‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்

நாம் யாருக்கு எதிரி
திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, அதற்காக ஒரு நிதி தனியாக ஏற்படுத்த வேண்டுமென்று கருதி இங்ஙனம் பேசினாரோ என்று சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. இல்லையேல், பட்ஜெட் விவாதத்தின்போது ‘கருஞ்சட்டை’ ஒழிப்பு மசோதா ஏன் வரவேண்டும்? பட்ஜெட்டுக்கும் கருஞ்சட்டைக்கும் என்ன சம்பந்தம்? என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

இதற்கு இரண்டு மூன்று நாள்களுக்கு முன்கூடச் சட்டசபையில், திராவிடர் கழகத்தாரைப் பற்றிப் பேசப்பட்டது. அதாவது, திராவிடக் கழகத்தார் பார்ப்பனர்களுக்கு எதிராக அவர்களை நிந்தித்துப் பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்றும், அவற்றைச் சார்க்கார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சேலம் பிராமண சேவா சங்கத்தார் ஒரு மகஜரைச் சர்க்காருக்கு அனுப்பியது உண்மையா என்று, சட்டசபையில் தோழர் சுப்பிரமணி அவர்கள் ஒரு கேள்வி கேட்டார். அதற்குச் சர்க்கார், சேலம் பிராமண சங்கத்தாரால் அனுப்பப்பட்ட மகஜரில் உள்ள குற்றச்சாட்டுகள், நிச்சயமற்றதும், தெளிவற்றதும், விபரமற்றதுமானவையென்றும், அவற்றை ஆதாரமாக வைத்து நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டம் இடந்தராதென்றும் பதில் கூறிவிட்டது. அந்தச் சமயத்தில் தோழர் காளேஸவரராவ் சட்டசபையில் இருந்தாரோ, சென்னைச் சட்டசபையின் தனி ஏற்பாட்டின் படி குறட்டைவிடாமல் தூங்கிக்கொண்டிருந்தாரோ நாம் அறியோம்.

திராவிடர் கழகத்தார் பேசுவதும் எழுதுவதும் சட்டவரம்புக்கு உட்பட்டே உள்ளன என்று சட்டசபையில் சட்டமந்திரி தோழர் கோபால் ரெட்டி அவர்கள் வெட்டவெளிச்சமாகக் கூறிய பின்னரும், திராவிடர் கழகத்தாரை ‘ஆபத்தை விளைவிப்பவர்கள்’ என்ற பட்டியலில் சேர்த்து, அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கவேண்டுமென்று கூறுவதும் கொக்கரிப்பதும், மதி சிறிதளவாவது கொண்டவர்களின் பேச்சென்று கொள்ள முடியுமா என்று கேட்கிறோம்.

சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளைக் கவனிக்கும் ஆற்றலும் அதற்கேற்பப் பேசும் திறமையுமற்ற பலர் இன்றைய சட்டசபையை நிரப்பிக் கொண்டிருக்கிற காரணத்தால்தான், முன்பின் நடந்தவற்றையும் நடப்பவற்றையும் கவனியாமல், ஏதோ நாமும் சட்டசபையில் பேசினோம், திக்குமுக்காடும் கேள்விகளைக் கேட்டுச் சர்க்காரைத் திணற வைத்துவிட்டோம் என்ற எக்களிப்போடு வாயில் வந்ததை எல்லாம் வாரிக்கொட்டும் இரங்கத்தக்க நிலைமை ஏற்படுகிறது.

நாம் பலகாலமாகவே பேசியும் எழுதியும் வருகிறோம், நமக்குப் பார்ப்பனர்களிடத்தில் எந்தவிதமான பகைமையோ, பொறாமையோ கிடையாது என்று; நம்முடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் பார்ப்பனியத்தின் மீதேயன்றிப் பார்ப்பனர் மீது அல்ல என்பதைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறோம். பார்ப்பனியம் என்றால் என்ன என்பதையும் பல முறை புரியவைத்திருக்கிறோம்.

தீண்டாமையைப் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.

புரோகிதத்தைப் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.

கோயில்களில் உள்ள ஏற்பாடுகளையும், அங்கு நடக்கும் அட்டூழியங்களையும் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.

சாதியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதைப் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.

