வாழ்க்கை வழிகாட்டி – அண்ணா

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். “ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேராபத்து வந்துவிடுமோ?” என்று நாடு கலங்கிற்று.

எதிர்பாராத ஆபத்து எவரும் கனவும் கண்டிராத விதத்தில் ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது கயவனின் கைத்துப்பாக்கியினால்.

remainsஇந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுத்துவதற்காகவும் அந்த மார்க்கத்தை சூதுக்கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன்படுத்திக்கொள்ளும் கொடுமையை நீக்குவதற்காகவும் பாடுபட்டவர்களை அந்த மதத்தைக் கெடுக்கிறவர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு கேவல புத்தி படைத்தவர்கள் கருத்து வேற்றுமையைச் சாக்காகக்கொண்டு காட்டுமிராண்டித்தனத்தைக் கையாண்டு படுகொலை பல செய்துள்ளனர். மதச் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.

இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங்களை மத வெறிகொண்டோரும் ஆதிக்கக்காரர்களும் விரும்பவில்லை.

சில காலமாகவே வடநாட்டிலே சில பத்திரிகைகளில் காந்தியார் மீதும் அவர் சகாக்கள் மீதும் பலாத்கால வெறிச் செயல்களைத் தூண்டும் முறையிலேயே கூட எழுதப்பட்டு வந்தன.

அவருடைய மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டங்களிலே சென்று கலகம் விளைவிக்கவும் அவர் இந்து மார்க்கத்தைக் கெடுக்கிறார் என்று கூச்சலிடவும் செய்தனர்.

இரண்டோர் நாள், இந்தச் செயல்களின் காரணமாக அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறாமலே கூடப் போயின.

ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திலும் அவர் இந்தத் தவறான போக்கை விளக்கி அன்பும் விவேகமும் மலர வேண்டும் என்று அறிவுரை கூறியபடியே இருந்தார்.

அதே முறையிலே தமது அரிஜன் பத்திரிக்கையிலும் எழுதிக்கொண்டிருந்தார். தமது நோக்கத்தின் தூய்மையை விளக்கி வந்தார்.

வெறியர்கள் திருப்தி கொள்ளவில்லை. வெளிப்படையாகவே இது தெரியலாயிற்று.

சின்னாட்களுக்கு முன்பு அவர் நாட்டு மக்களின் அகத்தூய்மையைக் கோரி, உண்ணாவிரதமிருந்தார். ஆபத்தான நிலை. அந்த சமயத்திலே அவர் தங்கிருந்த பிர்லா மாளிகை முன் ஒரு சிறு வெறிக்கும்பல் கூடி ‘அவர் சாகட்டும்’ என்று கூவிற்று. அது சமயம் அங்கு வந்திருந்த பண்டித நேரு பதறிப்போனார். அந்தக் குப்பலைக் கண்டித்து துரத்தினார்.

பிறகோர் நாள், பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் வேறோர் பித்தன் வெடிகுண்டு வீசினான்.

அதற்குப் பிறகோர் நாள், பண்டித நேருவின் கூட்டத்தில் வெடிகுண்டும் கையுமாக மற்றொருவன் பிடிபட்டான். அவன் ஒரு சீக்கியன் என்று செய்தி கிடைத்தது.

இவைகளுக்கெல்லாம் முன்னே, அன்பர் ராஜகோபாலச்சாரியாரின் மோட்டார் மீது எவனோ ஒருவன் சுட்டிருக்கிறான்.

இந்தக் கோரக் கொலை நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பிர்லா மாளிகையிலே அவர் தங்கியிருந்த அறையின் பக்கம் எவனோ ஒருவன் நுழைந்து, “யார்? என்ன?” என்று கேட்டபோது பேந்தப் பேந்த விழித்தான் என்று சேதி வந்தது.

இப்படிப் பலவிதமான முயற்சிகளைச் செய்து வந்தனர் பாதகர்கள்.

கடைசியில், பிரார்த்தனைக் கூட்டத்தில் அவருக்கு எதிரே நின்று, திரளான மக்கள் கூடியிருந்த மன்றத்தில், கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான் காதகன்.

இத்தகைய படுகொலைகள் மூலம் ஆதிக்கத்தைப் புகுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வேலை செய்யும் ஒரு சதிகாரக் கும்பல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. சர்க்கார் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதுடன் நாடெங்கும் எவ்விதமான நிலைமையையும் சமாளிக்கத்தக்க முன்னேற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இந்தத் துக்ககரமான சம்பவத்தால் நாடு தன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதுதான் நானிலமெங்குமுள்ள நல்லறிவாளர்களின் வேண்டுகோள்; அறவுரை.

சதிச்செயலைக் கண்டுபிடித்து, அவர்களைச் சட்டம் தண்டிக்கும். சர்க்காருக்கு அதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. நமது ஒற்றுமையுடன் கூடிய நிலை அதற்குப் பக்கபலமாக நிற்க வேண்டும். ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையைப் பெற்று அந்த சாசனத்தைத் தயாரிக்கும் அரும்பணியிலே ஈடுபட்டு அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் சுழல் துப்பாக்கியைக்கொண்டு அவ்வளவு பேரையும், ஏழு அமைச்சர்களையும், சுட்டுக் கொன்றான் பர்மாவில் சில காலத்துக்கு முன்பு. இன்றும் குண்டு பாய்ந்த அந்தச் சடலங்களை வைத்துக்கொண்டுள்ளனர். அமைச்சர்களை, அவர்களின் தலைவர் அவுங்சானைச் சுட்டு வீழ்த்தினால் அரசு கவிழ்ந்துவிடும் என்று அறிவிலிகள் எண்ணினர். ஆனால் பர்மா நிதானம் தவறாமல், துக்கத்திலே தன் மனதைப் பறிகொடுத்துவிடாமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கடமையைச் செய்து வருகிறது. அது நம் அண்டை நாடு. சிறிய நாடுதான். அந்தச் சிறிய நாடு காட்டிய பெரிய உறுதி நமக்கும் வேண்டும். மனக்குழப்பம் மனமாச்சரியம் எழக் கூடாது. உலகின் கண்கள் நம் மீது பாய்ந்துள்ள நேரம். உரிமை கிடைத்துள்ள வேளை. உலுத்தர் சிலரின் செயலால் உள்ளம் கெட்டுவிட இடந்தராமல் உறுதியுடன் நின்று நாட்டுநிலையைக் காப்பாற்றுவோமாக !

கா. ந. அண்ணாதுரை, க. மு.
திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்

(காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட 30.1.1948ஆம் நாள் எழுதப்பட்டது)

நன்றி :: நூலடுக்கு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s