காந்தி பொம்மையை உடையுங்கள் – பெரியார்

ஆளுக்கொரு காந்தி பொம்மையை உடையுங்கள்; வீட்டில் மாட்டியுள்ள படத்தை ரோட்டில் வீசி எறியுங்கள். இப்படிச் செய்தால் நம் உணர்ச்சியைக் கண்டு துரோகம் செய்யப் பயப்படுவர்களே! மந்திரிகள் நாடு பிரியக்கூடாது’ என்று சொல்ல மாட்டார்களே.

காந்தி இன்னின்ன துரோகம் செய்து எங்களை அடிமையாக்கிவிட்டார்_ என்று விவரம் சொல்லிக் கொளுத்து என்கிறேன். நீங்கள் வேண்டுமானால், காந்தி ஒன்றும் செய்யவில்லை; நான்தான் செய்தேன்’ என்று தைரியமாய்ச் சொல்லுங்கள் l முடியுமா?

doll

Mahatma Gandhi Plush Little Thinker Doll

காந்தி ஒன்றும் அபூர்வ புருஷர் அல்லர். பார்ப்பான், அப்படிப் பாமர மக்கள் நம்பும்படி-மகாத்மா ஆக்கினான். இப்போதல்ல; அப்போதே நான் குடி அரசில் இதை எழுதி இருக்கிறேன். ரிஷிகளுக்கு எவ்வளவு அறிவோ அவ்வளவுதான் காந்திக்கும். அவரைப் பார்ப்பனர்கள் மகாத்மா ஆக்கிவிட்டார்கள் ! மகாத்மாவேஷத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவருக்கு வேலை சரியாய்ப்போகிறது’ என்று எழுதியிருக்கிறேன்.

1930-க்கு முன்னமேயே, காந்தி ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்குப் போகும்போது வழியில் அவரை மடக்கி,துரோகி ஒழிக’ என்று கூவி, அவர் காரில் கண்டதைப் போட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டத்தில் காந்தி, என்னை ஒழிக. என்கிறார்கள்; இவர்களா என்னை ஒழிப்பார்கள்? அது பகவான் கையில் இருக்கிறது என்று பேசியிருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ் கோஷ்டியினர்தாம் அப்படி வழியில் மடக்கிக் கண்டதைப் போட்டு, காந்தி ஒழிக!’ என்றவர்கள். தாகூர் சொல்லியிருக்கிறார்: காந்தி காட்டு மனிதன்; இவருக்கு என்ன அனுபவம்: இவரது கொள்கை மோசமான கொள்கை’ என்று. அதற்கு காந்தி தாகூரைப்பற்றி, இந்த தாகூருக்கு என்ன தெரியும்? கவி என்றால் கவிதை பாடி, பணக்காரர்களிடம் கூலி வாங்கிச் சுகபோகமாக இருப்பார்கள் ; விடுதலையைப்பற்றி இவர்கள் பேசுவது தப்பு என்று பேசினார். மக்களை உசுப்பிவிட்டு அவர்கள் தாகூர் வீட்டில் கல் போட ஓடினார்கள்; அவர் பயந்து, மறுநாளே காந்தியை மகாத்மா’ என்று சொல்லிவிட்டார்.

இப்போது மராட்டி, குஜராத்தி சண்டை வந்தபோது காந்தி படத்திற்குச் செருப்பு மாலை போட்டார்கள் ! குஜராத்தி-ஆரியன்; மராட்டி-திராவிடன். இப்போதும் மராட்டியனிடம் திராவிட உணர்ச்சி ஊட்டினால் வளரும். அங்கு அந்த இராஜ்யங்களின் அமைப்பை ஒரு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான். அந்தக் காலத்தில் காந்திக்குச் செருப்பு மாலை போட்டார்கள். நேரு, அங்கு எப்படிப் போவதென்று யோசனை செய்தார். அவருக்கும் செருப்பு மாலை போட்டான். இதெல்லாம் விளம்பரமாகவில்லை; சுபாஷ் சந்திர போஸ் ஒடியது யாரால் ?