இவையும் இவைபோன்ற பல அறிவுக்கும் இயற்கைக்கும் புறம்பாக மதத்தின் பேராலும், சாதியின் பேராலும், கடவுளின் பேராலும் நடைபெறும் நிகழ்ச்சிகளையே நாம் பார்பனியம் என்றும், அவை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகின்றோம். அவை ஒழிக்கப்பட்டால், உண்மையாகவே பார்ப்பனர் என்ற ஒரு தனிவகுப்பு இந்நாட்டில் இருக்க முடியாதென்றும், தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் அண்ணன் தம்பிபோல வாழமுடியுமென்றும் கூறுகின்றோம்.

நாம் எதெதைப் பார்ப்பனியம் என்றும், அவை ஒழிக்கப்பட்டாலன்றி நாட்டில் நல்லறிவு ஏற்படாதென்றும் கூறிவந்தோமோ, அவற்றில் சில, இன்று சர்க்காராலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுச் சட்டமாகவும் ஆக்கப்பட்டுவிட்டன – இன்றும் சில, சட்டமாக்கப்படும் எல்லையை எட்டிப்பார்த்த வண்ணம் உள்ளன.

உடன்கட்டை ஏறும் வழக்கத்தைப் பார்ப்பனியம் என்றும், அது ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறிவந்தோம். அது சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்டது.

குழந்தைப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பார்ப்பனியத்தின் விளைவு என்று கூறினோம்; அதைத்தடை செய்து சர்க்கார் சாரதாச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிற்று.

தீண்டாமை பார்ப்பனியத்தால் ஏற்பட்ட பாதகம் என்று கூறினோம்; இது நடைமுறையில் இன்னும் சரிவரக் கையாளப்படவில்லை யென்றபோதிலும், தீண்டாமையை எந்த வடிவத்திலும் இனி நடமாட விடக்கூடாதென்று, சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் திராவிடர் கழகத்தாரால் இடைவிடாது செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாக ஏற்பட்டவை என்பதை எவராவது மறுத்துக்கூற முடியுமா?


கோயில் நுழைவுச் சட்டம், திராவிடர் கழகத்தாரின் பிரசாரத்தால் ஏற்பட்டதென்று, இப்பொது கவர்னர் ஜெனரலாக இருக்கும் இராஜகோபாலாச்சாரியார், ஒருசமயம், மதுரைக் குச்சென்றபோது, அங்குள்ள கோயில் நுழைவுச் சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பன நண்பர்களுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார். அன்பர் ஆச்சாரியார் இவ்வாறு கூறியது, ஒரு பார்ப்பனரே, பார்ப்பனருக்கு எதிராகக் கோயில் நுழைவுச் சட்டத்தைக் கொண்டு வரலாமா என்று பார்ப்பன நண்பர்கள் கேட்டதற்கு, அதிலிருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்காகத் தந்திரமாக இதைக் கூறினார் என்றாலும், திராவிடக் கழகத்தார் நாட்டுக்கு இன்றியமையாது செய்யப்பட வேண்டிய கோயில் நுழைவு, பார்ப்பனருக்குமட்டும் ஏகபோக உரிமையாக இருப்பதா என்று பிரசாரம் செய்துவந்ததை, அந்தச் சமயத்தில் ஒளிவுமறைவின்றிக் கூறினர் என்பதை, இன்று நம்மைப் பார்ப்பன விரோதிகள் என்று தவறாகக் கருதிக்கொண்டிருக்கும் தோழர் காளேஸ்வரராவ் போன்றோரின் ஞாபகத்திற்குக் கொண்டுவரவே இதனை இங்குக் குறிப்பிடுகிறோம்.

பார்ப்பனியத்தின் அடிப்படைகளில் ஒன்றான இந்துமதபரிபாலனம், சீர்திருத்தி அமைக்கப்பட்டு கோயில்களிலும் மடங்களிலும் நடைபெறும் அட்டூழியங்களும் ஆபாசங்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்று இன்று கொண்டுவரவேண்டு மென்று இன்று கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதா, யாருடைய பிரசாரத்தின் விளைவு என்பதைச் சிறிது ஆரஅமர இருந்து யோசித்துப்பார்க்கும் எவருக்கும், உண்மையை மறைக்கும் தைரியம் அவ்வளவு எளிதில் உண்டாகிவிடாது.

