ராஜாஜியின் மறைவு குறித்து பெரியார்

நண்பர் இராஜாஜி அவர்கள் முடிவெய்திய நிகழ்ச்சி எல்லையற்ற துக்கத்துக்குரிய நிகழ்ச்சியாகும். சம்பிரதாயத்திற்கல்ல; உண்மையாகவே சொல்லுகிறேன், இராஜாஜி அவர்கள் ஒப்பற்றவர்; இணையற்றவருமாவார். கொள்கைக்காகவே வாழ்ந்து கொள்கைக் காகவே தொண்டாற்றி முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாத இழப்பாகும். தமிழ் நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி 95ஆம் வயதில் முடிவெய்தி மறைந்துவிட்டார்.

periyar rajaji

Image Source The Hindu

அவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால், இராஜாஜி இல்லாது இருந்தால் மகாத்மா காந்தி’யே இருந்திருக்கமாட்டார். அதுமாத்திரமல்ல; இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது. தமிழ் நாட்டில் பார்ப்பனருக்கு எதிராகத் தோன்றிய ஓர் எரிமலையை, மகாத்மா காந்தி என்னும் ஒரு புயல் மழையைக்கொண்டு தான் அவித்து, பார்ப்பனரை இருக்கச் செய்தார். இவை இன்றைக்கு அதாவது, சுமார் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்குத் தெரியாத சேதியாகும். இராஜாஜி அவர்களால்தான் திராவிட நாட்டில் சமபந்தி போஜனம் என்பதும், அதைவிடத் தீவிரமான சாதிபேதம் என்பதே இல்லாமல் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மையும் ஏற்பட்டது. நான் அறிய இராஜாஜி அவர்கள் 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன் சமபந்தி போஜனம் செய்வார்; 1915-ல் பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார். இது அவருக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்ட சாதனை என்றாலும், காங்கிரசிலேயே எல்லாப் பார்ப்பனர்களும் சமபந்தி போஜனம் அருந்தும்படி செய்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனத்தில் நம்பிக்கை இல்லாத காலத்திலேயே, யார் வீட்டிலும் யாருடனும் இருந்து உணவு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தினார். காங்கிரசில் பெரிய தீவிர தேசபக்தர், மகா தியாகி என்று சொல்லப்பட்ட வ.வே. சுப்ரமணிய அய்யர் என்கிற (போலி) தேசபக்தர் வருணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண் டிருந்த காலத்தில், காங்கிரசில் தான் மாத்திரம் அல்லாமல் அனேக பார்ப்பனரையும், பார்ப்பன  இளைஞரையும் யாருடனும் யார் வீட்டிலும் உணவு அருந்தச் செய்தார்,இராஜாஜி. எது எப்படி இருந்தாலும், சமுதாயத் துறையில், இம் மாபெரும் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத்தான் உண்டு. அதுமாத்திரம் அல்ல. கலப்புத் திருமணம் என்னும் தன்மையைத் துணிந்து ஆதரித்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். 1920-ல் என்று கருதுகிறேன்; அருண்டேல் – ருக்குமணி அம்மையார் விவாகத்தைப் பார்ப்பனச் சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்த்த காலத்தில் இராஜாஜி அவர்கள் அதை ஆதரித்தார்; மற்றும், தனது பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம் செய்து கொடுத்தார். ஆகவே, சமுதாயத் துறையில் மாபெரும் சீர்திருத்தம் செய்தவர் இராஜாஜியே ஆவார். இந்தக் காரணங்களால் இராஜாஜி அவர்கள் சென்னைப் பார்ப்பனர்களான கஸ்தூரி ரங்க அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் முதலிய-பார்ப்பன ஆதிக்கப் பணிக்காகவே வாழ்ந்த பார்ப்பனக் கும்பலுக்கு எதிரியாக இருந்தார்.

இவ்வளவு என்ன  உற்சாகக் காரணமாகத் தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த என்னை, முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை இராஜாஜி அவர்களுக்கே உரியதாகும். என்னை இராஜாஜி அவர்கள்தான் முதலாவதாக கோயமுத்துர் ஜில்லா காங்கிரஸ் செகரட்டரி ஆக்கினார்; பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரட்டரி ஆக்கினார்; பிறகு அவர்தான் என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் அவர் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், நமது தலைவர் நாயக்கர்’ என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகுபேரை என்னை தலைவர்’ என்று அழைக்கும்படி செய்தார். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்த நண்பர்களாக இருந்தோம்; சகல ரகசியமான காரியங்கள் பற்றிப்பேசி ஒரு கருத்துடையவராக இருந்தோம். என்னைப் பல விஷயங்களில் என் தகுதிக்குமேல் கருதி வந்ததோடு, பிரச்சாரமும் செய்து வந்தார். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இன்றைய மாஜிகவர்னர் திரு.கே.சந்தானம் அவர்களிடத்தில் என்னைப்பற்றிப் பேசும்போது, Mr. Santhanam! Don’t think that Naickers life is an ordinary life”  என்று சொல்லுவார்ī.