ஆந்திரர், மலையாளி இவர்கள் நாடாளப் பணமின்றித் தவிக்கிறார்கள்! பெட்டி வெறும் பெட்டியாக இருக்கிறது என்று முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ தாண்ட ஆரம்பித்தாகி விட்டது; அரைக் கிணறு தாண்டியதும், போதும் இவ்வளவு என்றால், கீழே பாதாளத்திற்குப் போகவேண்டியது தான். ஆகவே, வேகமாகத் தாண்டியாக வேண்டும். நான், தேசியக் கொடியை எரிக்கப் போகிறேன்’ என்றதும் வழிக்கு வந்தார்களா, இல்லையா? அதுபோல் வந்து கேட்கட்டுமே ! ஏன் ரகளை செய்கிறாய்! உனக்கு என்ன வேண்டும்! என்று. இனிமேல் சட்டம் போடவேண்டும் : திட்டினால் இன்னது கொளுத்தினால் இன்னது என்று. காந்திக்கும் எங்களுக்கும் சொந்தத் தகராறு ஒன்றுமில்லை. அவர் இடத்தைப்பிடிக்கப் போட்டி போடவில்லை; எங்களுக்கும் சொந்தத்திற்கும் எதுவும் வேண்டுமென்று செய்ய வில்லை. இதற்கு ஒரு மாநாடு கூட்டி விஷயத்தை விளக்கிக் கேட்கப் போகிறேன்; சம்மதம் கொடுக்க வில்லையென்றாலும், நானாவது செய்து விட்டுப்போய் உட்கார்ந்து விடுவேன். காந்தி நாடு என்று பெயர் வை, காந்தி சகாப்தம் என்று பெயர் வை என்று நீ சொன்னாயே! என்று என்னைக் கேட்கிறார்கள். அவர்களால், கொளுத்துவதற்கு நான் சொல்லும் காரணங்களை மறுக்கமுடியவில்லை.

நான் சமயம்போல் பேசுகிறேன் என்று மக்களுக்குத் தோன்றச்செய்ய வேண்டும் என்றே இப்படிக்கேட்கிறார்கள். குறும்பாகச் சொல்வதென்றால், நான் அன்று சொன்னேன், கேட்டாய்; இப்போதும் நான் சொல்கிறேன்-கேளேன்! என்று நான் சொல்லிவிடலாம்.

‘காந்தி நாடு’ என்று வைக்கலாம் என்று சொன்னேன். முதலில் இந்தியா என்பதே கற்பனைச் சொல்; இப்படிக் கற்பனைச் சொல்லை வைத்துக்கொண்டு உயிரை வாங்கு வதைவிட உனக்குத்தான் காந்தியிடம் அதிக மரியாதை இருக்கிறது என்றாயே-அவர் பெயரை வைத்துவிட்டுப்போயேன் என்று யோசனை சொன்னேன். சுயநலக்காரர்கள் அதை வைக்கவில்லை; என்ன செய்வது என்று யோசனை கேட்டார்கள், சொன்னேன். அது போலவேதான், ‘காந்தி சகாப்தம்‘ என்று வைக்கச் சொன்னேன். நமக்கென்று வருடமே இல்லை. வெள்ளைக்காரன் கிறிஸ்து பிறந்து 1957 வருடம் என்று வைத்திருக்கிறான். நமக்கு இருப்பது பிரபவ, விபவ என்ற ஆரிய கதைப்படி உள்ள 60 வருடங்கள்தாம். இதைக் கொண்டு, காலத்தைக் கண்டுபிடிக்கமுடியாது. நான் பிரமாதி ஆண்டில் பிறந்தேன். இப்பொழுது கணக்குப் பார்த்தால் 19 வயதுதானே ஆகவேண்டும்! எனக்கு எழுபதி தொன்பது என்று கண்டுபிடிக்கவேண்டுமானால் என் தாடியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். சரித்திரத்திலேயே புரட்டு ஏற்பட இது ஒரு காரணம், கல்வெட்டில்- கலியுகாதி, பிரபவ வருடம்’ என்று போட்டிருப்பான். கலியுகாதி’ என்பது பித்தலாட்டம்; அறிவுக்குப் பொருத்தமும் ஆதாரமும் அற்றது. பிரபவ என்று சொன்னால்- எந்த பிரபவ என்று சொல்லமுடியாது. இப்படி நமக்கென்று ஒரு சகாப்தம் இல்லாமல் அழிப்பதைவிட, காந்தி பெயரைத்தான் வையேன்! என்று யோசனை சொன்னேன். அவ்வளவுதான். காந்தி துரோகம் செய்தாரா, இல்லையா என்று உங்கள் அறிவைக்கொண்டு யோசியுங்கள். (சேலத்தில் 18.8.1957-ல் சொற்பொழிவு-விடுதலை 23.8-1957)


Mahatma Gandhi Plush Little Thinker Doll

Mahatma Gandhi Plush Little Thinker Doll

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே! காத்தி சிலையைத் தொட்டால் சும்மா விடுவோமா’ என்கிறார்கள். என்ன செய்வார்கள் ? காந்தியார் படத்தைக் கொளுத்துவதற்குக் காரணம், காந்தி நம்மைச் சூத்திரர்களாக இருக்க உதவியதுதானே! மந்திரிகள் சூத்திரர்களாக இருக்க விரும்புகிறார்களா ? மந்திரிப் பதவி என்பது எல்லா உணர்வையும் விட்டுக்கொடுத்து விடுவதுதானே ! தீண்டாமை விலக்கு மாநாட்டிலே சாதி ஒழியக்கூடாது என்ற தீர்மானமே போட்டார் காந்தியார்! சமபந்தி போஜனத்தையும், சாதி ஒழிப்பு என்ற விஷயத்தையும் தீண்டாமை லீக் ‘கில் இருந்து எடுத்துவிட வேண்டுமென்று பிர்லா சொன்னார். அவருடைய பணத்திற்காக ஆதரித்தார் காந்தியார்.