இவையன்றி, சர்க்கார் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனரையே தேடித் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து சேர்ப்பதை நாம் கண்டிக்கிறோம். இதைச்சாக்காக வைத்துக்கொண்டு, சிலர், நாம் பார்ப்பனரைக் கண்டிக்கிறோம் என்று தவறாகக் கருதிக் கொண்டு நம்மீது பழி சுமத்திவிடுகிறார்கள். சர்க்கார் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனரைப் பார்க்கிலும் திறமையும் தகுதியும் வாய்ந்த பல பார்ப்பனரல்லாதார் இருக்கும்போது, அவர்களுக்கு அந்தப் பதவிகளைக்கொடுக்காமல், பார்ப்பனர்களின் எண்ணிக்கையின் அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்களை வழங்கிச் சலுகைகாட்டுவது நீதியா? நேர்மையா? முறையா? என்று கேட்பதை, எந்தச் சொந்த அறிவுடைய வனாவது பார்ப்பன விரோதத்தால் செய்யப்படும் துவேஷம், என்று இதனைக் கூறமுடியுமா என்று கேட்கிறோம்.

நாம் பார்ப்பனரின் விரோதிகளல்லர், பார்ப்பானியத்தின் விரோதிகளே என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். பார்ப்பனியம் இந்நாட்டைவிட்டு ஒழிந்து, மக்களில் உயர்வு தாழ்வற்ற சமநிலையும், சகோதரப் பண்பும் ஏற்படும் வரையில் இனியும் நம்முடைய பிரசாரம் பார்ப்பனிய ஒழிப்பாகவேதான் இருக்குமேயன்றி, ஒருபோதும் பார்ப்பன ஒழிப்பாக இருக்காதென்பதை, நம்முடைய பிரசாரத்தைத் தவறாக எண்ணி நம்மீது கணைதொடுக்கும் அன்பர்கள் தங்கள் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம்.

நாம் எந்தக்காட்சிக்கும் விரோதிகளல்லர், எந்த இனத்துக்கும் விரோதிகளல்லர் என்பதை இன்னும் வலியுறுத்திக் கூறுகிறோம். எந்தக்கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், அந்தக் கட்சி செய்யும் காரியங்கள் நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கும்பட்சத்தில் அவற்றை நாம் எப்போதுமே வரவேற்றிருக்கிறோம் – வரவேற்போம். ஆனால், அதே கட்சி நாட்டுக்குத் தீங்குபயக்கும் காரியங்களைச் செய்ய முயலுமானால், அவற்றை நாம்கட்டாயம் எதிர்த்தே தீருவோம். இதனால் நம்மை ஒரு குறிப்பிட்ட கட்சியின் விரோதிகள் என்று கூறிவிட முடியுமா? நல்லது செய்வதை வரவேற்பதும், தீயது செய்வதை எதிர்ப்பதும் ஒரு கட்சியின் மீதுகொண்டுள்ள நட்பாலும் பகைமையாலும் ஏற்படுவதல்ல. நடுவு நிலைமை தாங்கிச்செய்யப்படும் செயல் என்றே இதனை விவேகிகள் கூறுவர்.

