரே சாதியில் இனி திருமணம் நடத்திவைக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்திருக்கிறார்.

சமூகத்திலுள்ள எல்லோரையும் தனது கருத்தை ஏற்கச் செய்தாலும் அவர்கள் அதே வேகத்தில் தன்னை பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே அதிகட்ச பொறுமையைக் கடைபிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியதுள்ளது என்ற காந்தியின் தன்னிலை விளக்கத்தை வைத்து சாதி, வருணாசிரமம் பற்றிய அவரின் சீரான முற்போக்கான நகர்வை எடுத்துக்காட்டுகிறார் அ.மார்க்ஸ் (கா.த.ச பக் 11). காந்தி தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார் என்கிறார் (கா.த.ச பக் 10). “நான் திருமண வயதை அடைந்த காலம் வந்தபோது, மணமுடிக்கும் இருவரில் ஒருவராக ‘தீண்டத்தகாதவர்’ என்றழைக்கப்படும் ஹரிஜன் இல்லாத எந்தத் திருமண நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை என்ற முடிவெடுத்திருந்தார்,” என்கிறார் நாராயண் தேசாய் (காந்தியின் காரியதரிசி மறைந்த மகாதேவ் தேசாயின் புதல்வர் – மணமக்களில் ஒருவர் பட்டியல் சாதியாக இல்லாததால் காரணத்தால் காந்தியின் மடியில் வளர்ந்த இவரின் கல்யாணத்திற்குக் கூட காந்தி போகவில்லையாம்). தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி – சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம். இது ஒரு முக்கியமான கடிதம் – பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்,” என சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பவருக்கு 1945 மே 6 அன்று காந்தி எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

காந்தியுடன் நாத்திகம் X ஆத்திகம் விவாதம் செய்த நாத்திகரான கோரா காந்தியின் மீதான ஈடுபாட்டால் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக தன் பங்கிற்கு தனது மகள் மனோரமாவை பட்டியல் சாதியைச் சேர்ந்த மணமகனுக்கே திருமணம் செய்து வைக்க தீர்மானித்து காந்தியின் தலைமையில் சேவாகிரம் ஆசிரமத்தில் வைத்து நடத்த வேண்டும் என விண்ணப்பம் வைத்தார். காந்தியும் சம்மதம் தெரிவித்தார். அர்ஜூன் என்ற மணமகனை தேர்ந்தெடுத்து பிப்ரவரி 1946-இல் ஆசிரமத்திற்கு அனுப்பினார். அர்ஜூனும் இரண்டு வருடங்கள் காந்தியுடன் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். கடவுள் நம்பிக்கை இல்லாத மணமகளை எப்படி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்துவீர்கள் என வினவினார் கோரா. சத்தியத்தின் பெயரால் ஆசீர்வதிப்பேன் என காந்தி பதிலுரைத்தார். ஏப்ரல் 1948-இல் பார்ப்பனரான கோராவின் மகளுக்கும் பட்டியல் சாதியைச் சார்ந்த அர்ஜூனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி இறுதியில் கோட்சேவின் தோட்டாக்கள் காந்தியின் மார்பை துளைத்தன. 13-3-1948-இல் காந்தியின் வாக்குறுதிப்படியே ஆசிரமத்தில் திருமணம் நடந்தது (ஆசிரமத்தில் காந்தி அர்ஜூனிடம் அம்பேத்கர் போல் ஆக வேண்டும். தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக பிப்ரவரி 1996ல் மார்க் லின்லே எடுத்த பேட்டியில் அர்ஜூன் கூறியிருக்கிறார்). 1946ல் காந்தி சாதி இந்துப் பெண்கள் அனைவரும் பட்டியல் சாதியில்தான் மணமகனை தேர்ந்து எடுக்க வேண்டுமென்றார். அம்பேத்கர், பெரியார் போல் காந்தியும் இத்தகைய கருத்தை கொண்டிருந்தார் என கோடிட்டு காட்டுகிறார் அ.மார்க்ஸ்.  தாழ்த்தப்பட்டவர்கள் ஹரிஜனங்கள் என்று குறிப்பிடுவதற்கு அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்பதற்கும் அப்பால், அவர்களை ஒடுக்குபவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று காந்தி ஒடுக்குபவர்கள் மீது தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார் (யங்க் இந்தியா 6-8-1931).

