காந்தியார் – குடிஅரசு தலையங்கம்(14-7-1948)

114891-050-79158734மதவெறிகொண்ட மாபாதக் கூட்டம் சதிச்செயல் புரிந்து, தந்திரமும் வஞ்சனையும் போர்த்து, உலகப் பெரியாருள் ஒருவரான பெரியார் காந்தியாரைப் பலிகொண்டுவிட்ட செய்தியைக் கேட்டுத் திகைத்தவர் பலர்; திகைப்பால் செத்தவர்கள் சிலர்: சாக விரும்பியவர்கள் சிலர் என்ற செய்திகளையெல்லாம் அவர் மறைந்ததிலிருந்து நாள்தோறும் கேட்டு வந்திருக்கின்றோம். மனிதத் தன்மை படைத்த எவருமே விரும்பாத, இழிவான இந்தப் படுகொலையைக்கண்டு, கேட்டு எவருமே பதறாமல் இருக்கமுடியாது. கோட்ஸே கும்பல்கூட அல்ல; கோட்ஸே கூட மனம் பதறித்தான் இருப்பான்-தன்னால் கொல்லப்பட்ட காந்தியார் குலைந்து மண்ணில் வீழ்ந்ததைக் கண்டு! ஏன்? அவனும் மனித உடல் போர்த்தவன்தானே!

சுயநலம் கொஞ்சமும் இல்லாமல், தனது முப்பது ஆண்டு வாழ்க்கையையும் இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் நன்மைக்காகவே, தன் மனத்தில் எது நன்மை என்று பட்டதோ அவ் வழியிலேயே உழைத்த பெரியார் காந்தியார். பலாத்கார முறைகளில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் அகிம்சையையே தன் கருவியாகக் கொண்டவர். மத இயலில், மதத்திற்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர். கடவுள் இயலில், கடவுள் ஒன்றுதான் என்றும் அத்த ஒன்றைத் தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லாவற்றையும் ஒன்றாகவே தான் நான் மதிக்கிறேன் என்றும் விளக்கிக் கூறி, கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோவில்களை விபச்சார விடுதிகள்_என்று கூறி, அங்குத் தரகனோ, அந்தக் கடவுளுக்குப் பால், பழம், சோறோ வேண்டியதில்லை; திறந்த வெளியே போதும் என்றவர். அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வற்புறுத்தியவர். சமுதாய இயலில் ஒருவரை ஒருவர் சுரண்டுதல் கூடாது; பரம்பரையாக ஒருவர் உறிஞ்சிப் பிழைக்கவும், அதற்காக மற்றொருவர் நைந்து வாழ்க்கை கசந்து வாழவும், அதற்காக ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்டவர்களாய்-தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்துவருவது ஈனம் என்றும் வற்புறுத்தியவர். தேச இயலில் இந்தியத் துணைக் கண்டத்தை ஒரே நாடு என்றும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாட்டினர் என்றும் வற்புறுத்தியவர்.

இவ்வாறான காந்தியாருடைய பல கொள்கைகள், மத வேறுபாடு, சாதி வேறுபாடு திரம்பிய இந்த நாட்டிற்கு அவைகளைத் தீர்க்க ஓரளவிற்குப் போதுமானவைகள் என்று கூறத் தகுந்ததாயினும் அக் கொள்கைகளைப் பரப்புவதற்கு அவர் கையாண்டுவந்த முறைகள் நிச்சயமாக விபரீதமான பலனைத்தான் கொடுக்குமென நாம் அடிக்கடி வற்புறுத்தி விளக்கிக்கூறி வந்திருக்கின்றோம் என்பதையும், அதே நேரத்தில் அவரின் பல கொள்கைகள் இந்தப் பிற்போக்கான நாட்டிற்குத் தேவையானவை என்று உணரத் தவற வில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்காக, பெருமைக்காக, முன்னேற்றத்திற்காக உழைத்துவந்த பெரியார் காந்தியார் என்று சொல்லிக்கொள்ளத் தகுந்த நிலையிலிருந்தாலும், அவருடைய மறைவுக்குப் பிறகும் இந்த நாட்டில் வாழ்ந்தேயாக வேண்டிய மக்கள் எவ்வளவுதூரம் நன்மை, பெருமை, முற்போக்கு அடைந்திருக்கிறோம்.? அடையாவிட்டால் அதற்குக் காரணம் என்ன? அடைவதற்கு நாம் என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும் என்பவைகளைப்பற்றி எண்ணவேண்டுமல்லவா? அவைகளையடைந்தால் தானே உண்மையில் காந்தியாரின் கொள்கைகள் நிறைவேறியதாக வெற்றி பெற்றதாக நாமும் சொல்லிக்கொள்ள முடியும்; உலகமும் ஒப்புக்கொள்ளும்! இந்த நாட்டின் பிற் போக்குச் சக்திகள் என்று காந்தியார் எவற்றைக் குறிப்பிட்டாரோ, அவற்றையொழிப்பது தானே உண்மையாக அவரை மரியாதை செய்வதாக இருக்கமுடியும் இதைத் தேசியத் திராவிடர்கள் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசியப் பல்வேறு இனங்களும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கவேண்டும்.

