காந்தி பட எரிப்பு ஏன் ? – பெரியார்

காந்தி பட எரிப்பு, காந்தி சிலை அகற்றல் என்பதான காரியங்கள் தமிழ்நாட்டில் நடைபெறவேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குப் பல ஆண்டுகளாகவே உண்டு. அதைப் பொதுமக்களிடையில் இந்த 3, 4 ஆண்டுகளாக எனது பொதுக்கூட்டப் பேச்சுகளில் காட்டிகொண்டே வந்திருக்கிறேன். அந்த எண்ணமும் பேச்சும் நாளுக்குநாள் முதிர்ச்சி பெற்று இந்தச் சந்தர்ப்பத்தில் உருவகமாக வெளியாக்கப்பட வேண்டிய அவசியத்திற்குள்ளாகிவிட்டது.

காந்தியைப் பற்றிய நீண்டநாளான எனது கருத்தை அறியவேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள்-1927 முதல் 1931வரை உள்ள குடிஅரசு பத்திரிகையைப் பார்ப்பவர்களுக்கு (அதை முறையாய் வெளியிடப் போகிறேன்) நன்றாக விளங்கும்.

நான் 1924-ல் தமிழ்நாடு காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தலைவனாகவும், பிரமுகனாகவும் இருந்த காலத்தில்-காங்கிரசைவிட்டு வெளியேறிய காரணம் காந்தியின் செய்கையாலேயே ஆகும்.

1928-ல் என்பது எனது ஞாபகம், காந்தியின் உள்கருத்திலேயே எனக்கு ஏற்பட்ட உறுதியான எண்ணத்திலே- இனி, காந்தியை மகாத்மா என்று அழைப்பதில்லை’ என்று தான் முடிவுசெய்து-திரு. காந்தியார் ; தோழர் காந்தியார்’ என்றே எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். குடிஅரசு’, ‘திராவிடன்’, இன்றைக்கும் விடுதலை பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும்.

பல கூட்டங்களிலும்- காந்தியை, மகாத்மா காந்தி என்று சொல்’ என்று பலர் குழப்பங்களும் காலித் தனங்களும் செய்த காலத்திலும்-காந்தியாரின் நடத்தையை, அவர் நமக்குச் செய்த கெடுதியை, துரோகத்தை விளக்கி ஒப்பச்செய்திருக்கிறேன் என்றாலும், இந்தப் பார்ப்பனர்கள் தங்கள் வாயால் ஒரு பார்ப்பனரல்லாத மனிதரை மகாத்மா’ என்று அழைத்துத் தீரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே என்பது பற்றி மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ஆனாலும், அதற்கு ஏற்ற கருத்துக்களை நான் ஆதரித்ததே கிடையாது.

சில கூட்டங்களில் நான் தாட்சண்யப்படவேண்டிய சில தோழர்கள் கூட சினேகித முறையில், காந்தியை-மகாத்மா என்று சொல்லு என்று கேட்டுக்கொண்ட காலத்திலும் அவர்களுடன் தர்க்கம் செய்யாமல், அய்யா, எனக்கு வெறும் ஆத்மா என்பதிலேயே நம்பிக்கை கிடையாது; அப்படி இருக்க, மகாத்மா என்று சொல்லச்சொன்னால் என் நா எப்படி உச்சரிக்கும்’ என்று சமாதானம் சொல்லி இருக்கிறேன். ஆதலால், நான் ஒன்றும் இன்று எனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிட்டேன். தவிர, நானும் தோழர் இராமநாதன் எம். ஏ. அவர்களும், எங்களது சுயமரியாதைப் பிரச்சாரம் மும்முரமான காலத்தில் காந்தியாரது வருணாசிரமப் பிரச்சாரம் எங்களுக்கு மூட்டிய ஆதிதிரத்தால்-எங்கள் தனிப்பட்டமுறைப் பேச்சில், இந்த காந்தியைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று நண்பர்களிடையில் பேசிக்கொண்டு இருந்திருந்தோம்.

நண்பர் ஆச்சாரியார் அவர்களும் நானும் காந்தியாரைப்பற்றித் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தபோது பல விஷயங்கள் பேசினோம் என்றாலும் காந்திக்குத் தெளிவான புத்தி (Clear Thinking) கிடையாது, மிகவும் (Confused mind) எல்லாம் குழப்பமான எண்ணம்தான்; அதோடுகூடத் தனக்கு எல்லாம் தெரியும் என்கின்ற எண்ணம் உள்ளவர்’ என்பதாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றோம்.

வேறு பல விஷயங்களும் உண்டு; அவை பின்னால் வெளிவரும். இவை ஒருபுறமிருக்க காந்தியால் நமது தமிழ்நாட்டுக்கு_தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல்-பொருளியல் சமுதாய இயல் ஆகியவைகளில் ஏற்பட்ட கேடுகள் அளவிலடங்காதவை என்றாலும், இன்று அது வளர்ந்து விரிந்து மாபெரும் கேடு ஏற்படும் அளவுக்கு-அதாவது, இனிப் பரிகாரம் செய்யமுடியாத அளவுக்குப் பரவி, பலம்பெற ஆரம்பித்துவிட்டதால் ஒரு இரண்டு மூன்றாண்டுகளாக எனது உள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த எண்ணம் வெளியாக்கப்பட வேண்டியதாக ஆகிவிட்டது. இனி அது எந்தவிதத்திலும் தங்காது; வெளியிட-பிரச்சாரம் செய்யத் தயங்காது.

