பெரியார் – வினோபா சந்திப்பு: 2 மணி நேரம் ரகசிய பேச்சு

ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள். பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள். காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர்.

நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார். பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.

Vinoba 03இப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா? யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18-1-1957 அன்று நடைபெற்றது. பெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி “நேஷனல் காலேஜ்” கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா. உடனே அந்த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர்.

இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார். உடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார். பெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான “சீட்டா” என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது.

பூமிதான ஊழியர்கள் `ஜீப்’பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது. வினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.

அவரைப் பார்த்ததும் “வணக்கம்” என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார். “இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை” என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார். “உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?” என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார்.

அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், “எனக்கு 78 வயது” என்று தமிழில் பதில் கூறினார் பெரியார். வினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், “அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி” என்று வினோபா சொன்னார்.

சாப்பாட்டை முடித்துக்கொண்டதும், “இங்கேயே பேசலாமா? அல்லது தனியாக பேசலாமா?” என்று வினோபா கேட்டார். “தனியாக பேசலாம்” என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள். அங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர்.

காலை 10-40 மணிக்கு தொடங்கி பகல் 12-30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். “என்ன பேசினீர்கள்?” என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “எல்லாம் அப்புறம்” என்று சொல்லிக்கொண்டே பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.

“ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். “ஒன்றும் இல்லை” என்று வினோபா தலையை ஆட்டினார். இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந்தார்கள்.

வினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி’ நிருபர் பேட்டி கண்டார். “நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்” என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.

வினோபா:- நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பெரியார்:- சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

வினோபா:- சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலைகளை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

பெரியார்:- சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.

வினோபா:- புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.

பெரியார்:- இப்படி எத்தனை பேர்களால் முடியும்? விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்? புராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.

வினோபா:- (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே?

பெரியார்:- கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க பத்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.

வினோபா:- புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.

நன்றி  மாலைமலர் : காலச்சுவடுகள் 

பெரியார்-வினோபா பாவே (விடுதலை 20-1-1957)

வினோபா பாவே : சாதி ஒழிப்பும் என்னுடைய முக்கியக் கொள்கைகளில் ஒன்று. தேர்தல் சண்டையில் கலந்து கொள்ளாமல் சமுதாயப் பணி செய்வதைப் பாராட்டுகிறேன். நான் இராமாயணம்-எந்த நூலையும் பிரமாதமாகக் கொள்வதில்லை. தவறான கருத்துள் இருந்தாலும் ஒரு சில நல்ல கருத்துக்களும் இருக்கின்றன. தவறான கருத்துக்களை விட்டுவிட்டு நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம். இராமாயணத்தைச் சாதாரண நூலாகவே நான் கருதுகிறேன். சாதியை ஒழிக்கும் பணியில் உள்ள நீங்கள், இதுபோன்ற நூல்களையும், கடவுள்களையும் ஒழிக்கிறேன் என்கிறீர்கள். நமக்கு முக்கியமான கருத்துக்களை மாத்திரம் வற்புறுத்தி, மற்றவைகளில் தளர்த்திக் கொடுப்பதன் மூலம் அதிகக் கூட்டமான மக்கள். நம் பக்கம் திரும்பக்கூடும். நமது குறிக்கோள் சாதியை ஒழிப்பது. அதை மாத்திரம் வற்புறத்தினால் போதும். கடவுள்களையும் புராண ஆதாரங்களையும் (சாதி ஒழிய வேண்டுமென்பதற்காக) ஒழிக்கக் கிளம்பினால் புராண ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு வேலையாகவேதான் இருக்க நேரிடும். புராண, இதிகாசங்களில் உள்ள நல்ல கருத்துக்களை வைத்துக்கொண்டே சாதியை ஒழிக்கலாம்.

பெரியார்: இராமாயணம் நீதிநூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை; நீதி கற்பிக்கக்கூடிய தன்மையில் அதில் ஒன்றுமே கிடையாது; நல்ல கருத்துக்கள் இருப்பதாக ஒன்றும் மில்லை. இரண்டொருவருக்கு வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியலாம். நாம் பொதுமக்கள் என்பவர்களை மனத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். விஷத்தின்மீது சர்க்கரை பூசிக்கொடுத்தால் எத்தனை பேருக்கு  சக்கரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விஷத்தைத் துப்பிவிடக்கூடிய சக்தி இருக்கும்! மக்களுக்கு நீதிநூல் தேவையென்றால், உங்களைப் போன்றவர்கள் புதிதாக எழுதித் தரலாம். அந்த இதிகாசங்களை எழுதியவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தானே! அதுவும் அந்தக் காலத்து மனிதர்கள் !