காந்தியாரை எந்த இந்து மதம் ஒழித்ததோ-அதாவது, எந்த இந்து மதம் காந்தி யார் உயிருடன் வாழ்வது தான் அழிந்து போவதற்கு ஏது என்று கருதியதோ-அந்த இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவா அவருடைய மறைவு பயன்படுத்தப்படவேண்டும் தான் பெரிய சாதியாய் இருந்துகொண்டே மற்ற சாதியெல்லாம் தனக்குக் கீழ்ப்பட்ட சாதியென்று சொல்லி அவைகளைத் தலை நிமிரவொட்டாமல் தந்திரத்தாலும் வஞ்சகத்தாலும் சதிச் செயல் புரிந்து, சாஸ்திரம் என்றும் சடங்கென்றும் கூறி ஏமாற்றி வாழ்ந்துவரும் எத்தர்கள் பிழைப்புக்காகவா,இந்தப் பெரியாருடைய மறைவு பயன்படுத்தப்பட வேண்டும்! அறிவற்ற மக்களின் மூடத்தனத்தைப் பெருக்கி, அவர்கள் அந்த மூடத்தனத்தில் இருந்து என்றும் மீளாத வழியாகப் பார்ப்பனியத்தின் காலைக் கழுவிக் குடித்து வாழும் சாதியாக என்றைக்கும் இருப்பதற்காகவா இந்தப் பெரியாரின் வஞ்சகமான படுகொலையை மறைத்து, வேறுவகையில் ஆடம்பரமாக அனாவசியமாகப் பயன்படுத்தப்படவேண்டும்!

காந்தியார் முடிவிற்குப் பிறகு நாம் நாட்டிலே என்ன பார்க்கின்றோம்? உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் அவரைப் பாராட்டி அவர் முடிவுக்கு வருந்தி, அவரைச் சுட்ட கொலை பாதகப் பார்ப்பனனைக் கண்டித்து ஏராளமான செய்திகள் வெளியாகிவிட்டன. ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனைச் சார்ந்த சொந்தக்காரர்களும், அவன் குலத்தினருமே ஒழிக்கப்படவேண்டும் என்ற இந்து மதத்தின் பழங்கால நீதியை இப்பார்ப்பனன் விஷயத்திலும் கையாளப்படவேண்டும் என்று நாம் கூறவில்லை; விரும்பவுமில்லை; அது நியாயமுமில்லை. ஆனால், அவனை யொழித்துவிட்டு, அவன் அந்தச் சதிச் செயலைச் செய்ய எந்த இந்துமத வெறியுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இந்து மதச் செழிப்புக்கான காரியங்களைச் செய்வதுதான் நீதியா, நியாயமா என்று கேட்க ஆசைப்படுகின்றோம். இந்தப் படுகொலைக்கு-எந்த இந்து மத சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி காரணமாக இருந்ததோ-அந்த உணர்ச்சியை ஆழக் குழி தோண்டிச் சுட்டுப் பொசுக்கிச் சமாதி வைப்பதல்லவா நீதியான செயலாக இருக்கமுடியும் என்று கூறவும் ஆசைப் படுகின்றோம்.

