பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை

தன்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவும் மறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றியும் அவர் தலைமையில் நடந்த மாபெரும் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளையும் மறைக்க தொடர்ந்து விவாதித்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தும்போது இந்த நிலை ஏற்படத்தான் செய்யும். நானும் பலருடன் இது பற்றி விவாதித்திருக்கிறேன். புனா ஒப்பந்தம் எங்களுக்கு பெருந்தீங்கு விளைவித்து விட்டது என்று கூறும் பலருக்கு புனா ஒப்பந்தத்தைப் பற்றி சரியான புரிதலே இல்லை. புரிதலை விடுங்கள், அது சம்பந்தமான தகவல்களே தெரியவில்லை. அது மிகவும் வருத்தமாக இருந்தது. உண்மையில் நடந்ததைத் தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்கலாம். தெரிந்து கொள்ளாமலே விலக்கித் தள்ளுவதால் யாருக்கு நன்மை?

காந்தியடிகள் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரும், உண்ணாவிரதம் இருக்கும்போதும் தன்னுடைய கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நான் தனித் தொகுதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறேன். இட ஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த உண்ணாவிரதம் தொடங்கக் காரணம். 1931ல் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டின் போது தனித்தொகுதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் ஆங்கில அரசாங்கத்தில் கேட்கிறார்கள். மத சிறுபாண்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதையும் ஆங்கில அரசாங்கம் திட்டமிடுகிறது. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டின் நோக்கம், கலந்து கொண்டவர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக பார்த்தாலே புரியும், ஆங்கில அரசாங்கத்தின் சூழ்ச்சி, மறைமுகத் திட்டம் எல்லாம். இந்தியா என்ற நாடு தனித் தனிப் பிரிவுகளாக, குழுக்களாகப் பிரிந்துதான் கிடக்கின்றன. அவர்களை ஒற்றுமைப் படுத்தவே முடியாது. ஆகவே ஒட்டு மொத்த இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கை என்பதை நமக்குத் தெரிவிப்பதற்காகக் கூட்டப்பட்டதுதான் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு.

இரட்டை மலை சீனிவாசன் மற்றும் இதர தலைவர்களுடன்

இரட்டை மலை சீனிவாசன் மற்றும் இதர தலைவர்களுடன்

வட்ட மேஜை மாநாட்டின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் நாங்கள் வெறுங்கையுடன் திரும்பிவிட்டோம் என்று அறிவித்து விட்டார்கள். சிறிது நாளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனித்தொகுதிகளை உள்ளடக்கிய ஆணையை ஆங்கில அரசாங்கம் வெளியிடுகிறது.

இது நம்மிடையே பிரிவினையை வளர்க்கும். மதச் சிறுபாண்மையினருக்குத் தனித் தொகுதி என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்கள் காலங்காலமாக அந்த மதத்தில் தான் இருக்கப் போகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கப் பட வேண்டியவர்கள். நிரந்தரமான அமைப்பு அல்ல. தீண்டாமை அநீதி. ஆகவே அதைப் போக்க வேண்டும். அடியோடு அகற்றப்பட வேண்டும். அதற்குத் தனித் தொகுதி தீர்வாகாது என்பதுதான் காந்தியடிகளின் நிலைப்பாடு.

பன்னெடுங்காலமாக பழகி வந்த ஒரு பழக்கத்தை அடியோடு அகற்றுவதற்கு இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் காந்தியடிகள். ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பிவிட்டார். ஒரே ஒருவர் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்காகத் திறந்துவிடப்படுகின்றது. ஒட்டு மொத்த இந்தியாவே மின்சாரம் பாய்ச்சப்பட்டதுபோல உணருகிறது.

