“என் வாழ்வே எனது செய்தி” – மகாத்மா காந்தி

1947 புதுதில்லி சுதந்திரக் தினக் கோலாகலங்களைப் புறக்கணித்து மகாத்மா காந்தி கல்கத்தாவில் மதக்கலவரங்களினின்றும் அமைதி காக்கச் சென்று தங்கிய வரலாற்றை ஆதாரபூர்வமான விவரங்களுடன் அ. அண்ணாமலை தெளிவுபடக் கோத்தளித்துள்ளது (“தினமணி’ 15-8-2012) சிலாகிக்கத்தக்கது.

 ஆகஸ்ட் 14 – 15 நள்ளிரவில் தலைநகரில் அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த அவைத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தமது தொடக்க உரையில், “”சென்ற முப்பது ஆண்டுகளாக நமது சுதந்திர இயக்கப் பாதையில் வழிகாட்டும் பேரொளியாகத் திகழ்ந்து நம்மை வெற்றிச் சிகரத்துக்கு இட்டுச் சென்றவரும், தத்துவ தரிசியுமான மகாத்மா காந்தி நம் அனைவரின் மட்டற்ற மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரித்தானவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

@sabarmati ashram

@sabarmati ashram

அதையடுத்து ஜவாஹர்லால் நேரு தமது உணர்ச்சிகரமான பேருரையில் காந்திஜியை நினைவுகூர்ந்து இவ்வாறு பகன்றார்: இன்றைய தினம் நமது முதற்கண் நினைவுகள் இந்திய சுதந்திரத்தை நிர்மாணித்த சிற்பியான நமது தேசப்பிதாவையே சாரும்.

 பாரதப் பாரம்பரியத்தின் திருஉரு அவர். விடுதலை ஒளிப்பந்தத்தைத் தூக்கிப்பிடித்து நம்மைச் சூழ்ந்திருந்த காரிருளைக் களைந்து இந்தியாவை ஒளிமயமாக்கினார்.

 சென்ற காலத்தில் பல சமயம் நாம் அன்னாரது அறிவுரைகளினின்றும் பிறழி வழிதவறிச் சென்றோம். எனினும், நாம் மட்டுமல்ல, நமது வருங்காலச் சந்ததியரும் இந்தியத் தவப்புதல்வராம் மகாத்மா காந்தியின் அரிய அறிவுரைகளை இதயத்தில் பதிப்போமாக.

 திட நம்பிக்கையும், மன உரமும், துணிவும், அதேசமயம் பணிவும் ஒருங்கே திரண்ட மகோத்தமராகக் காந்திஜி திகழ்கிறார். புயல் வீசினாலும் அல்லது மழைகலந்த சூறாவளி குமுறினாலும் அவர் அளித்த சுதந்திர ஒளிப் பந்தத்தை நாம் ஒருபோதும் அணையவிட மாட்டோம்”.

 ஆகஸ்ட் 15 காலையில் சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற மவுண்ட்பாட்டன் பிரபு பின்வருமாறு அறிவித்தார்.

 “”இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இனி நான் உங்கள் ஊழியன்.

 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அகிம்சை வழியில் இந்திய சுதந்திரத்தைச் செதுக்கி உருவாக்கிய மகாத்மா காந்திக்கு இந்தியா காலங்காலமாகக் கடமைப்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.

 அன்னார் இப்போது இங்கே நம்முடன் இருக்க இயலாமற்போனது நமது பேரிழப்பே ஆகும். அதைப்பற்றி நாம் எவ்வாறு வருந்துகிறோம். இங்கில்லாவிடினும் அவர் நம் அனைவரின் நினைவில் எத்துணை ஆழமாகப் பதிந்து நிலைகொண்டுள்ளார் என்பதை அவர் அறிவாராக…”

 கல்கத்தாவில் ஹைதரி மன்ஸில் என்ற பழைய கட்டடத்தில் தங்கியிருந்த காந்திஜி, சுதந்திர தினத்தை உபவாசம் அனுஷ்டித்தும், கைராட்டையில் நூல் நூற்றும் அமைதியாகக் கழித்தார். அந்நகரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

 மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் உயர் அதிகாரி காந்திஜியை அணுகி, பத்திரிகைகளில் பிரசுரிக்க அன்னாரது சுதந்திர தின அறிக்கை அல்லது செய்தி வேண்டினார். “”என்னத்தைச் சொல்ல? நான் வெதும்பி வறண்டு போய்விட்டேன்” என்று மறுதலித்தார் மகாத்மா. “”இத் தருணத்தில் உங்கள் ஆசிச்செய்தி இல்லையேல் அது நல்லதல்ல” என்று அந்த அதிகாரி மன்றாடினார். “”சொல்வதற்கு செய்தி ஏதுமில்லை; அது நல்லதல்ல என்றால் கெட்டதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்று தட்டிக்கழித்தார் அண்ணல் காந்தி.

 பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் (பி.பி.ஸி.) விசேஷ நிருபர் குரல் பதிவுக் கருவியுடன் அண்ணலை அணுகி “”சுதந்திரதினச் செய்தி ஏதேனும் கூறுங்கள்; உங்கள் குரலிலேயே உலகமெங்கும் உடனடியாய் ஒலிபரப்புகிறோம்” என்று கேட்டபோது காந்திஜி, “”இம்மாதிரியான ஆசை காட்டலுக்கெல்லாம் நான் மசியமாட்டேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நீங்கள் மறந்துவிடத்தான் வேண்டும்” என்று புன்முறுவிப் பதிலளித்தார்.

 இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1945 மே மாத இறுதியில் சிகாகோ டிஃபண்டர் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் அமெரிக்க நீக்ரோ பிரதிநிதி காந்திஜியைப் பேட்டி கண்டார். முடிவில், “”சிறப்புச் செய்தி ஏதாகிலும் நீங்கள் அளியுங்களேன்?” என்று விண்ணப்பித்தார்.

 அதற்கு காந்திஜி, “”எனது வாழ்விலேயே என் செய்தி அடங்கியுள்ளது. அவ்வாறு இல்லையெனில், இப்போது நான் எதையும் புதிதாகச் சொல்வதினாலோ எழுதுவதினாலோ ஏதும் நிறைவுபெறப் போவதில்லை” என்றார்!

 ஆம்! காந்திஜியின் வாழ்வே அவரது செய்தி. “அகிம்சை, அன்பு, சத்திய நாட்டம், எளிய வாழ்வு – உயரிய சிந்தனை, மத நல்லிணக்கம், அப்பழுக்கற்ற அரசியல், மக்களைப் பொருளாதார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்துதல், கடையனுக்கும் கடைத்தேற்றம்’ இவையே அவரது வாழ்வின் சாரம். இவற்றை நாம் மனத்தில் இறுத்தி, கூடியவரை செயலில் கடைப்பிடிப்போமாக

-லா.சு. ரங்கராஜன்

நன்றி :: தினமணி (28 August 2012)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s