மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 5

பகுரூபி காந்தி- காந்தி எனும் துப்புரவுப் பணியாளர் :-

மொழியாக்கம் – ஒத்திசைவு ராமசாமி

scavengerகாந்தி எனும் கக்கூஸ்காரர் , அல்லது காந்தி எனும் துப்புரவுப் பணியாளர், மாசு அகற்றுபவர், தெரு பெருக்குநர், தோட்டி என எவ்வளவோ – ’நாகரீகமாக,’ நாசூக்காக, இவ்வத்தியாயத்துக்குத் தலைப்பு வைக்கலாம்; மேட்டிமைத் தனத்துடன் நுனி நாக்குப் பேச்சுப் பேசலாம்.
ஆனால், கக்கூஸ் என்கிற தமிழ்த் திசைச்சொல் அதிகபட்சம் கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே பெருவாரியாகப் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்றாலும், எனக்கு தலைப்பிலுள்ள, ’கக்கூஸ்காரர்’ என்கிற மொழியாக்கம் தான் நம்மில் மிகப் பலரின் – மலஜலங்களை நோக்கும் வெறுப்பு /அருவருப்புப் பார்வையையும், முகம் சுளித்தலையும், அதன்மீதான அதீத அசிங்க உணர்ச்சியையும், அத்தொழில் சார்ந்த அவலத்தையும் வெளிக்கொணர்கிறது, நம்மை திடுக்கிடச் செய்து சிந்திக்க வைக்கிறது என எண்ணம்.
ஆக…
=-=-=-=
“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர்.
’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், முதலாவது பகுதி.
=-=-=-=
ராஜ்கோட்டில் இருந்த காந்தியின் தந்தையார் வீட்டில்., உகா என்றவர் தோட்டி வேலை செய்தார். காந்தி எப்போது உகா-வைத் தொட்டாலும், புத்லிபாய், காந்தியைக் குளிக்கச் சொல்லுவார். காந்தி ஒரு பணிவான, சொன்னசொல் கேட்கும் மகனாக இருந்தாலும், அவருக்கு அது பிடிக்கவில்லை.
அந்த 12 வயதுச் சிறுவன், தன் தாயுடன் வாக்குவாதம் செய்வான், “உகா, நம்முடைய அழுக்கையும் குப்பையையும் சுத்தம் செய்து நமக்காக சேவை செய்கிறார், இப்படி இருக்கையில் அவரை நாம் தொட்டால் எப்படி அது தூய்மைக்கேடாகும்? நான் உங்களை அவமதிக்கும், உங்கள் சொல்லை மறுக்கும் காரியம் செய்ய மாட்டேன் – ஆனால் ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது அல்லவா, ராமன், சண்டாளரான குஹகாவை ஆரத்தழுவிக் கொண்டாரென்பது? ராமாயணம் நம்மை தவறான வழி நடத்துமா என்ன?”
புத்லிபாய், இம்மாதிரி வாக்குவாதங்களால், வாயடைத்துப் போவார்.
=-=-=-=
காந்தி தோட்டி வேலையை செவ்வெனே செய்ய, தென் ஆஃப்ரிகாவில் தான் கற்றுக் கொண்டார். அங்கே அவருடைய நண்பர்கள் அவரை அன்புடன், மஹா தோட்டி (’great scavenger’) எனத்தான் அழைத்தார்கள்.
=-=-=-=
மூன்று வருடங்கள், தென் ஆஃப்ரிகாவில் இருந்த பின், காந்தி, ராஜ்கோட்டில் வசித்து வந்த தம் மனைவியையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டுப் போக இந்தியாவுக்கு வந்தார். அச்சமயம் மும்பய் ராஜதானியில் கொள்ளை நோய் (plague) பரவிக் கொண்டிருந்தது. அங்கிருந்து அது ராஜ்கோட் வரை பரவ கூட வாய்ப்பிருந்தது.
உடனடியாக காந்தி, ராஜ்கோட்டின் சுகாதாரத்தைச் சரி செய்து நகரைத் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவர் ஓவ்வொரு வீட்டிற்கும் சென்று சுத்தம், சுகாதாரம் பற்றிப் பேசினார்; ஒவ்வொரு கழிவறையையும் விஜயம் செய்து,, எப்படி அவர்களெல்லோரும் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவுரை சொன்னார்.
அவர் ஆய்வு செய்த கழிவறைகள் அவருக்கு மிகுந்த ஆயாசமளித்தன; கழிவுக் குழிகளில் இருந்த துர்நாற்றமடிக்கும் கரும் கழிவுகள், வியாதிக் கிருமிகள் மிகுந்த சாக்கடை நீர் அவரை மிகவும் அருவருப்படையச் செய்தன.
உயர் குடிகள் வாழ்ந்து கொண்டிருந்த சில வீடுகளில், வீட்டு புறக்கடை, முன்வாயிலிலிருந்த கால்வாய்கள், கழிப்பிடங்களாக உபயோகப் படுத்தப்பட்டன – காந்திக்கு அந்த முடைநாற்றம் பொறுக்க முடியாத அளவில் இருந்தது. ஆனால் அவ்வீடுகளில் வசித்த மனிதர்கள் இந்தச் சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றிக் கவலையே படவில்லை, அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
ஆனால், பரம ஏழைகளான தீண்டத்தகாதவர்கள், ஓரளவுக்குச் சுத்தமான வீடுகளில் வசித்தனர் – காந்தியின் அறைகூவல்களுக்கும் செவி சாய்த்தனர். அவ்வீடுகளில் காந்தி, இரணடு வாளி முறையைக் கடைப் பிடிக்கச் சொன்னார்; அதாவது ஒரு வாளி சிறு நீருக்கு, இன்னொரு வாளி, மலத்துக்கு. ஆக, சுகாதாரச் சூழல் இவ்வீடுகளில் ஒரளவுக்கு நல்லபடியாக முன்னேற்றமடைந்தது…
=-=-=-=
காந்தியின் குடும்பம், ராஜ்கோட்டில் பிரபலமானது.காந்தியின் தகப்பனாரும் பாட்டனாரும், ராஜ்கோட்டிற்கும், அதன் பக்கத்து சமஸ்தானங்களிலும் திவானாக (இதனை, ஒரு சமஸ்தானத்தின், சிற்றரசின் பிரதம மந்திரி போன்ற பதவி எனக் கருதலாம்) நெடுங்காலமாக இருந்து வந்தனர். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர், ஒரு திவானின், ‘பாரிஸ்டர்’ மகன்

தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து, ஒவ்வொரு வீட்டுக் கழிப்பறையையும் ஆய்வு செய்வது என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயமும், காந்தியின் ‘குண்டு’ தைரியத்துக்கு ஒரு சான்றான விஷயமும் ஆகும்.

காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு – தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை.
காந்தி, பல மேற்கத்திய பழக்க வழக்கங்களை விமர்சனம் செய்தார் தாம். ஆனாலும் அவர், தாம் அடிப்படைச் சுகாதாரம் பற்றி அறிந்து கொண்டது மேற்கத்தியர்களிடமிருந்தே என மறுபடியும் மறுபடியும் சொல்லி வந்திருக்கிறார்.
காந்தி, மேலை நாடுகளில் காணப்பட்ட சுத்தத்தையும் சுகாதாரத்தையும் – நமது நாட்டிலும் கொணர முயன்றார்.
=-=-=-=
தென் ஆஃப்ரிகாவிலிருந்து இரண்டாம் முறை இந்தியா வந்தபோது, காந்தி, கொல்கொத்தா காங்கிரஸ் [1901 என நினைவு] மாநாட்டிற்குச் சென்றார். அங்கே அவர் சென்றது, தென் ஆஃப்ரிகாவில், இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் அங்கு படும் பாட்டைச் சொல்லி ஆதரவு தேடுவதற்காக.
ஆனால், அந்த மாநாட்டில், சுகாதாரச் சூழல் என்பது பரிதாபமாகவும், துணுக்குறும் வகையிலும் இருந்தது. வந்திருந்த சில உறுப்பினர்கள், தாங்கள் தங்கியிருந்த கூடத்தின் முன் வராண்டாவையே கழிப்பறையாக்கியிருந்தனர் கூட!
ஒருவர் கூட, இம்மாதிரிச் செய்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவே இல்லை – ஆனால், காந்தி மட்டுமே, உடனடியாக இந்த நடத்தைக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக, துப்புரவுப் பணியிலிருந்த தன்னார்வக் குழுவினருடனும் பேசினார். ஆனால், அவர்கள் சொன்னார்கள், “அந்த வேலை, தோட்டிகளுடையது, எங்களுடையது அல்ல.”
காந்தி, பதில் பேசாமல், ஒரு விளக்குமாறைக் கேட்டுப் பெற்று, மலக்கழிவுகளைச் சுத்தம் செய்தார்.
அவ்வமயம் காந்தி மேலை நாட்டு பாணியில் தான் உடையணிந்திருந்தார். இப்படி உடையணிந்த ஒருவர் மலத்தை அள்ளுவதைப் பார்த்த அந்த தன்னார்வக் குழுவினர் ஆச்சரியப் பட்டார்களே ஒழிய உதவிக்கு வரவில்லை…
=-=-=-=-=
பல வருடங்களுக்குப் பின், காந்தி காங்கிரஸ் இயக்கத்தின் அச்சாணியாக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த போது, பல தன்னார்வமிக்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தோட்டிக் குழு (bhangi squad)  அமைத்து, மாநாடுகளில் சுத்தம் செய்வதைச், சுகாதாரத்தைப் பேணுவதைச் செவ்வனே செய்தனர்.
ஒரு சமயம் பிராமணர்கள் மட்டுமே தோட்டிகளாக வேலை செய்தனர் ஹரிபுரா காங்கிரஸ் (1938) மாநாட்டின் போது, 2000 ஆசிரியர்களையும் மாணவர்களையும் விசேஷமாக தோட்டித் தொழிலில் பயிற்சி பெற வைத்து, அவர்கள் சுகாதாரத் தூய்மைப் பேணலில் ஈடுபடுத்தப் பட்டனர்.
காந்தியால், தீண்டத் தகாதவரிகள் எனக் கருதப் பட்ட ஒரு சாரார் மட்டும் தான் தோட்டி வேலை செய்ய வேண்டும், என்பதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.
அவர் நமது நாட்டிலிருந்து தீண்டாமையை விரட்ட வேண்டுமென்றுதான் விரும்பினார்…
=-=-=
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s