ஆங்கில அரசாங்கம், உண்ணாவிரதம் பற்றிக் குறிப்பிட்டு காந்தியடிகள் எழுதிய கடிதத்திற்கு பதிலில் “சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் முரண்பாடான கோரிக்கைகளைப் பரிசீலித்து திறந்த மனதுடன் அரசாங்கம் செய்த முடிவை மாற்றுவதற்கு அந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பேசி உடன்பாட்டுக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்கத்தின் முடிவை மாற்றுவது சாத்தியப்படும். இது தான் உங்கள் கடிதத்திற்கு என்னுடைய பதில்” என்று பிரிட்டிஷ் பிரதமர் மெக்டொனால்டு கூறிவிட்டார். ஆங்கில அரசுக்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்கள் உட்கார்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாது என்று மிகவும் நம்பிக்கையோடு இந்த உறுதிமொழியைக் கொடுத்து விட்டார்கள். இதுபற்றி தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக இருந்த திரு.எம்.சி.இராஜா அவர்கள் இதுபற்றி பேசும்பொழுது “ஒருமனதான உடன்படிக்கை (கருத்து) என்று பேசுவது இந்தியர்களைப் பிரித்து வைக்கின்ற தந்திரம், தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டுத் தொகுதி முறையை ஆதரிக்கிறார்கள். ரிஷர்வேஷன் உள்ள கூட்டுத் தொகுதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்ற பிரதமர் ஏன் கூறுகிறார்? பிரதமரின் தீர்ப்பு எங்களை சமூகத்திலிருந்து பிரிக்கிறது. அரசியலில் தீண்டத்தகாதவர்களாகச் செய்கிறது. சாதி இந்துக்கள் எங்கள் வாக்குகளைக் கேட்டு வருவார்கள் என்பதால் இன ஒதுக்கல் கிடையாது என்று பிரதம மந்திரி கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆம், அவர்கள் எங்கள் வாக்குகளைக் கேட்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடைய வாக்குகளைக் கேட்டுப் போகத் தேவையில்லை. இது பொதுவான குடியுரிமை ஆகுமா?” என்று அழுத்தமாக வாதிடுகின்றார்.

காந்தியடிகளின் உண்ணாவிரதம் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த ஒரே நபர் காந்தியடிகள்தான். இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் என்று அனைத்து சார்பாரும் இதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. கூடி விவாதிக்கிறார்கள். இரு சாராரும் விட்டுக் கொடுக்கிறார்கள். முடிவாக ஒரு உடன்பாட்டுக்கு வருகிறார்கள். அந்த உடன்பாடு காந்தியோடு கலந்து ஆலோசித்துத்தான் ஏற்படுகின்றது.

எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. எது நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அது நடக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் அன்றைய தினம் இந்து உடன்பாட்டை ஏற்றுக் கொண்டது.

இந்த உடன்படிக்கையின் விபரங்களின்படி தனித்தொகுதிகள் என்ற முறையில் தேர்தல்கள் நடைபெறும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒற்றை வாக்குச் சீட்டு நான்கு வேட்பாளர்களை பட்டியலுக்குத் தேர்வு செய்வார்கள். அந்த முதனிலைத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற நான்கு நபர்கள் பொதுத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களாக இருப்பார்கள். இந்த உடன்பாட்டின்படி மொத்தத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அம்பேத்கர் அவர்கள் மாநிலவாரியாக மக்கள் தொகை அடிப்படையில் மாகாண சட்டசபைகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கேட்ட இடங்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இடங்கள் மற்றும் இந்த உடன்படிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் என்ற மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

poona pact seats sharing

மாகாண சட்டசபைகளில் 71 இடங்கள் என்பதற்கு மாற்றாக 148 இடங்கள் கிடைத்தன. ஆனால் இரட்டைவாக்குரிமை மாற்றியமைக்கப்பட்டு தனித்தொகுதி எனும் ஒதுக்கீட்டு முறை ஒத்துக் கொள்ளப்பட்டது.

இந்த உடன்பாட்டை ஆதரித்து பம்பாயில் செப்டம்பர் 27ஆம் நாளன்று நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் பேசுகிறார். “இந்தியாவின் தலைசிறந்த மனிதருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் என்னுடைய சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்புடன் மகாத்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருடைய நலன்களுக்கு அவசியமான பாதுகாப்பையும் அமைத்தோம். சமரசப் பேச்சு வார்த்தைகள் மகாத்மா காந்திஜியால் தான் வெற்றியடைந்தன. அவரைச் சந்தித்துப் பேசியபொழுது அவருக்கும் எனக்கும் உள்ள பொதுவான அம்சங்களை நினைத்து நான் அதிகமாக வியப்படைந்தேன். வட்ட மேஜை மாநாட்டில் எனக்கு எதிரான நிலையெடுத்தவர் என் உதவிக்கு வந்தார், மாற்றுத் தரப்புக்கு அல்ல என்பது எனக்கு வியப்பளிக்கிறது. சிக்கலான நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக நான் காந்திஜிக்கு நன்றி செலுத்துகின்றேன். காந்திஜி வட்ட மேஜை மாநாட்டில் இந்த நிலையை எடுக்கவில்லை என்பதைப்பற்றி நான் வருந்துகின்றேன். அன்று அவர் என் கருத்தை அனுதாபத்தோடு பரிசீலித்திருந்தால் இந்த அக்னிப் பரீட்சையைத் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அவை கடந்த கால விஷயங்கள். இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். தாழ்த்தப்பட்ட பிரிவினர் எல்லோரும் இந்த உடன்பாட்டை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியைப் பத்திரிக்கைகள் எழுப்பியுள்ளன. என்னைப் பொறுத்த மட்டில் என் தலைமையிலுள்ள கட்சியைப் பொறுத்த மட்டில் நாங்கள் உடன்பாட்டை ஆதரிக்கிறோம். இங்கு வந்திருக்கின்ற எனது நண்பர்கள் சார்பிலும் உடன்பாட்டுக்கு ஆதரவை அறிவிக்கின்றேன். இதைப்பற்றி சந்தேகம் வேண்டாம்…… இந்து சமூகம் இந்த உடன்பாட்டைப் புனிதமாகக் கருத வேண்டும். கௌரவமான உணர்சசியுடன் அதை அமுலாக்க வேண்டும்.” அம்பேத்கர் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் வந்தது.