பெருமக்கள் செல்வாக்குடன் தீண்டாமை முதலான பிறவி ஏற்றத் தாழ்வுகளின் பிறப்பிடமான இந்துமதக் கொடுமைகளை எதிர்த்து நின்ற காந்தியை சனாதனம் மிகப் பெரிய எதிரியாக கருதியது. இந்துமதத்திற்கு தீங்கு நேருமானால் அது காந்தியால் நடக்கப் போகிறது என சனாதனம் எரிச்சல் அடைந்தது என்கிறார் அ.மார்க்ஸ் (பக் 25). காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரால் ஈர்க்கப்பட்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்கிறார் வினோபா. 1917 ல் கோச்ராப்பில் செயல்பட்டு வந்த ஆசிரமம் சபர்மதிக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. வினோபாவின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணாவும் அவரை பின்பற்றி ஆசிரமத்தில் இணைந்து கொள்கிறார். ஆசிரமத்தில் மலம் அள்ள வேலைக்கு ஆள் வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு நாள் அவர் வேலைக்கு வர இயலாத நிலையில் தனது மகனை அனுப்பியுள்ளார். கனமான வாளியை சுமக்க அச்சிறுவன் கஷ்டப்படுவதை பார்த்த பாலகிருஷ்ணன் உதவியிருக்கிறார். பின் வினோபாவிடம் சென்று தான் இனி மலம் அள்ளும் துப்புரவு பணியை மேற்கொள்ளப் போவதாகவும் எனவே அதற்கு அனுமதி வேண்டுமென கேட்டிருக்கிறார். ஆகா அருமையான பணியாச்சே! தமையனின் அந்த மகத்தான சேவையில் தானும் சேர்ந்து கொள்வதாக வினோபா மகிழ்ந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட கஸ்தூரிப்பா காந்தியிடம் சென்று முறையிடுகிறார்; அதற்கு காந்தி, “ஒரு பிராமணர் மலம் அள்ளுவதைவிட சிறப்பான விஷயம் இருக்க முடியுமா” என அதைக் கொண்டாடியிருக்கிறார். பிறகென்ன அன்றாட ஆசிரம கடமையில் மலம் அள்ளும் பணியையும் சேர்த்துவிட்டார் காந்தி.

1919 முதல் 1925 வரை காங்கிரஸ் மாநாடுகளில் தொடர்ந்து பெரியார் வகுப்புரிமை தீர்மானத்தை முன் வைத்தார்.ஆனால் அவரால் வெற்றி பெற இயலவில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி முழுக்கமுழுக்க பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. காந்தி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போதும் பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதோர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. பார்ப்பனரல்லாதோர் கோரிக்கையில் உள்ள நியாயங்களை காந்தி ஏற்றுக் கொண்டவர்தாம். 1920இல் சென்னை சட்டக்கல்லூரியில் உரையாற்றிய காந்தி, “பார்ப்பனர்கள் பார்ப்பனல்லாதோர் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்பனர்கள் சரணாகதி அடைந்துவிட வேண்டும். இதுதான் அவர்களுடைய கடமை. பார்ப்பனல்லாதோர் எத்தனை இடங்களை கேட்கிறார்களோ அத்தனை இடங்களையும் அளித்துவிட வேண்டும். என்னுடைய அதிகாரத்தில் அது இருந்தால், அதற்கு மேலும் சில இடங்களை அளிப்பேன்.” என்றார் (கா.த.ச பக் 32).

சேரன்மாதேவி குருகுலப்பிரச்சனை, கதர் நிறுவனப்பிரச்சனை என பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதோர் விரிசல் அகலமானது.1927இல் காந்திக்கு சிறிய அளவில் பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக உயர் ரத்தக் கொதிப்பு வந்ததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி பெங்களூரு நந்தி மலையில் சிறிது காலம் ஓய்வெடுத்திருக்கிறார். கதர் நிறுவனப் பிரச்சனை சம்பந்தமாக பெரியார் காந்தியைப் போய் பார்த்தார். உடன் சங்கர்லால் பங்கர், ராஜாஜி, சந்தானம் இருந்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதாருக்கு சரிபகுதி அதாவது 100-க்கு 50 உத்தியோகமாவது கொடுக்கப் படவேண்டும் என பெரியார் கேட்டிருக்கிறார். காந்தி 100-க்கு 90 கொடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். ராஜாஜி “வகுப்பு பிரிவினை பார்த்தால் போதுமா? வேலை நடக்கவேண்டாமா? தகுதியும் கூட பார்க்கவேண்டாமா?” என்று சொல்லியிருக்கிறார். “நாயக்கர் அதையும் பார்த்துக்கொள்வார். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமித்ததன் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டியதுதான். அதாவது கதர்விஷயம் எப்படி முக்கியமானதோ அதுபோல வகுப்பு அதிருப்திகளும் நீங்க வேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும்,” என்று காந்தி சொல்லி அனுப்பியுள்ளார். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர் ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும்படியாக பார்ப்பனர்கள் செய்துகொண்டார்கள் என்கிறார் பெரியார். (குடி அரசு – கட்டுரை – 05.03.1927).