இதுபோலவேதான், எந்த ஒரு நல்ல காரியத்தையும் எந்த இனத்தவர் செய்தாலும் அதை நாம் வரவேற்போம் – பராட்டுவோம். ஒரு நல்ல காரியம் ஆச்சாரியாரால் செய்யப்பட்டாலும் சரி, அம்பேத்கரால் செய்யப்பட்டாலும் சரி அதனை நாம் ஒருபோதும் கண்டிக்க மாட்டோம். ஆச்சாரியார் செய்யக் கூடிய ஒரு கெட்ட காரியத்தை அம்பேத்கர் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் நாம், அம்பேத்கர் ஒரு பார்ப்பன ரல்லாதார் என்ற காரணத்துக்காக அதுவரை ஆதரிக்கமாட்டோம். அது போலவே அம்பேத்கர் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியத்தை ஆச்சாரியார் செய்தால், ஆச்சாரியார் ஒரு பார்ப்பனர் என்ற காரணத்துக்காக அவர்மீது பகைமை கொள்ள மாட்டோம் – பாராட்டுவோம். ஆகவே, நமக்கு, எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் மீதோ, ஓர் இனத்தின் மீதோ காரணமின்றிப் பகைமை கொள்ளும் பண்பில்லை. அதுபோலவே காரணமின்றி நட்புரிமை பாராட்டி நயவஞ்சகம் புரியும் நாசவேலையிலும் நாம் ஈடுபடமாட்டோம். நமக்குக் கொள்கை பெரிதேயன்றிக் குரோதம் பெரிதன்று, பேச்சைவிடச் செயலையே நாம் பெரிதாக மதிக்கிறோம். எனவேதான் பேசிப் பொழுது போக்குவதற்கன்றிப் பொதுமக்களின் நன்மையைக் கருதிச் செய்யப்படும் எந்த நல்ல காரியத்துக்கும் முட்டுக்கட்டையாக நிற்கும் இன்றைய சட்டசபையில் எட்டியும் பார்க்கக் கூடாதென்று தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கிறோம் – வேதனைப்படுகிறோம். கார்டை அரையணாவிலிருந்து முக்காலணா ஆகவும், கவரை ஒன்றரை அணாவிலிருந்து இரண்டணாவாகவும் ஆக்கப்படும் காருண்யத்தையும், முதலாளிகளுக்கு இப்போதிருக்கும் வரியையே மேலும் குறைக்கும் பரோபகாரச் செயலையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – பரிதாபப்படுகிறோம். அழுகிப் போகும் பழத்துக்கும் வரி, அன்றாட உணவுப் பொருள்களுக்கும் புதுவரி போடும் புத்திசாலித் தனமான அரசியல் நிர்வாகத் திறமையைக் காண்கிறோம் – கலங்குகிறோம்.

தோட்டிவேலை செய்யும் ஒரு தொழிலாளி தெருவில் போகிறான், அதே சமயத்தில் ஒரு பார்ப்பனனோ ஒரு பார்ப்பன மாதோ எதிரில் வருகிறார்கள்; தோட்டியைக் கண்டதும் அவர்கள் தவளைபோல் குதித்துத் தொலைவில் ஓடி ஒதுங்குவதையும் பார்க்கிறோம் – பரிதவிக்கிறோம் – தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்னத்தைச் சாதித்துவிட்டதென்று சஞ்சலப்படுகிறோம். முதலியார் ஐயரைப் பார்த்தவுடன், “அடியோ சாமி தண்டம்” என்கிறார்; ஐயர் முதலியாரைப் பார்த்தவுடன், “ஏண்டா ஏகாம்பரம் சௌக்கியமா இருக்கிறாயா” என்று கேட்கிறார்; திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் காண்கிறான் – கலங்குகிறான். இந்தப் பேதம் எப்போது ஒழியும் என்று எங்குகிறான் – பிரசாரத்தில் ஈடுபடுகிறான். ஆனால், இது பிராமணத்துவேஷம் என்று தூற்றப்படுகிறது.

திருச்சி இரத்தினவேலு யார்? சட்டசபையில் அவருடைய இடத்தில் இப்போதிருப்பவர் யார்? முத்துரங்கம் யார்? அவருடைய இடத்துக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நியமித்திருக்கும் ஆள் யார்? என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் யோசிக்கிறான் – தமிழ் நாட்டில், தமிழர்கள் சட்டசபை உறுப்பினர்களாக இருந்த இடங்களுக்குக் கூடப் பார்ப்பனர்தான் வரவேண்டுமா? அதற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த தமிழர்கள் அந்தந்தத் தொகுதிகளில் எவருமே இல்லையா? தேடியும் கிடைக்கவில்லையா? ஏன் பார்ப்பனரைத் தேடிப்பிடித்து நிறுத்தவேண்டும் என்று கேட்கிறான் – இது நேர்மையா? முறையா என்று மனம் பதறி மக்களிடம் பிரசாரம் செய்கிறான். ஆனால், காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறமாய்த் தெரிவதுபோல், நம் காங்கிரஸ் அன்பர்களுக்குத் திராவிடர் கழகத்தார் செய்யும் எந்தக் காரியமும் பார்ப்பனர் மீது பகைமை கொண்டு செய்யப்படும் காரியமாகக் காட்சியளிக்கிறது!