அன்றைய சூழலில் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள், இந்து அமைப்புகள், தாழ்த்தப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று அனைவரும் உட்கார்ந்து பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் ஒவ்வொரு குழுவினரும் எவ்வளவு தூரம் போராடியிருப்பார்கள், விட்டுக் கொடுத்திருப்பார்கள்? இந்திய சமூகம் எவ்வளவு சிக்கல்களைக் கொண்டது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்கால இந்திய சமூகத்தையும், அதனுடைய வளர்ச்சியையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான் அந்த உடன்படிக்கை. இவையெல்லாம் 1932ல் முடிந்துவிட்டது.

ஆனால் 1945ல் அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் (What Congress and Gandhi have done for Untouchables)  இந்த உடன்படிக்கையையும், காந்தியையும், காங்கிரஸையும், இந்த உண்ணாவிரதத்தையும் கடுமையாகச் சாடுகிறார். அந்த உண்ணாவிரதத்தில் எந்தப் புனிதமும் கிடையாது, அந்த உண்ணாவிரதம் தீண்டத்தகாதவர்களின் நன்மைக்காக இருக்கவில்லை. ஆதரவற்ற மக்களுக்கு ஆங்கில அரசாங்கத்தால் கிடைத்த சட்டரீதியான பாதுகாப்பை பறிக்க அவர் எடுத்துக் கொண்ட மோசமான வழிமுறை என்று விவரிக்கிறார். இதுதான் இன்றைய தலைமுறையினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அடிப்படை. ஆனால் அதே அம்பேத்கர் 1954ல் BBCக்கு ஒரு பேட்டி அளிக்கின்றார். அதில் அவர், புனா ஒப்பந்தத்தில் தங்களை நிர்பந்தப் படுத்தினார்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு “என்னுடைய மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை, நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறினேன். காந்தி அதை ஒப்புக் கொண்டார்  (I dictated Gandhi). மாளவியா மற்றும் சில தலைவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்கள். நான் தனித் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனால் ஒரு மாற்றுத் திட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தேன். தனித்தொகுதி என்பதை இதுபோல மாற்றிக் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதன்படி தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பின் சார்பாக நிற்கும் வேட்பாளர்கள் முதலில் தங்களுக்குள் ஓட்டளித்து நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு முதன்மை தேர்தல் போல (Primary election).  இந்த நான்கு பேரும் தேர்தலில் நிற்பார்கள். இந்த நால்வரில் சிறந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீங்களாக ஒருவரை நிறுத்தக் சுடாது. இந்த முறை மூலம் பாராளுமன்றத்தில் எங்களுடைய குரலை ஒலிக்க முடியும். பிறகு காந்தி இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் இதன் பலனை 1937ல் நடந்த ஒரேயொரு பொதுத் தேர்தலில்தான் அனுபவித்தோம் (But  we  have benefited in only one election in 1937).”

“காந்தி திரும்பத் திரும்பப் பேரம் பேசினார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். உங்களுடைய வாழ்க்கையை காப்பாற்றுகிறேன். ஆனால் என்னுடைய மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்து உங்கள் உயிரைக் காப்பாற்ற மாட்டேன் என்று அழுத்தமாகக் கூறிவிட்டேன்.”