அவர் மறைந்த பதின்மூன்றாம் நாள், அவருடைய சாம்பல்களை எல்லாம் இந்த நாட்டின் புண்ணிய நதிகளில் கரைத்துவிடப்பட்ட ஒரு சடங்கையும், அதைப் பக்தி விசுவாசமாகப் பலர் பார்த்துத் தரிசித்துச் சென்றனர் என்ற விளம்பரச் செய்திகளையும், அதை அங்கங்கே உள்ளவர்கள் அவை கொண்டுபோகப்பட்டபோதும், கரைத்தபோதும் ஏராளமாகக் கண்டு வணங்கிச் சென்றனர் என்ற செய்திகளையும் பார்க்கும்போது நாம் பெரிதும் வருத்தமடைகின்றோம். காந்தியாரின் படுகொலை விளைவித்த வருத்தத்தைக் காட்டிலும், அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதை செய்யப்படுவது -நமக்குமட்டு மல்ல, பகுத்தறிவுடைய எவருக்கும் அதிக வருத்தத்தையே உண்டுபண்ணும் என்னலாம்.

இந்தச் செயலால் மக்களுடைய காலமும் பொருளும் வீணாகக் கழித்தன என்றுகூட நாம் குறிப்பிட ஆசைப்படவில்லை. ஆனால், விலைமதிக்க முடியாததான மக்களின் அன்புணர்ச்சி: காந்தியார் படுகொலையைக் கேட்டுத் திகைப்படைந்து, இதற்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும் என்று பிறந்த தெளிவுணர்ச்சி; காந்தியாரிடத்தில் நாம் மரியாதையுடையவர்கள் என்று காட்டவேண்டும் என்று தோன்றிய நன்றியுணர்ச்சி, பரிதாபமான முடிவைக்கேட்டு நம்மீது அதிகமான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது, சமுதாய முன்னேற்றத்திற்கு நம்மாலான தொண்டைச் செய்தேயாக வேண்டும் என்று உண்டான வீர உணர்ச்சி; காந்தியார் எலும்பைக் கண்டு தரிசித்தோம்’, ஆற்றில் சாம்பலைக் கரைக்கும்போது அந்த அருமையான காட்சியைக் கண்டு களிப்படைந்தோம்’, ‘ இதற்காக எவ்வளவு கஷ்டப் பட்டு எப்படியெப்படியெல்லாமோ போய் ஏதோ ஒரு மாதிரியாய்ப் பார்த்து வணக்கத்தைச் செலுத்திவிட்டோம்’ என்று எண்ணி மனதிருப்திப்படும் அளவிலா மனத்திலுண்டான நல்லுனர்ச்சிகள் எல்லாம் கரைத்துவிடப்படவேண்டும் என்று கேட்கிறோம். காந்தியார் எலும்பையே காவிரி நதியிலும் மற்ற நதிகளிலும் கொண்டுபோய்க் கலப்பது புண்ணியமென்றால் -அந்த நதிகளில், நம் முன்னோர்களின் எலும்பையும், சாம்பலையும் கொண்டு போய்க் கலப்பதுதானே நமக்கும் புண்ணியமான தாகும்-இந்த ஏற்பாடுதானே புனிதமானது’ என்கின்ற முடிவைத்தானே இந்தச் செயல்-மக்களைக் கொள்ளச்செய்யும்! அஸ்தியை ஆற்றில்கரைக்க அய்யருடைய உதவி தேவை என்கிற முடிவில், பார்ப்பனர் வகுத்த சாஸ்திரங்களும், அவர்களின் வயிற்றுப் பிழைப்பும் பராமரிப்பதற்குத்தானே இந்த நடவடிக்கை பயன்படுவதாக இருக்கமுடியும்.?. இந்திய யூனியன் மதமற்றது’ என்று கூறப்பட்டாலும், அது இந்து மதத்தைப் பின்பற்றியே நடக்கக் கூடியது என்கிற உண்மையைத்தானே அரசாங்கம் காட்டும் ஆதரவிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கமுடியும்:

இதுதானா காந்தியாருக்குச் செய்யும் நன்றி, மரியாதை! இவ்வாறு தரிசிப்பதும், மலர்மாலை சாத்துவதும் ஆன காரியங்களால் அவருடைய கொள்கைகள் நிறைவேறிவிட்டன என்று கூற முடியுமா!

