வக்கீல்,வக்கீல் தொழில்,நீதிபதிகள் குறித்து தீர்க்கதரிசி காந்தி…

வக்கீல்களும் மனிதர்களே. ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணமும் ஏதாவது இருக்கும்.

வக்கீல்கள் ஒரு நல்ல காரியம் செய்ததாக ஏதாவது சம்பவங்கள் இருக்குமானால், அந்த நன்மை வக்கீல்கள் என்பதை விட, மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் செய்ததாகும்.

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது. இத்தொழில் கவர்ச்சியில் இருந்து காக்கப்பட்டிருப்பவர்கள் மிகச்சிலரே.

இந்துக்களும், முஸ்லிம்களும் சச்சர விட்டுக்கொண்டால் அதை யெல்லாம் மறந்து விடுமாறு சாதாரண மனிதன் கூட அவர்களைக் கேட்டுக் கொள்வான்; இருதரப்பாரும் ஏதோதோ தவறு செய்திருக்கலாம் என்று அவர்களிடம் சொல்லி, இனியும் சண்டைப்போட்டுக் கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்கு புத்திமதி கூறுவான்.

ஆனால், வக்கீல்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு உதவியாய் இருந்து அந்த கட்சிக் காரர்களுக்கே புலப்படாத புதியதான வழிகளையும், வாதங்களையும் கண்டு பிடிப்பதை வேலையாக செய்கிறார்கள். அப்படிச் செய்யவில்லை என்றால், தங்கள் தொழிலின் கௌரவத்தில் குறைந்த வர்களாக கருதப்படுவதாக நினைக்கிறார்கள். ஆகையால், வக்கீல்கள் சண்டை சச்சரவை குறைப்பதற்கு பதிலாக கூட்டுகிறார்கள்.

மேலும் இத்தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை. பணக்காரர் ஆவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.

தகராறுகள் அதிகரிப்பதனாலேயே அவர்களுக்கு நன்மை உண்டு. மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.

சின்ன வக்கீல்கள் உண்மையிலேயே தகராறுகளை உண்டு பண்ணுகின்றனர். இவர்களுடைய தரகர்கள் எத்தனையோ பேர் அட்டைகளைப் போல ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.

gandhi as attorneyவக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். ஆடம்பர வாழ்க்கையை நடத்துவதற்காக, இத்தகைய தொழிலுக்கு வருகின்றனர்.

தம்தொழில் மிகவும் கௌரவமானது என்று வக்கீல்கள் தாங்களே கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தம் பெருமைகளை தாமே உண்டாக்கி கொள்வதைப் போலவே அவர்கள் சட்டங்களையும் தாமே உண்டாக்கு கின்றனர்.

என்ன கட்டணம் வாங்குவது என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளுகின்றனர். அவர்கள் தெய்வப்பிறவியோ ஏன்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளுகின்றனர்.

சாதாரண தொழிலாளியை விட அவர்கள் அதிகக்கட்டணம் விரும்புவானேன்? அவர்களுடைய தேவை அதிகமாக இருப்பானேன்? தொழிலாளர்களை விட நாட்டிற்கு எந்த வகையில் அவர்கள் உதவியுள்ளவர்கள்? நல்லதை செய்கிறவர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கு உரிமை பெற்று இருக்கிறார்களா?

நாட்டிற்கு ஏதாவது நன்மையைப் பண ஆசைக்காக செய்திருந்தால் அதை நல்லதென்று எப்படிக்கொள்ள முடியும்?

இந்து முஸ்லிம் சச்சரவுகள் அடிக்கடி வக்கீல்கள் தலையிடுவதாலேயே ஏற்படுகின்றன என்பதை இச்சச்சரவுகளைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் உணர்வர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன. இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக் கிறார்கள்.