பார்ப்பன ஆதிக்கம் காரணமாக கதர் போர்டில் ஒரு புறம் பிரச்சனைகள் எப்பொழுதும் போல் இருந்தாலும் நீதிக்கட்சி, பார்பனரல்லாத இயக்கங்கள், சுயமரியாதை இயக்கம் முதலிய காங்கிரஸின் பிரதான எதிரணியினர் கூட பார்ப்பனர் ஆதிக்கம், வகுப்புரிமை, சாதி, வருணாசிரமம் என பல்வேறு விஷயங்கள் குறித்து காந்தியிடம் விவாதிக்க முடிந்தது. காந்தியிடம் அவர்களுக்கு மிகப் பெரிய மரியாதை இருந்திருக்கிறது. எதிர்தரப்பினரின் நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றை வற்புறுத்த காந்தி என்றுமே தயங்கியதில்லை என அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார் (கா.த.ச பக் 25-30).

இந்தக் காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரஸை விட்டு முழுமையாக வெளியேறுகிறார். அதன் பின்னர் காந்தியின் மீதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காங்கிரஸ் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைக்கிறார். 1957-58-இல் எல்லாவற்றையும் காந்தியின் பெயரால் நியாயப்படுத்துகிற காங்கிரஸையும், அரசியல் சட்டத்தையும் எதிர்க்க அவர் காந்தி சின்னங்களையும், காந்தி பொம்மைகளையும் அழிக்கும் போராட்டங்களைக்கூட நடத்தியுள்ளார். ஆனால், நாகம்மையார் உட்பட மிக நெருங்கிய சொந்தங்கள், தோழமைகளின் மரணத்திலும் நிதானத்தில் இருந்த பெரியார் கோட்சே எனும் பார்ப்பனரால் காந்தி கொல்லப்பட்ட போது கொஞ்சம் சித்தம் கலங்கித்தான் போனார் (பக் 42-43). காந்தியின் மரணத்தின் பின்னணியில் அவரது வாழ்நாள் சாதனைகளையும் சாதி, வருணாசிரமம், இந்துமதம் போன்றவற்றில் அவர் அடைந்து வந்த மாற்றங்களையும் பெரியார் 1948-1949 ஆண்டுகளில் விரிவாகவே மதிப்பீடு செய்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் அ.மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை காந்தி தாய்மொழிக் கொள்கையை ஆதரித்தவர். பாமர மக்களின் பக்கம் நின்று அவர்களுக்குப் புரியும் மொழியில் கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர். ஜி.ஏ.நடேசனின் “காந்திஜியின் பேச்சும் எழுத்தும்” நூலில் இருந்து குறிப்பிடவேண்டுமென்றால், “…தாய்மொழி மூலம் பல்வேறு கல்விகளும் அளிக்கப்பெற்றிருந்தால் அவை இப்போது வியப்படையக் கூடியவாறு நன்கு வளம் பெற்றிருக்கும். கிராம சுகாதாரச் சிக்கல்கள் எந்தக் காலத்திலோ தீர்ந்திருக்கும். கிராமப் பஞ்சாய்த்துக்கள் தங்களுடைய தனி வழியில் உயிர்ச் சக்தியோடு விளங்கியிருக்கும். இந்தியா, தனது தேவைகளுக்கு ஏற்ற ஒரு வகைச் சுயாட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும்”.

இரண்டாவது மொழியாக இந்தியாவெங்கும் பேசக் கூடிய இந்தியை பொது மொழியாக முன்வைத்தவர் காந்தி.காந்தியின் “இந்தி” இன்று முன் வைக்கப்படக் கூடிய சமஸ்கிரதமாக்கப்பட்ட இந்தியல்ல மக்களிடம் புழக்கத்தில் இருந்த உருது மிகுந்த இந்துஸ்தானிஎன்பதை பதிவு செய்கிறார் ஆசிரியர் (பக் 36,37).

