இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்

 

gandhi-statue-vandalised-in-sri-lanka-1333750057-1132சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, “வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது’ என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, “சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்’ என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். “தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?’ என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, “தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு’ என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்’ என்றேன்.

“அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல’ என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், “ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்’ என்றார். அதற்குப் பிறகும், “சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்’ என்றார்கள். நான், “சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக “காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி’ என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், “காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்’ என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். “ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!’ என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. “விடுதலை’ 9.10.1957)

Image Source :: Gandhi statue vandalised in Sri Lanka

Related :: மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது

காந்தி கிணறு திறப்பு விழாவில்  காந்தியின் கடவுள்   காந்தியின் மறைவு குறித்து பெரியார்  இந்து மத ஒழிப்பு தினம்

Advertisements

2 thoughts on “இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்

  1. Pingback: பெரியாரை அணுகுவது எப்படி ? | இராட்டை

  2. Pingback: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு – அண்ணா | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s