
வளங்கள் குறித்த கேள்விகள்
33. திட்டமிடுதல் என்பது வெறும் வார்த்தைகளோ, சிந்தனைகளோ மட்டும் அல்ல. திட்டங்களை செயல்படுத்த வேண்டுமெனில், அதற்கான பொருளாதார வழிமுறைகளைக் காண வேண்டும். செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களைக் காட்டாமல் கட்சியின் செயல் திட்டங்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
34. கூட்டமைப்பின் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான தொகை குறைந்தது அல்ல என்ற போதும் சமாளிக்க முடியாதது அல்ல. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது:
(1) ராணுவ செலவினங்களைக் குறைத்தல்
(2) உப்பு மீது மீண்டும் வரி விதித்தல்
(3) மதுவிலக்கு ஒழிக்கப்படுவதன் மூலம் கலால் வருமானத்தை அதிகரித்தல்
(4) காப்பீடு தொழிலை தேசியமயமாக்குதல்
35. இந்திய அரசின் மொத்த வருமானம் 350 கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை அல்லது ஆண்டுக்கு ஏறத்தாழ 180 கோடி ரூபாய் ராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், ராணுவத்தின் மீதான இந்த செலவு மிகவும் ஆடம்பரமானதாகும். இந்த அறிக்கையில் பரிந்துரைத்தபடி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டால், ராணுவ செலவுகளை ஆண்டுக்கு 50 கோடி வரையில் குறைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
36. உப்பு வரி மீண்டும் விதிக்கப்படாததற்கு எந்தக் காரணமும் இல்லை. உப்பு வரி நீக்கப்பட்டது வெறும் உணர்ச்சி வசப்பட்ட முடிவாகும். அது உப்பின் விலையைக் குறைக்கவில்லை. மாறாக, உப்பு மிகவும் அரிதான பொருளாகி விட்டது. இதனால் விளைந்த ஒரே பலன், ஆண்டுக்கு ஏறத்தாழ 11 கோடி ரூபாய்கள் பெற்றுத் தந்த ஒரு நிதி ஆதாரத்தை அரசு இழந்துவிட்டது. இது, நாட்டின் வளர்ச்சியைப் பெருமளவில் முடக்கி இருக்கிறது. ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் ஈட்டித் தரும் அளவிற்கு வரி விதித்தால்கூட, அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
37. மதுவிலக்கு முட்டாள்தனமானது. அது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். ஏனெனில், அது தடுக்க நினைத்த கேடுகளைவிட, அதனால் விளைந்த கேடுகளே அதிகம். சாராயம் காய்ச்சுதல் ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. முன்பு ஆண்கள் மட்டுமே மது அருந்தினர். தற்போது பெண்களும் குழந்தைகளும்கூட மது அருந்துகின்றனர். ஏனெனில், அது அவர்கள் கண் முன்பு வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களிடையே பண்பாட்டுச் சீரழிவையும், கூடுதலான குற்றச் செயல்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.
38. அரசின் வளங்களைப் பாதுகாப்பது என்ற நோக்கில் இது பெரும் வீண் ஆகும். பகுதி ‘அ’ மாநிலங்களில் 1945-46 ஆண்டில் கிடைத்த கலால் வரி வரவு 51.67 கோடி ரூபாய். 1950-51இல் 25.23 கோடி. 1951-52 இல் 24.95 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. 1945-46 ஆம் ஆண்டிற்கான தொகை, பிரிக்கப்படாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தை உள்ளடக்கியது. பகுதி “அ’ மாநிலங்களில் மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பு, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் ஆகும். இது, மது விலக்கு ஒழிக்கப்பட்டால் கிடைத்திருக்கக் கூடிய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் ஆகும்.
39. பம்பாய்க்கு 1946-47இல் கிடைத்த கலால் வருமானம் 9.74 கோடி ரூபாய். 1950-51இல் 1.20 கோடி மற்றும் 1951-52க்கான எதிர்பார்ப்பு 1.05 கோடி. ஆக, கலால் வருமானத்தில் இழப்பு ஏறத்தாழ ஆண்டிற்கு 8.7 கோடி ரூபாய்.
40. சென்னைக்கு 1945-46இல் கிடைத்த கலால் வருமானம் 16.80 கோடி ரூபாய். 1951-51இல் அது 50 லட்சமாக குறைந்தது. 1951-52க்கான எதிர்பார்ப்பு 36 லட்சம். ஆக, மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பு 16 கோடி ரூபாய்.
41. உத்திரப் பிரதேசத்தில் 1947-48 இல் 7.06 கோடி ரூபாய் கலால் வருமானம். 1950-51இல் அது 5.93 கோடியாக இருந்தது. 1951-52க்கான எதிர்பார்ப்பு 5.84 கோடி. இழப்பு 1.2 கோடி.
42. மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் வங்காளத்திலும் கலால் வருமானத்தில் சரிவு காணப்படுகிறது.
43. மும்பை மற்றும் சென்னையில் மட்டும் கலால் வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, ஏறத்தாழ 25 கோடி ரூபாயாகும். ஏறத்தாழ அதே அளவுதான் பகுதி ‘அ’ மாநிலங்களின் ஒட்டுமொத்த கலால் வருமான இழப்பாகும்.
44. இந்தப் புள்ளி விவரங்கள் முழுமையானவை அல்ல. இவற்றில் பகுதி ‘ஆ’ மாநிலங்களைப் பற்றிய தகவல்கள் இல்லை. ஏனெனில், அவை கிடைக்கவில்லை. மேலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக செய்யப்படும் செலவினங்கள் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
45. சமபங்கு என்ற நோக்கிலும் மதுவிலக்கு நியாயமற்றதேயாகும். மதுவிலக்கிற்கான செலவினங்கள் பொது மக்கள் மீதே விழுகின்றன. ஒன்று அல்லது இரண்டு லட்சம் திருத்தப்பட இயலாத குடிகாரர்களைத் திருத்துவதற்கான செலவை, ஏன் பொது மக்கள் ஏற்க வேண்டும்? மக்களின் பிற தேவைகளான கல்வி, குடியிருப்பு, சுகாதாரம் போன்றவற்றிற்கு வழி இல்லாத நிலையில், ஏன் பொது மக்கள் மதுவிலக்கிற்கான செலவை ஏற்க வேண்டும்? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது? யாருக்கு கூடுதல் முக்கியத்துவம் குடிகாரருக்கா? பசியால் வாடுபவருக்கா? சிந்திக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஆனால், அவற்றிற்கு வறட்டுப் பிடிவாதத்தைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை. என்ன நடந்தாலும் மதுவிலக்கு கொள்கை மாற்றப்பட வேண்டும். மக்கள் பணம் இப்படித் தேவையற்று செலவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பயன்படுத்தப்படும் வளங்கள், பொதுநலனை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும்.
46. காப்பீடு தொழிலை தேசியமயமாக்குதல் என்பதில், கீழ்க்காணும் புள்ளி விவரங்கள் மூலம் அதுதான் மிகுந்த வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில் என்பதைக் காணலாம்.
47. மேற்கண்ட தகவல்களின் மூலம் ஓராண்டில் காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ள தொகை 37 கோடி என்பது தெரிகிறது. வங்கி வைப்பைப் போல, இது கேட்டால் கிடைக்கும் வைப்பு நிதி அல்ல. அதனால் அவை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களில் முமுதலீடு செய்யப்படலாம். காப்பீட்டு நிறுவனங்கள் அரசு பத்திரங்களில் தங்கள் பணத்தை முமுதலீடு செய்கின்றன என்பது உண்மைதான். அந்த அடிப்படையில் இறுதியில் காப்பீட்டு நிதி அரசுக்கே வந்து சேர்கிறது என்று கூறலாம். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கு இது சரியான பதில் அல்ல.
ஏனெனில், அரசு பத்திரங்களில் முமுதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவானது : 37 கோடியில் வெறும் 9 கோடி மட்டுமே. இரண்டாவதாக, இந்த பத்திரங்களுக்கு அரசு வட்டி செலுத்த வேண்டும். அது வரி செலுத்துபவர்கள் மீதான தேவையற்ற கூடுதல் சுமையாகும். மூன்றாவதாக, பிரிமியம் வருமானத்தில் ஏறத்தாழ 29 சதவிகிதத்தை காப்பீட்டு நிறுவனங்கள் விழுங்கி விடுகின்றன. 1949 இல் இது 37 கோடியில் 11 கோடியாகும். இது, ஏற்றுக்கொள்ள முடியாத பண விரயமாகும். இவை அனைத்தையும் தேசியமயமாக்குதல் மூலம் தடுக்கலாம்.
48. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, காப்பீட்டுத் தொழிலை தேசியமயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு காப்பீட்டை கட்டாயமாக்கும். கட்டாய காப்பீடு தனி நபர்களுக்கு பாதுகாப்பைத் தருவதோடு, அரசு நிதியைப் பெருக்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
49. சுருக்கமாக, கூட்டமைப்பின் திட்டப்படி நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் வருமாறு:
50. மேலே குறிப்பிடப்பட்ட நிதி ஆதாரங்கள், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
Pingback: அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் | இராட்டை
Pingback: அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் | இராட்டை
Pingback: அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் | இராட்டை
Pingback: அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் | இராட்டை
Pingback: Ambedkar’s Political career | இராட்டை