காந்திக்கும் தமிழுக்குமான உறவு தென்னாப்பிரிக்காவிலேயே தொடங்குகிறது. ஒப்பந்தக் கூலியாக தென்னாபிரிக்காவில் வேலை பார்த்து வந்த பாலசுந்திரம் என்ற தமிழரை அவரது ஐரோப்பிய முதலாளி அடித்துவிட காயம்பட்ட அவருக்காக வாதாடினார் காந்தி. இந்தியன் ஒப்பினீயன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து அதில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என நான்கு மொழிகளில் கொண்டுவந்தார். தான் உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணையில் குழந்தைகளுக்கு தமிழும் உருதும் அவரே சொல்லிக் கொடுத்தார். கப்பல் பயணத்திலும் சிறையிலும் ஜீ.யூ.போப் எழுதிய தமிழ்ப்பாட புத்தகம் மூலம் தமிழ் கற்றிருக்கிறார். தமிழில் எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறார் காந்தி (சத்தியசோதனை). பலருக்கு தமிழில் கூட கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இறுதிகட்ட சத்தியாகிரக போராட்டத்தில் அவருக்கு தோள் கொடுத்தவர்கள் தமிழர்களே. (கா.த.ச பக் 51) தமிழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.

“எங்களுக்கு மோகன்தாஸ் காந்தியை அளித்தீர்கள். நாங்கள் திருப்பி உங்களுக்கு மகாத்மா காந்தியை அளித்தோம்” என்கிறார் நெல்சன் மண்டேலா (The Family and The Nation  – A. P. J. Abdul Kalam/ Acharya Mahapragya). காந்தி தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இந்தியா என்பது ஒரு மதத்தினர், ஓரினத்தினர், ஓர் மொழியினர், ஓர் சாதியினரின் நாடல்ல என்பதை உள் வாங்கும் வாய்ப்பை, காந்தியை உருவாக்கிய தளமாக தென்னாப்பிரிக்கா இருந்தது என்பதை விரிவாக விளக்கியுள்ளார் அ.மார்க்ஸ் (பக் 94-103). காந்தியின் தனித்த அடையாளங்களை பட்டியிலிட்டு அவற்றை உருவாக்கி, வடிவமைத்து, செயல்படுத்தியது அனைத்துமே தென்னாப்பிரிக்காவில்தான் என்கிறார் அ.மார்க்ஸ் (பக் 95).

காந்தியின் நண்பரும் இந்தியர்களின் போராட்டத்திற்கு உதவியருமான ஹன்றி போலகின் மனைவி மிலி கிரகாம் போலக் என்பவர் எழுதிய Gandhi, The Man இல் ஒரு சம்பவத்தை சொல்லியிருப்பார். ஜோஹென்னஸ்பர்கில் உள்ள மசொனிக் ஹாலில் நடந்த மிகப்பெரிய கூட்டமொன்றில் உரையாற்றிய பின் காந்தி வெளியே வந்திருக்கிறார். சந்தேகத்திற்குரிய விதத்தில் நின்றிருந்த நபர் ஒருவரிடம் காந்தி தானாகவே சென்று பேசுகிறார். அந்த நபர் தன்னைக் கொல்ல வந்தவர் என காந்தி தெரிந்து கொள்கிறார். உயிரைப் பறிக்க வந்தவன் கத்தியை அவரிடமே கொடுத்துவிட்டு திரும்புகிறான். அவனைப் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்று மிலி சொல்லும்போது “தேவையில்லை, அப்படி செய்திருந்தால் நான் அவனை எதிரி ஆக்கி இருப்பேன், இப்போது அவன் எனக்கு மற்றுமொரு நண்பன்”,என்கிறார். புனித ஃப்ரான்சிஸின் சாயலை நாம் காந்தியிடம் காண முடியும் என்று Gandhi, The Man முன்னுரையில் ஆண்ட்ரூஸ் எழுதுகிறார்.

