பாரதி ஆராய்ச்சி அறிவாளியா? இயற்கைவாத கவியா? அவர் ஒரு புராண பண்டிதரே

நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.

images_bharathi1பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவு

பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். “எல்லோரும் ஓர் இனம்” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,” “தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லவயமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தேமாதரம் – ஆரிய பூமியில்.

பாரத நாடு – யாகத்திலே தவ வேகத்திலே.

நாட்டு வணக்கம் – துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.

பாரததேசம் – மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில் – பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை வானவர் காப்பார்.

எங்கள் நாடு – என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே உன்னத ஆரிய நாடெங்கள் நாடே.

வந்தேமாதர மொழிபெயர்ப்பு – காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.

எங்கள் தாய் – நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.

பாரதமாதா – முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி – தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.

தசாங்கம் – ஆரிய நாடென்றே யறி.

நவரத்தினமாலை – ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய் – ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.

திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.

கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.

ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி – மந்திர வேதத்தின் பேரொலி,
தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்.

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே – பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன். அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்.

——————- தந்தைபெரியார் – “குடி அரசு” – 17.10.1937

பின்னூட்டமொன்றை இடுக