 காந்தியார் படத்தை எரிப்பதையும், சிலையை உடைப்பதையும் இந்தியாவில் எந்தப் பத்திரிகையாலும் செய்தி ஸ்தாபனங்களாலும் உலகத்தின் பார்வையிலிருந்து மறைக்க முடியாது

சாதி இந்தியாவிலிருக்கிறது. பார்ப்பான் சாதித் தலைவனாக இந்தியாவிலிருக்கிறான். அவனே அரசியல், பொருளியல், சமூக இயல் இவைகளுக்கும் தலைவனாக இருக் கிறான். காந்தியார் பார்ப்பன சமூகத்தைக் காப்பாற்றி இருக்கிறார்; மற்ற இனங்களை அவர்களுக்கு அடிமைகளாக ஆக்கி இருக்கிறார். அந்தக் கொடுமை தாங்க முடியாத தென்னாட்டு மக்கள், காந்தியின் சிலையை உடைக்கிறார்கள். இதனை நேருவால் நிவர்வகிக்க முடியவில்லை’ என்று உலகம் தெரிந்து கொள்ளும். உலக அரசியலில் சமாதான துதுவராக நேரு பறக்க முடியாது. இந்த நிலையை உண்டாக்கியே தீருவேன்.

(நாகப்பட்டினத்தில், 129-1957-ல் சொற்பொழிவு-விடுதலை 3-10-1957)


தலைவரவர்கரே! தோழர்களே! தாய்மார்களே ! சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது; எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, வெலிங்க்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலைகூடாது; நீலன் சிலை கூடாது’ என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக்கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டேனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை-எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்துகொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார்.

நம்மவனோ-நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு-சூத்திரன் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன ? தெரியாமல் தொட்டால் நெருப்பு சுடாமல்விடுமா? தெரியாததுபோலவே இருந்து விட்டால் சூத்திரப்பட்டம் இல்லாதுபோய்விடுமா!

இந்தியா பூராவிலும் அகில இந்திய காங்கிரஸ் 70 வருடமாக இருக்கிறது; இந்த காங்கிரஸ் வந்தபின் நமக்கு ஏற்பட்ட இலாபமென்ன! பார்ப்பானுக்கு ஏற்பட்ட இலாபமென்ன ? என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டாமா?

காங்கிரஸ் வந்த 50 வருடத்தில் பார்ப்பான் 100-க்கு 100 பேர் படித்தவன்; பார்ப்பாத்தியும் படித்தவள் ஆகிவிட்டனர். 70 வருட காங்கிரஸ் அவர்களை அந்த அந்தஸ்தில் வைத்துவிட்டது. அதே காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துத் தீர்மானங்களுக்குக் கைதுக்கிப் பலப்படுத்திய நம் கதி என்ன 100-க்கு 18 பேர் படித்திருக்கிறார்கள். இந்தப் 18 பேரும் எப்படிப்படித்தவர்கள்! பார்ப்பனனைப்போலவா படித்தவர்கள்! அதில் 10 பேர் சும்மா கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள்: அவ்வளவுதான். வெள்ளைக்காரன் போகிறபோது 12 பேர்தான் படித்தவர்கள் சுதந்திரம் வந்த 10 ஆண்டு ஆகியும், அதுவும் காமராசர் வந்ததால் இன்று 100-க்கு 18 பேர் படித்தவர்கள். காமராசர் வராவிட்டால் இன்னும் குறைந்திருக்கும். இராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்’ என்று பேசினார். சாதி ஒழியக்கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே என்ன சங்கதி!-என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை)க் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக்கொண்டு-அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப்பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது. டாக்டர் அம்பேத்கார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன என்பது அந்தப் புத்தகம். திண்டாமை ஒழிப்பிற்காக அன்டச்சபிள்ஸ் லீக் (Untouchable League) என்ற அமைப்பு வைத்திருக்கிறார்கள்; நிறைய ஃபண்டும் கொடுத்திருக்கிறார்கள் அதற்கு. அத் தீண்டாமை ஒழிப்புச் சங்கத்திற்கு ஒரு கமிட்டி நியமித்திருக்கிறார்கள். அந்தக் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் பேசும்போது, சமபந்தி போஜனம் செய்யவேண்டும்; சாதி ஒழியவேண்டும்; அப்போதுதான் தீண்டாமை போகும் என்று பேசினார். அது மற்ற மெம்பர்களுக்குப் பிடிக்கவில்லை; அவர்கள் காந்தியிடம் புகார் சொன்னார்கள்.