“நூற்றுக்கு மூன்றுபேர்கூட இல்லாத பிராமணர்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய தில்லை”என்று 1-3-49-இல் தாம்பரத்தில் தோழர் காமராஜர் அவர்கள் பேசியிருக்கிறார். செங்கற்பட்டு மாவட்டக் கிராமங்களில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போதுதான் இவ்விதம் பேசினார், செங்கற்பட்டுத் தொகுதிக்கு மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தோழர் முத்துரங்கம் அவர்கள் காலமானதால், அவருடைய இடத்துக்கு டாக்டர் சீனுவாச ஐயரைத் தேர்தலுக்கு நிற்கும்படி நியமித்து விட்டுத்தான்,

“நூற்றுக்கு மூன்று பேர் கூட இல்லாத பிராமணர்களைக் கண்டு நாம் பயப்படவேண்டிய தில்லை-”

என்று மார்தட்டிப் பேசுகிறார். செங்கற்பட்டு மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்த காமராஜருக்குத் தோழர் முத்துரங்கம் அவர்களுக்குப் பதிலாக ஒரு பார்ப்பனரல்லாதார்கூட அகப்படவில்லை. கட்சிப் பற்றுக் காமராஜருக்குக் குறுக்கே நின்றாலும்,பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர் பலர் செங்கற்பட்டு மாவட்டத்தில் இருக்கின்றனரே! அவர்களில் ஒருவரை நியமித்திருக்கலாமே! ஏன் அவ்விதம் செய்யவில்லை – செய்யமுடியவில்லை காமராஜரால்? பார்ப்பனரிடம் பயம் கிடையாது என்று பரபரப்புடன் பேசும் காமராஜர் கண்களுக்கு ஒரு பர்ப்பனன்தானே தென்பட்டார்! இங்கு மட்டுமா? திருச்சியில் இரத்தினவேலு அவர்களுக்குப்பதிலாக அங்கும் ஒருபார்ப்பனர்தானே தென்பட்டார்! ஏன் தமிழ்நாட்டில் இனி யார் இறந்தாலும் அந்த இடத்துக்கு ஒருபார்ப்பனர்தானே தென்பட்டார்! என், தமிழ்நாட்டில் இனியார் இறந்தாலும் அந்த இடத்துக்கு ஒரு பார்ப்பனர்தான் வரவேண்டுமென்ற ஏற்பாடு ஏதாவது காங்கிரசில் இருக்கிறதா? பார்ப்பனரிடத்தில் நமக்குப் பயம் இல்லையென்று பசப்புவதும், பின்னர் அவர்களைக் கண்டால் øக்கட்டி, வாய்பொத்தி, அடங்கி, ஒடுங்கி அவர்களுக்கே, நியாயம் நேர்மை அனைத்தையும்விட்டுச் சலுகை காட்டுவதும், எந்த ரகத்தைச்சேர்ந்த பேச்சென்று கேட்கிறோம்.

இதை நாம் கேட்டால், நம்மைப் பார்ப்பன விரோதிகள் என்று பச்சைப் பொய் பேசிப் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். தோழர் முத்துரங்க முதலியாரின் இடத்துக்கு டாக்டர்” சீனுவாச ஐயர் என்பவர் வரலாமா என்று கேட்பதைப் பார்ப்பனர்மீது கொண்டுள்ள துவேஷத்தால்தான் இப்படிக் கேட்கிறார்கள் என்று சிறிதளவு அரசியலறிவுள்ள எவனும் கூறமாட்டானே!

ஆனால், காமராஜர்களும் காளேஸ்வரராவ்களும் கூறுகின்றனர் இவ்விதம்!