வக்கீல்களின் உபதேசங்களுக்குட்டபட்ட சமஸ் தானங்கள் கடன் சுமை மிகுந்தவைகளாக ஆகி விட்டன. பலர் தம் உடைமைகளை இவர் களாலேயே பறிகொடுத்து நிற்கின்றனர். இவை போன்ற உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், அவர்கள் நாட்டிற்குச் செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை அவர்கள் இங்கே பலப்படுத்தி இருப்பதே யாகும். நீதிமன்றங்கள் இல்லாமல் தங்கள் அரசாங்கத்தை ஆங்கிலேயர்கள் இங்கே நடத்திக்கொண்டு போவது சாத்தியம் என நினைக்கிறீர்களா?

மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கி கொள்ள விரும்பு பவர்கள், இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்.

தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்தவித ஆதிக்கத்தையும் செலுத்தமுடியாது.

சண்டையின் மூலமோ அல்லது தங்களுக்காக முடிவு செய்யும்படி தங்களுடைய உறவினரைக் கேட்டுக் கொள்ளுவதன் மூலமோ மனிதர் தகராறுகளைத் தீர்த்துக் கொண்டுவந்த காலத்தில் அவர்கள் மனிதத் தன்மையின் வரம்பை மீறிச் சென்றதில்லை.

கோர்ட்டுகளுக்கு போகத்தலைப்பட்ட பிறகே அவர்கள் மனிதத் தன்மையில் குறைந்தவர் களாகவும், கோழைகளாகவும் மாறினர். சண்டையிட்டு அதன் மூலம் தகராறில் ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பது நிச்சயம் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஓர் அறிகுறியேயாகும்.

எனக்கும் உங்களுக்கும் மத்தியில் மூன்றாம் நபரை அழைத்து தகராறைத் தீர்த்துக் கொள்வது மிருகத்தனத்தைத் தவிர, வேறு என்ன? மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிட, போவதில்லை என்பது நிச்சயம்.

எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். நம் அறியாமையாலும், எதையும் நம்பும் தன்மையாலும், முன்பின் தெரியாத ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு நமக்கு நீதியை வழங்குகிறார் என்று நாம் எண்ணுகிறோம்.

வக்கீல்கள் இல்லா விட்டால் கோர்ட்டுகளை அமைத்திருக்கவோ அல்லது அவற்றை நடத்தி இருக்கவோ முடியாது. கோர்ட்டுகள் இல்லாமல் ஆங்கிலேயரால் ஆள முடிந்திருக்காது என்பது முக்கியமாக நாம் நினைவில் கொள்ள வேண்டிய விசயமாகும்.

ஆங்கிலேய நீதிபதிகள், ஆங்கிலேய வக்கீல்கள், ஆங்கிலேய போலீஸ்காரர்கள் ஆகியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஆங்கிலேயரை மட்டுமே அவர்களால் ஆளமுடியும். இந்திய நீதிபதிகள், இந்திய வக்கீல்கள் இல்லாமல் ஆங்கிலேயரால் எதுவும் முடியாது.

ரூ.30 கிடைக்குமிடம் -  மதுரை காந்திய இலக்கியச் சங்கம்  அன்புசிவன் (9444058898)

ரூ.30
கிடைக்குமிடம் –
மதுரை காந்திய இலக்கியச் சங்கம்
அன்புசிவன் (9444058898)

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்துக்கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைக் குறித்து, எனக்கு இருந்து வரும் வெறுப்பே, உங்களுக்கும் ஏற்படும்.

வக்கீல்கள் தங்கள் தொழிலை கைவிட்டு விட்டால், ‘‘விபச்சாரத்தைப் போல இத்தொழிலும் இழிவானது’’ என்று கருதிவிட்டால், ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்துவிடும்.

மீன் நீரை விரும்புவது போல சச்சரவுகளையும், கோர்ட்டுகளையும் விரும்புவோர் என்று நம்மைப்பற்றி குற்றங் கூறப்படுவதற்குக் காரண கர்த்தர்களாக இருப்பவர்கள் வக்கீல்களே.

வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும்.

காந்தி 1909 – ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 – வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s