"Mahatma Gandhi" by Liberty Maniacs, Minnesota

“Mahatma Gandhi” by Liberty Maniacs, Minnesota

உலகம் போற்றும் உத்தமர்’ என்று சிலர், மதசம்பந்தமான முறையில் பேசுவது போல், காந்தியைப்பற்றிக் கூறுவதுண்டு. இது பார்ப்பனரில் ஒரு சிறு கூட்டத்திற்குச் சாமியாரான சங்கராச்சாரியை, அவர் தானேதான் கடவுள்’ என்ற தன்மையை 100-க்கு 90 ஆத்திகர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், எல்லாப் பார்ப்பனரும் அவரை லோககுரு ஜகத்குரு என்று எப்படிச் சொல்லுகிறார்களோ அதுபோலும், நாமும் எப்படி அவரை லோககுரு என்று பேசுகிறோமோ அதுபோலும்-காந்தியை காங்கிரஸ்காரர்கள், உலகம் போற்றும் உத்தமர் காந்தி, மகான் காந்தி, காந்தி மகான்’ என்று அவசியத்தை முன்னிட்டு-மற்ற மக்களை ஏய்ப்பதை முன்னிட்டுப் பேசுவதாலும்; பத்திரிகைக்காரர்கள் பார்ப்பனருக்கு அடிமையாகி வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் அவர்களும் அப்படி எழுதுகிறார்கள். நான் அப்படிப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. எனக்குக் காந்தியை நன்றாகத் தெரியும். ஜின்னாவுக்கும், அம்பேத்காருக்கும் காந்தியை எவ்வளவு தெரியுமோ-அதற்குச் சற்று மேலாகவே எனக்குத் தெரியும்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். காந்தியை வெளியாக்கவேண்டிய முக்கியமான அவசியம்-காங்கிரஸ்காரர்களையோ சட்டசபை மெம்பர்களையோ, பத்திரிகைக்காரர்கிளையோ, பாமர மக்களையோ திருத்திவிடலாம் என்கின்ற எண்ணத்தால் அல்ல. மற்றென்னவென்றால், நமது பின் சந்ததிக்கு-விஷயத்தைச் சொல்லி விளக்கிவிட்டுப் போனால், பயன்படுகிறபோது பயன்படட்டும்’ என்கின்ற எண்ணமும்; மோசடிக்கார நம் எதிரிகளின் கூலிகள் தங்கள் வாழ்வுக்கு இனிமேலாவது- காந்திமகான் சொன்ன வழி’ என்று சொல்லி மக்களை ஏய்க்காதிருக்கட்டும் என்பதுமாகும்.

காந்தியால் நம் சமுதாயத்திற்கு-நம் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? காந்தியால் நாம் ஏமாற்றப்பட்டோம் காந்தியால் நம் நாடு வடவனுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்தப்பட்டது. காந்தியால் மக்களிடம் இருந்த ஒழுக்கங்கள் அடியோடு நாசமாகி எல்லாத் துறைகளிலும் ஒழுக்கக் கேடும் நாணயக் கேடும் வளர்ந்து, இன்று ஒரு துறையிலாவது-ஒரு மனிதனிடத்திலாவது-ஒழுக்கம், நாணயம் என்பது இல்லாமல் போனதோடு அயோக்கியத்தனம், பித்தலாட்டம், வஞ்சகம், துரோகம் இல்லாமல்-அப்படி நடக்காமல் எவரும் வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசியல் துறை ஆபாசக் களஞ்சியம், பித்தலாட்ட ஊற்றாக ஆகிவிட்டது.

மனிதனுக்கு மான ஈன உணர்ச்சி சிறிதுகூட நினைக்கவே முடியாமல் போய் விட்டது.

ஜனநாயகம் என்றால், ஒட்டர்கள்தாம் முட்டாள்கள் என்றால், பிரதிநிதிகள்100-க்கு 99 அயோக்கியர்கள், வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.

ஜனநாயகம் என்றால்-10 ஆயிரம் முதல் 100 ஆயிரம் வரை செலவு செய்தால்தான் ஒருவன் பிரதிநிதி ஆகமுடிகிறது.