“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி”, “இது கடினம். ஆனால் நம் எதிர்தரப்பினரின் பார்வையை நம் பார்வையாகக் கொண்டால்தான் அவர்களுக்கு நம்மால் முழுமையாக நீதி வழங்க முடியும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனநிலை தேவைப்படுகிறது என்பதை நான் அறிகிறேன். அந்த மனநிலையை அடைவது எளிதல்ல. ஆனாலும், ஒரு சத்தியாகிரகிக்கு இந்த மனநிலை ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும்”, என்கிறார் காந்தி (Susanne Hoeber Rudolph and Lloyd I. Rudolph, “Postmodern Gandhi and other essays”). காந்தியை ஏன் கொலை செய்ய வேண்டும்? யார் அவருக்கு எதிரிகள்? அம்பேத்கர், பெரியார், மற்றும் கம்யூனிஸ்ட்கள் கொள்கை அடிப்படையில் காந்தியை எதிர்த்தவர்கள். அவர்கள் காந்தியை கடுமையாக விமர்சித்து இருக்கலாம். தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமநிலைச் சமூகத்தைப் படைத்தல் என்கிற காந்தியின் லட்சியத்தின் போதாமை, நடைமுறைகளையே எதிர்த்தார்கள். ஆனால் காந்திக்கு எதிரிகளல்ல. வருணாசிரமிகள் மற்றும் சனாதனிகள் தான் உண்மையான எதிரிகள் என்கிறார் அ.மார்க்ஸ் (பக் 49,50). பரந்துபட்ட மக்கள் செல்வாக்கினால் காந்தியால் கலியில் “வருண சம்ஹாரம்” ஏற்பட்டுவிடும் என பயந்தவர்களே அவரைக் கொன்றவர்கள். அ.மார்க்ஸ் காந்தியைக் கொன்றவர்களைப் பற்றிய விவரங்களை, வரலாற்று உண்மைகளை கேள்வி-பதில் வடிவில் விரிவாக தயாரித்து கொடுத்திருக்கிறார் (பக 122).

“இந்திய சுயராஜ்ஜியம் என்பது பெரும்பான்மை சமூகத்தின் அதாவது இந்துக்களின் ஆட்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைவிட பெரிய பிழை ஏதுமிருக்கமுடியாது…ஒருவேளை அது உண்மையானால் நான் நிச்சயம் அதை சுயராஜ்ஜியம் என்றழைக்கமாட்டேன், பலம்கொண்ட மட்டும் அதை எதிர்ப்பேன். இந்து சுயராஜ்ஜியம் என்பது எனக்கு மக்களின்ஆட்சி, நீதியின்ஆட்சி,”என்றவர் காந்தி. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய, மதசார்பற்ற இந்தியா உருவாக காரணமான காந்தியே இந்து ராஷ்டரம் அமைக்கத் தடையாக இருப்பார் என்று எண்ணிய இந்துத்துவ சக்திகள் சுதந்திர இந்தியாவில் நடத்திய முதல் பயங்கரவாத செயலே “காந்தியின் படுகொலை”.

காந்தியின் ரத்தம் குடித்த இந்துத்துவ சக்திகள் பெரும்பான்மை பலத்தோடு அதிகாரத்தில் மமதையுடன் அமர்ந்திருந்து சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இன, பழங்குடி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இந்தியா முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு வித பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் இந்த அவசியமான கட்டுரைத் தொகுப்பை வெளியிட முன் வந்திருக்கும் பிரக்ஞை பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

– ராட்டை, மே 2016.

அ.மார்க்ஸ் அவர்களின் நூல் எனது காந்தி குறித்த தேடல்களை எளிதாக்கியது.

இந்நூலுக்கு முன்னுரை எழுத 25 பக்கங்கள் குறிபெடுத்தேன். விரித்து எழுதினால் 300-400 பக்கத்துக்கு ஒரு புத்தகம் போடுமளவிற்கு இந்நூலை மேற்கோளாக வைத்து எண்ணற்றத் தகவல்களை இந்த 3 வருடங்களில் கண்டடைந்திருக்கிறேன். முக்கியமான விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு என்னால் முடிந்த அளவு சுருக்கிக் கொடுத்தேன்.அதுவே 16 பக்கங்கள் வந்துவிட்டது. விலாசினி அவர்கள் (பிரக்ஞை பதிப்பகம்) 7 பக்கத்துக்கு நச்சுனு சுருக்கி கொடுத்திருக்காங்க

Advertisements

One thought on “பேராசிரியர் அ.மார்க்ஸின் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

  1. Pingback: காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி) | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s