இன்னும் மற்ற பல பார்ப்பன நண்பர்களுக்கு என்னைப்பற்றிச் சொல்லுவார். இவ்வளவும் ஏன் சொல்லுகிறேன் என்றால்-என் கொள்கை, கருத்து, செய்கை முதலியவைகளைக் கூடவே இருந்து அறிந்தவர்; அவ்வளவையும் ஏற்றுப் பாராட்டிப் பேசியவர் என்பதைத் தெரிவிப்பதற்காகவே ஆகும்.

இராஜாஜி என்னோடு உள்ளவரை அவர் ஒரு பகுத்தறிவுவாதியாகவே இருந்தார். மற்றும், அவர் பொதுவுடைமைக் கருத்தையும் ஆதரித்தவர். வக்கீல் தொழிலிலும், அதிகாரி களிடம் விளக்குகையில், கோர்ட்டார் அவர்களே! எனது கட்சிக்காரரை நிரபராதி என்று சொல்ல தான் இங்கு வரவில்லை; இவரைக் குற்றவாளி என்று முடிவு செய்ய வேண்டிய அளவுக்குச் சட்டப்படியான ஆதாரம் இல்லை’ என்றுதான் சொல்லுவார். காந்தியை அடிக்கடி திணறவைத்து விடுவார். இதனாலேயே காந்தியாரும் இராஜாஜி அவர்களின் ஆமோதிப்பைப் பெற்றே எந்தக் கருத்தையும் வெளியிடுவார்.

இந்தி விஷயத்தில் பிற்காலத்தில் அவருக்கு அது கட்டாயப்படுத்தத் தக்கதல்ல என்கின்ற கருத்து பலமாக இருந்தது. மற்றும் இராஜாஜி அவர்களுக்கு ஸ்தலசுய ஆட்சி’ என்பது மக்களைக் கெடுத்து விடுகிறது; ஆதலால் தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய ஸ்தாபனங்கள் தேவை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்.

நம் நாட்டு அரசியல், வகுப்பு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலாக ஆகிவிட்டதால் அரசியல் காரணமாக வகுப்புக்களுக்குக் கேடு வரக்கூடாது என்ற கருத்தால்  நம்முடைய சில கருத்துக்கள் காரியங்கள் இராஜாஜி அவர்களது ஆதரவுக்கு உரியதல்லதாக இருக்கலாம் என்றாலும், பொதுவில் இராஜாஜி அவர்களை நாம் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, நமக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் பரிகாரம் செய்ய முடியாத இழப்பே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். (விடுதலை – 26.12.1972)


எனது அனுபவம் – பெரியார்

காங்கிரசில் நான் இருக்கும்போது, காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்று ஒரு தீர்மானம், காங்கிரஸ் கமிட்டியில் நானும் திரு.எஸ்.ராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால், உடனே திருவாளர்கள் சி.இராஜ கோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டிவிஎஸ்.சாஸ்திரி, என்.எஸ்.வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமா செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் – காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே எல்லோரையும் சமமாய் வைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்று நாங்கள் சொன்னதற்கு, மேல்கண்ட தலைவர்களேதான் அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப்படுத்தி, யாருடைய மனதையும் புண்படுத்தி, யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது என்று பதில் சொன்னதோடு, அதற்காக அந்த குருகுலமே கலைக்கப்பட்டு, இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். இந்த விஷயத்தை திரு.காந்தியும் ஒப்புக் கொண்டு, அது அவர் தனி அபிப்பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப் பிரயாணத் தில் சமாதானம் சொல்லவில்லையா? என்று கேட்கின்றேன்.

இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்யத் திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற தர்மநீதி எடுத்தெறியப்பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.
காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப் பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது, நானும் உயர்திரு எஸ்.சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப் பட்டேன். ஆனாலும், பகலில் சாப்பிட்ட எச்சில் இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில்தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.

இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு.வெங்கட கிருஷ்ண பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரியகுளத்திற்குப் போன போது, ஒரு வக்கீல் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு, எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊர்ந்து கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் இலட்சியம் செய்யாமல்தான் காங்கிரசில் உழைத்தேனா னாலும், காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுவ தில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக் கொள்ளுகின்றேன்.

–“குடிஅரசு” 12.7.1931

Advertisements

6 thoughts on “ராஜாஜியின் மறைவு குறித்து பெரியார்

  1. Pingback: திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! – ராஜாஜி | இராட்டை

  2. Pingback: பெரியார் – மணியம்மை திருமணமும் ராஜாஜியும் | இராட்டை

  3. Pingback: ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்” | இராட்டை

  4. Pingback: ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்” | இராட்டை

  5. Pingback: இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள் | இராட்டை

  6. Pingback: Rajaji’s Views on INTER-CASTE MARRIAGE , WIDOW RE MARRIAGE , iNTER-DINING , DEVADASI SYSTEM & TEMPLE ENTRY | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s