இதற்குப் பெயர், காந்தி மகான் காட்டியவழி; காந்தியார் தேடித் தந்த சுதந்திரம் சுயராஜ்யம்’ என்றால், மக்கள் மீது தவறா? காந்திமீது தவறா என்பதை யோசித்துப் பாருங்கள்! மற்றவர்கள் கிதை மறைக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கன். காரணம் என்னவென்றால், அவர்களது பிழைப்பு இந்தப் பித்தலாட்டத்தின் மீது அமைந்துவிட்டது. எனக்கு அந்த நிலைமை இல்லை. நான் மக்களுக்காக வாழ்கிறேன் : மக்களுக்காக எனது பொருளை ஒப்படைத்து இருக்கிறேன்; மற்றும் மக்களுக்காகச் சாகப்போகிறேன் (என் உயிரைக் கொடுக்கப்போகிறேன்) அப்படிப்பட்ட நான், ஏன் இந்த மோசடியை மூடிவைக்க வேண்டும்:

காந்தி பெற்ற சுயராஜ்யத்தில் நாட்டு மக்களுக்கு ஏதாவது பங்கு உண்டாt யாராவது எந்தப் பத்திரிகைக்கார யோக்கியனாவது எடுத்துக்காட்டட்டுமே, பார்க்கலாம்! மந்திரிக்கு சம்பளப் பெருமை, சட்டசபை மெம்பருக்கு படிப் பெருமை தவிர, சொந்த வாழ்வுக்கு வசதி-இதைத்தவிர, அவர்கள் தங்களால் ஆகக்கூடியது இன்னது என்று சொல்லட்டும்; அல்லது தங்களால் ஆனது இன்னது என்று சொல்லட்டும்.

தமிழ்நாட்டில் பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் ஆதிக்கமும் சுரண்டலும் எதற்காக இருக்கவேண்டும் இருக்கவேண்டும் என்று வைத்துக்கொண்டாலும், அவனவன் பங்குக்குமேல் ஏன் இருக்கவேண்டும் காந்திமகான், இருக்கவேண்டும் என்று சொன்னார்’ என்றால் அந்த காந்தி முதலில் ஒழியவேண்டுமா, வேண்டாமா?

சாதிகளைக் கடவுள் உற்பத்திசெய்தார் என்பதால்தானே-அந்தக் கடவுள் முதலில் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி, எரிக்கவும் உடைக்கவும் செய்கிறோம்!

சுயராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் வந்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது; ஜனநாயக-பொதுஜன ஒட்டு’த் தேர்தல்கள் இரண்டு நடந்துவிட்டன. இன்றும் இந்த நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், (அரிஜன்) இருக்கிறான் என்றால்- இது காந்தி மகான் தேடிய சுயராஜ்யம்; இதில் அப்படித்தான் இருக்கும் என்றால்-அந்த காந்திமகான் உருவம் இந்த நாட்டில் இருப்பது இந்த நாட்டு மக்களுக்கு மானக்கேடா, இல்லையா ? யோக்கியமான பத்திரிகைக்காரர்கள், அரசியல் வாழ்வுக்காரர்கள் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்! வாழ்வுக்கு-ஒருவன் மானத்தை விற்கிறான்: ஒருவன் நாணயத்தை, ஒழுக்கத்தை விற்கிறான்; ஒருவன் மனைவியை, மகளை விற்கிறான். ஆகவே, இவர்கள் ஒரு டிகிரி இரண்டு டிகிரி, 5 டிகிரி, 10 டிகிரி வித்தியாசக்காரர்களே தவிர, பொதுவில்-விற்கக் கூடாததை விற்கிறவர்கள்தாமே! நாளைக்குக் கொண்டாடப்போகும் சுதந்திரவிழா-பிராமணன், சூத்திரன், பறையன் இல்லாத நாட்டுச் சுதந்திர விழாவா, மக்களை ஏமாற்றி மோசம் செய்த யோக்கியப் பொறுப்பற்ற சுயநல வஞ்சகர்கள் சுகவாழ்வுக்கு நடத்தும் நாட்டுச் சுதந்திர விழாவா என்று கேட்கிறேன். யோக்கியமான, மானமுள்ள பத்திரிகைக்காரர்கள் சொல்லட்டும், பார்க்கலாம்! திருடனைத் திருடன் மிரட்டலாம்; திருடாதவனைத் திருடன் எப்படி மிரட்டமுடியும் ! மத்திரிசபை காங்கிரஸ்காரர்களே சட்டசபை மெம்பர்களே! யோக்கியப் பொறுப்பு கடுகளவுமில்லாத பத்திரிகைக்காரர்களே! நாளைக்கே காந்தி படத்தைக் கொளுத்தப் போவதில்லை.

நாளன்றைக்கே காந்தி சிலையை அப்புறப்படுத்து என்று கேட்கப்போவதில்லை! நல்லபடி நாடுமுழுதும் பிரச்சாரம் செய்து-நான் சொல்லாமலே பொதுமக்கள் அந்த வேலைகளைச் செய்ய முன்வரும்படி, அல்லது நானே செய்யச்சொல்லும்படி சொல்லப் போகிறேன்! கண்டிப்பாய்ச் சொல்லப்போகிறேன்! அதற்குள் உங்கள் துரோகத்தையும் விஷமத்தையும் செய்துபாருங்கள். மற்றவை பின்னால், (விடுதலை-தலையங்கம்-13.8-1957)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s