ஆக, புனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் எவ்வாறு தயாரானது, அதில் நடந்த விஷயங்களை அம்பேத்கர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப்படிப்பவர்கள் இந்த வரலாற்று உண்மைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதில் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அன்று ஓட்டுரிமை சொத்து வைத்திருந்தவர்களுக்கும், படித்த, வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. அப்படி எடுத்துக் கொண்டால் எத்தனை சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓட்டுரிமை பெற்றிருப்பார்கள்? எண்ணிப் பார்க்க வேண்டும். சைமன் கமிஷன் முன்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் வயது வந்தோருக்கான வாக்குரிமையோடு எங்களுக்கென்று இட ஒதுக்கீடு வேண்டும் (We  claim reserved seats if accompanied by adult franchise) என்றார். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால்? என்று கேட்கப்பட்டது. அப்போது எங்களுக்கென்று தனித் தொகுதி வேண்டும் என்று கேட்போம் என்றார்.

ஆக வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினால் இட ஒதுக்கீடு போதும் என்பதே சைமன் கமிஷன்முன் அம்பேத்காரின் நிலைப்பாடு. புனா ஒப்பந்தத்திலும் நடந்தது அதுதான். இதில் குறை சொல்வதென்றால் யாரைக் குறை சொல்வது?

1945ல் காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தது என்று எழுதிய அம்பேத்கருக்கு மக்களே தீர்பபளித்தார்கள். 1946ல் நடந்த தேர்தலில் அம்பேத்கரின் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆங்கில அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக பாபு ஜெகஜீவன்ராம் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

காங்கிரஸ் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தது என்ற கேட்ட அம்பேத்காரை பம்பாய் சட்டமன்றத்தின் மூலமாக அரசியல் நிர்ணயசபையின் உறுப்பினராக்கி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் குழுவுக்கு தலைவராகவும் நியமித்தது.

நேரு ஒரு பிராமணர். அவருடைய எந்த எழுத்திலும் தீண்டாமையைப் பற்றி எழுதவேயில்லை என்று எழுதிய அம்பேத்கரை நேருஜீ தன்னுடைய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக்கி அலங்கரித்தார்.

கிராமத்தில் உள்ள படிப்பறிவில்லாத ஏழைகளும், கூலிகளும் காந்திக்கு பின்னால் அணிவகுத்து நின்று அன்றைக்குச் சொன்ன செய்தியைத் தான் தாழ்த்தப்பட்ட பிரிவினருடைய தலைவர் எம்.சி.ராசா கூறினார். “தாழ்த்தப்பட்ட பிரிவினரை அவர்தான் காப்பாற்ற முடியும். இந்தப் பிரச்சனையில் உலகத்தின் கவனத்தைத் திருப்பியதற்காக அந்தப் பிரிவினர் அவரிடம் நன்றி பாராட்டுகிறார்கள்”.

ஏதோ தீண்டாமை விலக்கு என்பது 1931ல் காந்தி எடுத்துக் கொண்ட விஷயமல்ல. அவருடைய குழந்தை பருவத்தில் இருந்தே அதுபற்றி தீவிரமான கருத்தைக் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவரின் கழிவுப் பானையை சுத்தம் செய்ய மறுத்த மனைவியையே வெளியே போ என்று தென் ஆப்பிரிக்காவில் சொன்னவர். தன்னுடைய எழுத்துக்கள் நவஜீவனுக்குச் சொந்தம் என்று எழுதிய காந்தி அதில் வரும் வருமானத்தில் 25% இன்றும் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய சமாதியில் இருக்கும் உண்டியலில் சேரும் பணம் முழுக்க ஹரிஜன சேவைக்காகத் தான் பயன்படுத்தப்படுகிறது. இபபடி ‘செத்தும் கொடுக்கும் சீதக்காதி’ யை நாம் எற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதுதான் இந்திய ஒருமைப்பாடடுக்கும் ஜாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறோம்?

-அ.அண்ணாமலை, இயக்குனர், தேசிய காந்தி அருங்காட்சிகம்,புது தில்லி

Related Post :: Message to the Members of the Interim Government (1946)

INTERVIEW TO P. N. RAJBHOJ

Resolution at the Hindu Leaders Conference,Bombay

Advertisements

One thought on “பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை

  1. Pingback: புனா ஒப்பந்தத்தில் வங்காள (சாதி)இந்துக்களுக்கு உடன்பாடில்லை – தாகூர் | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s