பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? – பாரதி

 (மகாகவி பாரதியார் எழுதி அவருடைய பெண் தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தில் படிக்கப்பட்டது)

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து 1896-ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை பின்வருமாறு கூறினார்:-

“மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவு சீட்டில்லாமல் யாத்திரை செய்யக் கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புகளில் ஏறக்கூடாது. நம்மை டிராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்று கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். “ஹூஸ்” என்று சித்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மணுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் அன்னியர் காலின்கீழ் போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று” என்றார்.

என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா? ஆனால் சகோதரிகளே! தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்! சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ் நாட்டில்; மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள். காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல, நம்மை விலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறொ மெனினும், இந்த நிலைமிக, இழிதானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் அப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பினர். சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். “அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்” என்று காந்தி சொன்னார். சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போல திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம் அதுபற்றியே, ‘சாத்வீக எதிர்ப்பி’னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன். ‘அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதினின்றும், அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு அந்தக் காலமே சரியான காலம் இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முஹீர்த்தமே தகுந்த முஹுர்த்தம். சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப் போல ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ட்ஸார் சக்ரவர்த்தி இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். ‘பாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்’ என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக் காற்று ‘விர், விர்’ என்று வேகமாக வீசுகிறது. ஒரு ஸ்திரியானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:- “நான் எல்லாவகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணை முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. “சிறிது, சிறிதாக, படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம்” என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும். இங்ஙனம், ‘பரிபூரண ஸமத்வமில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்’ என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மையுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம், நமக்கு மஹாசக்தி துணை செய்வாள். வந்தேமாதரம்!

– மகாகவி பாரதியார்

25tv_GP_Pillai_1768023e

[Indian National Congress, in  session at Calcutta, adopted, on motion by G.P. Pillai, delegate from the Natal Indian  Congress briefed by Gandhi, resolution protesting against the disabilities of Indians in  South Africa and appealing to the Government for remedial measures.]

Malayali who found a place in Gandhi’s heart,biography – The Hindu February 25, 2014

தொடர்புடைய கட்டுரை : தென் ஆப்பிரிக்காவில் பாரத ஜனங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s