சாதியொழிய வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இராமாயணம், பாரதம், மனு போன்ற புராண இதிகாசங்கள், கடவுள்கள் எல்லாம் ஒழிந்தே தீரவேண்டும். ஒரே ஆண்டவன் என்பவன்கூட சாதிக்கு ஆதாரமாயிருந்தால் ஒழிந்தே தீரவேண்டும். இராமாயணம், பாரதம் போன்ற புராணங்களிலும், இராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள் களிடத்திலும் மற்றும், பதிவிரதை என்று சொல்லப்படுகிறவர்களிடத்திலும் கொஞ்சங்கூட யோக்கியத் தன்மையோ, நாணயமோ காணப்படவில்லை. அதைப் படிக்கின்ற மக்களுக்கும் அதிலிருந்து நாணயமோ, ஒழுக்கமோ வந்தாகவும் இல்லை. நான் கடவுள் என்று ஒன்று உண்டு என்று புரிந்து கொள்ளவும், அந்த ஒரு கடவுளை நம்பவும் முடியாவிட்டாலும், ஒரு கடவுள் உண்டு என்கிறவர்களிடம்-இல்லையென்று மறுத்துப்பேச வரவில்லை. ஆனால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற மனுதர்மம் போன்ற சாஸ்திரங்களையும், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற இதிகாசங்களையும், சாதிக்கு ஆதாரமாயிருக்கிற இராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களையும் வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க முடியாது. நான் வால்மீகி, கம்பராமாயணம் போன்ற நூல்களைப் படித்தே கூறுகிறேன்.

(இராமாயணத்திலுள்ள ஆதாரங்களை எடுத்துக் காட்டியபோது)

வினோபா : நான் துளசி இராமாயணமும், மராட்டி இராமாயணமுந்தான் படித்துள் ளேன். அவைகளில் அப்படி இல்லை.

பெரியார் : நீங்கள் ஏழெட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில், எனது சமுதாய மக்களுக்கு சாதியொழிய வேண்டுமென்ற கருத்தைச் சொல்லிவருவதைக் காண மகிழ்ச்சி யடைகிறேன். இதைப் பத்திரிகைக்காரர்கள் போடுவதேயில்லை: சாதியொழிய வேண்டுமென்ற கருத்தை மறைக்கவே பார்க்கிறார்கள்; அவரவர்களுக்கு வேண்டிய சங்கதிகளை மாத்திரம் போடுகிறார்கள். நான்தான் எனது பத்திரிகையில் நீங்கள் சொல்லும்- சாதி யொழிய வேண்டும் என்ற கருத்துக்களைப் போடுகிறேன்.

வினோபா : தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்யவேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்யவேண்டும்.

பெரியார் : என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் கொண்டுள்ள வேலை அதாவது, சாதி ஒழிப்பு முக்கியமானது. நான் அரசியல் பற்றிக் கவலை கொள்ளாதவன். அரசியலில் ஈடுபடமுடியுமானால் நீங்கள் செய்துவரும் வேலையையும், இனி செய்யப்போகும் வேலையையும் சேர்த்து, சட்டத்தின் மூலம் ஒரே வரியில் உத்தரவு போட்டு விடலாம். ஆனால், சாதி ஒழிப்பு வேலை அவ்வளவு இலேசானதல்ல. அதனால்தான், அந்த முக்கியமான வேலையை நான் மேற்கொண்டு செய்கிறேன். நான் அதையே எல்லா வற்றையும்விட முக்கியமானதாகக் கருதுகிறேன்.

(திருச்சி மாவட்டத்தில் கால்நடையாகச் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆச்சாசியா வினோபா பாவே அவர்களும், பெரியார் அவர்களும் இன்று (19-1-1957) காலை 10.45 மணிக்கு திருச்சி தேசியக் கல்லூரியில் சந்தித்தார்கள். சுமார் 2 மணி நேரம் உரையாடினார்கள்.) 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s