இயற்கையை ஏவல்கொண்டு, விரும்பியபடி எல்லாம் ஆட்டிவைக்கும் விஞ்ஞான முறையும், அதன் பயனாய்த் தோன்றிய இயந்திரங்களும் இங்கு இன்றைக்கும் வணக்கத்திற்குரியவையாக இருக்கின்றனவேயன்றி, வாழ்வின் நலனுக்காகக் கொள்ளப்பட்டவை என்று சொல்லமுடியாத நிலையிலேயே இருக்கின்றோம். அறிவு உயர்ந்தது; அறிவைப் பெருக்குவது கல்வி: கல்வியைத் தருவது ஏடு. அந்த ஏடு வணக்கத்திற்குரியதாகவே இந்த நாட்டில் இருந்து வருகிறது என்று சொல்லலாமே தவிர, அந்த ஏட்டின் பயனைக் கண்டு அறிவு பெருகி வாழவேண்டும் என்ற போக்கைக் காணோமே! எது எது உயர்ந்தது என்று சொல்லப்படுகின்றதோ அதெல்லாம் வணக்கத்திற்குரியது ; பூசைக்குரியது என்கிற மனப்பான்மை இந்த நாட்டில் வேரூன்றி-வாழ்வில் அவைகளை ஏற்று நடக்கும் தன்மை இல்லாமல் போனதால்தானே, இந்தப் பழம்பெருமை வாய்ந்த நாடு கேடுகெட்ட நாடாக மாறிவிட்டது! சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையை ருசிபார்க்கும் நடவடிக்கைதானே பல காலமாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. அந்தப் போக்கைத்தானா இப்பொழுதும் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்கிறோம்.

பார்ப்பணியமதமான இந்துமதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலுற்றி வளர்த்து வந்தார். அப் பாம்பின் கொடுமையைப்பற்றி தாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதிவந்ததால், அதுவும் ஆடிப்பாடிக் குதித்ததால், அதையடக்கித் தன்வழிச் செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக்க நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில்-ஊதத் தேவையில்லை என்று அவர் கருதிய வேளையில், அப்பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையாகக் கொண்டு விட்டது. இப்பொழுது, அந்தப் பாம்பை என்ன செய்வது!” என்பதே கேள்வி. அதை நாம் நசுக்கி அழித்துவிட வேண்டும் என்றுகூடச் செல்லவில்லை. அதனுடைய விஷப் பற்களைமட்டும் பிடுங்கி எறிந்துவிடவேண்டும். இதைத்தான் இங்கு வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறோம். இதற்கு வழி என்ன!

அவருடைய நினைவாகப் பெரும் பொருளை நிதியாகச் சேர்த்து, “கஸ்துசிபாநிதி” போலவும், “கமலாநேரு நிதி” போலவும் சில பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்து விட்டால், அது உண்மையாகவே அவருக்குத் தகுந்த ஞாபகார்த்தமாக ஆடுவிடுமா? அவருடைய உருவச் சிலைகளை அங்கங்கே வைத்துப் பூசை நடத்திவருவதினால் அது அவருடைய தொண்டைச் செய்ததாக முடியுமா காந்தியார் கழகம் என்று பெயர்வைத்து அவர் எழுதியவைகவையெல்லாம், ஒன்றுசேர்த்து (காலப்போக்கில் பார்ப்பனியப் பிடியில் சிக்கி, நல்லதையெல்லாம் சுட்டெரித்துவிட்டு, மாற்றித் திருத்தி வைத்துக்கொண்டு) வெறும் வேதாந்த விசாரணையில் ஈடுபட்டால் அது அவருடைய கொள்கைகளைப் பரப்பியதாக ஆகுமா? அவர் எப்படி உண்ணாவிரதமிருந்தாரோ, மவுனவிரதமிருந்தாரோ அவைகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றப் போகின்றோம் என்று சிலபேர் முடிவுகட்டுவ தால் அது அவருக்கு உண்மையாகவே நன்றி காட்டியதாக ஆகுமா அவருடைய நினைவுக்கு அறிகுறியாக போஸ்டல்’ முத்திரைகளை அச்சிட்டு வெளியிடுவதோ, அதைப் போன்ற மற்ற செயல்களைச் செய்வதோ காந்தியாரின் கொள்கைகள் இந்த நாட்டில் நிலைபெறுவதற்கு வழிசெய்யும் காரியங்களாகுமா! வெறும் பஜனைபாடும் அளவிலும், பால், பழம், பூ வைத்து நைவேத்தியம் செய்யும் அளவிலும் நின்றால்-அவர் உயர்ந்தவர், ஒரு பெரியார், ஒரு மகாத்மா, ஒரு மகான் என்று பெருமையாகப் பேசிக்கொள்வதற்குப் பேருதவியாக இருக்குமே.தவிர அவரால் இந்த நாட்டிற்கு நிலையான பயனேற்பட வழிசெய்ததாகுமா! அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

குடிஅரசு தலையங்கம்-14-7-1948

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s