திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! – ராஜாஜி

periyar and rajaji31.05.1936 இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ். தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.அத்திருமணத்தில் இராச கோபாலாச்சாரியார் (இராஜாஜி), டி.கே. சிதம்பரநாத முதலியார், பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி. ஆவுடையப் பிள்ளை, அ. பொன்னம்பலனார், ஏ. வேணுகோபால், பி. பிச்சையா, கே.சி. இராமசாமி (கொல்லம்), எ.கே.கே. குற்றாலிங்க முதலியார், சு.ரா. அருணாசலம் பிள்ளை, எஸ். சண்முகசுந்தரம் பிள்ளை முதலானோர் கலந்துகொண்டனர்.

தலைமை வகித்த தந்தை பெரியார் முகவுரையாக, நான் இங்கு புரோகித முறையில் திருமணம் நடத்திக் கொடுக்க வரவில்லை, சீர்திருத்த முறையில் மக்களுக்கு நன்மையுண்டாக நாலு வார்த்தைகள் பேசவும், கொஞ்ச நேரமாவது இதில் கவனம் செலுத்தவும்தானே ஒழிய வேறில்லை என்று சொல்லி, மணமக்களுக்கு திருமண ஒப்பந்த உறுதிமொழியை எடுத்துச் சொல்லி அவர்களையும் சொல்லச் செய்து திருமணத்தை முடித்தார்.

அதன்பின் பேசிய இராஜகோபாலாச்சாரியார்

“நண்பர்களே! இந்தத் திருமணத்தைப் பார்க்க எனக்குத் திருப்தி ஏற்படுகிறது. நல்லமுறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பர் இராமசாமி (பெரியார்) அவர்கள், தான் புரோகிதர் இல்லையென்று சொன்னார். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் புரோகிதர்தான். நூறு தடவைச் சொல்வேன். ஆனால், இந்தப் புரோகிதம் (ஒப்பந்த உறுதிமொழியும் அதுசார்ந்த சொற்பொழிவும்) மேலான புரோகிதமாகும். அவர் அதை விடாமல் மக்கள் ஷேமத்துக்காக இன்னும் வெகு நாளைக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இராமசாமி இதனால் தேசத்துக்கு நன்மை செய்து கஷ்டம் இருந்து வருகிறது. அது மாறவேண்டும். திருமணம் என்றும் நினைவில் நிற்கும்படி நடக்க வேண்டும். அச்செய்கையில் ஒரு மதிப்பு இருக்கும்படியாகவும் நடத்தவேண்டும்.கல்யாணத்தில் தம்பதிகள் சேமமும் சந்தோஷமும் முக்கியமானவை. அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.மணமக்களை ஆசீர்வதிக்கும்படி இராமசாமி என்னைக் கேட்டுக்கொண்டார். நான் ஆசீர்வதிக்கத் தகுதியற்றவன். கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனாலும் அவர் சொன்னதற்கு மணமக்கள் சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் நீண்ட நாள் வாழவும் வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.மணமகன் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும். கல்யாணம் எல்லாம் சீர்திருத்த முறையில் நடக்க வேண்டும். இது மாதிரி எல்லோரும் செய்ய முன்வர வேண்டும்”  என்று பேசினார்.

தலைமை வகித்த தந்தை பெரியார் தன் முடிவுரையாக பேசியதாவது:-

எனது மதிப்பிற்குரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும், தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.

இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும், இன்றைய திருமணத்தில் நான் கலந்திருப்பதை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப் பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக்கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக் கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத்திருமணத்திற்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இதுதான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் நான்அந்த புரோகிதப் பட்டத்தை ஏற்கத் தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவும் மாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள்கூட இல்லாமல் திருமணம் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன.

ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்து திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு. நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகித கூலி, தட்சணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்று கூட நாம் இங்குக் கூடி இந்தக் காரியங்களைச் செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால்தான் கல்யாணம் ஆகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வர வர இவைகள்கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும்.

மற்றும் ஆச்சாரியார் அவர்கள், நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது.இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். இதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனேயாவேன். நிற்க ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.

ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும் கடவுள்தான் செய்யவேண்டும் என்று சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மணமக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசை கொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாகவோ, தட்சணைக்கு ஆக செய்யவும் ஆசியாகவோ ஆகிவிடுமா? உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா, படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசி பெற்றுவிட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசி பெறவேண்டும் என்பது. மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக் கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். கடைசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக்கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும் அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர்களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியோர்களுக்கும் நன்றி கூறி அமருகிறேன் என்று பேசினார்.

நன்றி : புதியபார்வை

 பக்கம் 463 குடி அரசு – 1936-1 (தொகுதி 22)

Related :: ராஜாஜியின் மறைவு குறித்து பெரியார்

Advertisements

4 thoughts on “திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! – ராஜாஜி

  1. Pingback: பெரியார் – மணியம்மை திருமணமும் ராஜாஜியும் | இராட்டை

  2. Pingback: ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்” | இராட்டை

  3. Pingback: இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள் | இராட்டை

  4. Pingback: Rajaji’s Views on INTER-CASTE MARRIAGE , WIDOW RE MARRIAGE , iNTER-DINING , DEVADASI SYSTEM & TEMPLE ENTRY | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s