அதன் பேரில் காந்தி ஒரு ஸ்டேட்மெண்ட்’ கொடுத்திருக்கிறார். என்ன ஸ்டேட் மெண்ட்: தீண்டாமை ஒழிப்பிற்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை; சமபந்தி போஜனம் செய்யவேண்டுமென்பது வேறு-திண்டாமை ஒழியவேண்டுமென்பது வேறு என்று ஒரு ஸ்டேட்மெண்ட் காந்தி கொடுத்தார். இதைத் தெரிந்ததும் அந்தக் கமிட்டி மெம்பர் ராஜினாமா கொடுத்துவிட்டுப் போய்விட்டார். பிறகு “யங் இந்தியா என்ற பத்திரிகையில் காந்தி, சாதிமுறை என்பது நல்ல அமைப்பு: அது இருக்கவேண்டும்; அதாவது வருணாசிரம தர்மம் பாதுகாக்கப்படவேண்டும்’ என்று எழுதிவந்தார்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன்.

அப்போது காந்தி, தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணிர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு’ என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள் தான் அந்தஏற்பாட்டை எதிர்த்தோம். கிணற்றில் தண்ணி எடுக்கக்கூடாதென்று இழிவு படுத்தும் இழிவுக்குப்  பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணிரில்லாமலே சாகட்டும்’ என்றேன். அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணிரல்ல: என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடுபோட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது இராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப் படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம்.

கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்துவிட்டது, இராஜாஜி, காந்தியிடம், ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிடவேண்டியதுதான்’ என்றார். அதற்குப் பிறகும், சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்’ என்றார்கள்.

நான், சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்ட மானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாக்கவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவுந்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக-காத்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்துகொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரியவேண்டும். அதனால்தான், காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது-அகற்ற வேண்டும். என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காத்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு-சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். ஆகா! காந்தி படத்தை எரித்தால் இரத்தக் களறி ஆகும்! என்கிறார்கள். ஆகட்டுமே-என்ன நஷ்டம்:

பொறுப்புள்ளவர்கள் பதில் சொல்லவில்லை. மந்திரிகள் சொன்னார்கள் என்றால்காந்தி படத்தை எரிப்பது தவறு என்று சொல்லவில்லை. எரித்தால் மக்கள் மனம் புண் படும்; மக்கள் மனம் புண் படாமலிருக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்களே தவிர, காந்தி படம் எரித்தால் தவறு என்று கூறவில்லை. காந்தி பேரில், அவர் இன்னின்ன தவறு செய்தார் என்று நான் கூறுகிறேனே எரிக்கக் கூடாது என்பவர்கள் அவர் தவறு செய்ய வில்லை என்று சொல்லவேண்டாமா வேறு என்ன செய்தால் சாதி ஒழியும் என்றாவது சொல்லட்டுமே! இல்லை, சாதி ஒழியக்கூடாது என்றாவது சொல்லட்டுமே!

காந்திதான் வருணாசிரம தர்மம் காப்பாற்றப்படவேண்டும் என்றார். 1927-லேயே காந்தி, மகாத்மா பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்ள பார்ப்பன அடிமையாகிவிட்டார்: என்று எழுதினேன். அது முதலே தோழர் காந்தி என்றுதான் நான் போடுவேன்; மகாத்மா என்று போடுவதில்லை. பிறகு காந்தியார் என்று போட்டோமே தவிர-மகாத்மா என்று போடவில்லை. காந்தி சமுதாயத் துறையில் பெரிய கேடு செய்து விட்டார்.

அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வடநாட்டானுக்கு அடிமையாக்கிவிட்டுப் போனது. சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டுக்கு அடிமைகளாக்கிவிட்டார்.

பெயர் தமிழ்நாடு; தமிழ்நாடு என்பது போலவே ஒவ்வொரு நாடும் தனி; எல்லாம் சேர்ந்து ஒரு யூனியன்-கூட்டாட்சி என்று சொல்லிப் பிரிக்கவே முடியாது என்று எழுதி வைத்து விட்டான்.

வடநாட்டான் காங்கிரசுக்கு நிறையப் பணம் கொடுத்தான்; எங்களுக்கெல்லாம் தெரியும். நாங்கள் தேசாபிமானத்தால் அவன் கொடுக்கிறான் என்று நினைத்தோம். நம்மை வடநாட்டுக்கு விற்கும் வினை என்று தெரியாது. மாகாண அரசுக்கு எந்த உரிமையுமில்லை.

(தர்மபுரியில் 19.9.1957-ல் சொற்பொழிவு-விடுதலை 9.10.1957)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s