periyar with kamarajarஇந்த இலட்சணத்தில் ‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ என்று விருதுநகரார் வீராப்புடன் கேட்கிறார். நந்தி கிராமத்துக்குக் காளேஸ்வரராவ்கள் தமக்குத் துணையாக நிற்கிறார்கள் என்ற தைரியத்துடன்! “கன்னடிய நாய்க்கர்களுக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை” என்று கேட்கும் காமராஜரை, “காஷ்மீர் நாட்டு நேருவுக்கும், பாம்பேய் பட்டேலுக்கும் தமிழ் நாட்டில் என்ன வேலை?” என்று நாம் கேட்டுவிட்டாலோ கோபம் கொதித்துக்கொண்டு கிளம்புகிறது காமராஜர்களுக்கு! வடநாடு தென்னாடு என்று பிரித்துப் பேசுகிறார்கள் – பிளவை உண்டாக்குகிறார்கள் என்று பிதற்றுகிறார்கள். “கன்னடிய நாய்க்கர் ஒருவர் வந்து தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கவேண்டியதில்லை; தமிழர்களுக்குத் தெரியும் தங்கள் உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள” என்று பேரிரைச்சல் போடும் காமராஜர், தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கப் பட்டேலும் நேருவும் பிறரும் வடநாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரவவேண்டுமென்று வாய் கூசாது கூறுகிறார். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறார்! கன்னட இராமசாமி, யார்? காஷ்மீர் நேரு, யார்? இதனை அறியச் சரித்திரமன்றோ படிக்க வேண்டும்! காமராஜருக்கு இது முடிகிற காரியமா? அவருக்கு எத்தனையோ தொல்லைகள்! பாவம், அவரால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? செங்கற்பட்டில் ஒரு சீனுவாச அய்யர் அகப்படமாட்டாரா? திருச்சியில் ஒரு கோபால்சாமி அய்யர் அகப்படமாட்டாரா? அதன் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குக் கன்னட இராமசாமியால் செய்ய முடியாத நன்மைகளைச் செய்து ‘நல்ல பேர்’ வாங்கும் பணியினைச் செய்து, கொண்டிருக்கும் போது, வேறு பணியில் அவர் எப்படி ஈடுபட முடியும்?

தோழர் காமராஜர் அவர்கள், ஒரு வகையில் பார்த்தால், அவர் உண்மையாகவே பிராமணர்களுக்குப் பயப்படத் தேவையில்லைதான். எப்படியென்றால், உண்மையாகவே பார்ப்பனரல்லாதார் வகிக்கவேண்டிய பதவியை அவர்களுக்கு வழங்காமல், பார்ப்பனர்களுக்கே கொடுக்கும்போது, அவர் ஏன் பார்ப்பனர்களுக்குப் பயப்படவேண்டும்? மாறாக அவர்களுடைய ஆசியும் அருளுமன்றோ அவருக்குக் கிடைக்கும்! ஆனால், பெரியார் இராமசாமியின் நிலை அப்படியல்லவே! அவர், பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனருக்கே, முறையும் நேர்மையும் தவறிக் கொடுக்கப்படுகிறதென்று கூறி அதற்காகப் பாடுபடுபவராயிற்றே! அவர் பார்ப்பனர்களுக்குப் பயப்படாவிட்டாலும், பார்ப்பனரின் பாதம் தாங்கிகளுக்குப் பயப்பட்டுத்தான் பார்ப்பனியத்தை ஒழிக்கும் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது. ஏனென்றால், பார்ப்பனிய ஒழிப்பு வேலை, இன்றைய பார்ப்பனப் பாதம் தாங்கிகளான பார்ப்பனரல்லாதாருக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது என்ற காரணத்தால்.

எனவே, நாம் பார்ப்பனருக்கு எதிரிகளல்லர், பார்ப்பனியத்துக்கே எதிரிகள் என்பதை இனிமேலாவது நம்மை நிந்திக்கும் அன்பர்கள் உணரவேண்டுகிறோம். இன்றில்லா விட்டாலும் இன்னும் சில காலத்திலாவது, நாம் பார்ப்பன ஒழிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தோமா அல்லது பார்ப்பனிய ஒழிப்பு வேலையில் தான் ஈடுபட்டிருந்தோமா என்ற உண்மையை இப்போது நம்மைக் கடிந்துரைக்கும் அன்பர்கள் கட்டாயம், உணர்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் நமக்கிருக்கிறது. நம்மால் செய்யப்பட்டுவரும் பார்ப்பனிய ஒழிப்பு வேலைகளில் சில, இப்போது நம்மைப் பார்ப்பன விரோதிகள் என்று கூறுபவர்களாலேகூட, அவர்கள் அறியாமலேயே செய்யப்படும் நிலைமையை நம்முடைய பிரசாரம் உண்டாக்கிவிட்டிருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

– அண்ணா 6.3.1949

நன்றி : அண்ணாவின் படைப்புகள்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s