காந்தியும் வர்ணாசிரம தர்மமும் – சந்திரசேகர சரஸ்வதி

Kanchi_Paramacharya.148201558_stdதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

வைதிக மதம்

தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?

இப்போது பெரிய பெரிய தலைவர்களிலிருந்து ஆரம்பித்து தெருவில் போகின்றவன் வரை அத்தனை பேரும் ஜாதி எதற்கு என்கிறார்கள். நாமும்தான் இதைப் பற்றி பேசலாமே என்று ஆரம்பித்தேன். நன்றாக ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருப்பதுதான் எல்லாருக்கும் க்ஷேமம் என்று தெரிகிறது. சமூகம் முழுவதும் முன்னேறுவதற்கும் சரி, அவரவரும் சித்த சுத்தியடைந்து ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கும் சரி, இந்த ஏற்பாடே நிரம்ப சகாயம் செய்கிறது என்று தெரிகிறது.

இதை நான் சொல்கிறேன் என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை; சாஸ்திரங்கள் சொல்கின்றன என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. “முன்னேற்றத்”துக்கு விரோதிகளான பிற்போக்குக்காரர்கள் என்றே எங்களை வைத்துவிட்டாலும் சரி, ஆனால் இந்தத் தேசம் எப்படியும் முன்னேர வேண்டும் என்பதுதான் ஒருத்தருக்கு லட்சியமாக இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். தேசத்தில் இருந்த பேதங்களை, மூட நம்பிக்கையை எல்லாம் நீக்கி, பிற்பட்டவர்களை மற்றவர்களுக்குச் சமமாக ஆக்குவதற்காகவே அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஒருத்தரான காந்தி இந்த வர்ணாசிரம தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு ரொம்பவும் சிலாகித்திருக்கிறார். இதைத் சொன்னாலாவது எல்லோரும் இந்த ஏற்பாட்டில் இருக்கிற நல்லதை எடுத்துக் கொள்வீர்களோ என்பதால் சொல்கிறேன். My Varnashrama Dharma (என் வர்ணாசிரம தர்மம்) என்றே காந்தி ஒரு வியாஸம் எழுதியிருக்கிறார். அதிலே,* ‘இந்த வர்ணாசிரமம் என்பது மநுஷ்யனுக்குத் தானாக ஏற்பட்டது. ஸ்வாபாவிகமானது, இயல்பானது, ஒருத்தனுக்குப் பிறப்பாலேயே அமைந்துவிட்ட விஷயம் அது. இந்த இயற்கை விதியை ஹிந்து மதம் ஒரு ஸயன்ஸாக, சாஸ்திரமாக ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறது’ என்றார். ‘இந்த ஏற்பாடு, தொழிலை நாலாகப் பிரித்துக் கடமைகளைத்தான் தருகிறதே தவிரச் சலுகைகளைத் தரவில்லை. ஒருத்தன் தனக்கு உசத்தி கொண்டாடிக் கொள்வதோ, இன்னொருத்தனை மட்டம் தட்டி வைப்பதோ ஹிந்து மதத்தின் உயிர்ப் பண்புக்கே விரோதமானது. அவரவரும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவும், சமுதாயத்தின் சக்தியை விரயமாக்காமல் சிக்கனமாக காக்கவுமே வர்ணாசிரமம் இருக்கிறது’ என்றெல்லாம் ரொம்பவும் சிலாகித்துக் சொல்லியிருக்கிறார். ‘தீண்டாமையைத்தான் நான் தீமை என்று சண்டை போடுகிறேனே ஒழிய, வர்ணாசிரமம் என்பது சயன்ஸ் மாதிரி ஒரு சத்தியத்தையே சொல்கிறது என்பதால் அதை ஆதரிக்கவே செய்கிறேன். ஒருத்தனுடைய பிறப்பை அடிப்படையாக வைத்துத் தொழில்களைப் பிரித்துக் கொடுக்கிற வர்ணாசிரம தர்மம் சமூதாய வாழ்வுக்கு ரொம்பவும் ஆரோக்கியமூட்டுவது என்பதே என் அபிப்பிராயம். இது ஏதோ குறுகிய புத்தியால் செய்த ஏற்பாடில்லை. இந்த ஏற்பாடு ஒரு தொழிலாளிக்குக்கூட பெரிய அறிவாளிக்குள்ள அந்தஸ்தைத் தருகிற அமைப்பு என்பதே என் அபிப்பிராயம்’ ** என்றெல்லாம் சநாதனிகளைவிடப் பெரிதாக ஆதரித்துப் பேசுகிறார்.

‘ஆனாலும் அவர் செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே; கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே’ என்றால் அதற்குக் காரணம், ‘வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீடு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு’ என்று அவர் நினைத்துவிட்டார்.

நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய மதத்துக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கும் ஒரு ஏற்பாடு சொஸ்தப்படுத்த முடியாதபடி பாழாகிவிட்டது என்று விட்டுவிடுவதானால் மடமும் வேண்டியதில்லை, மடாதிபதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணி வேரான தர்மம் போகவிட்டு, மதாசாரியன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை நடத்துவது சமூகத்தைப் பிடுங்கித்தின்கிற காரியம்தான். வாஸ்தவமாகவே பழைய ஏற்பாடு போயே போய்விட்டது என்றால் மடம் வேண்டியதில்லை! கலைந்துவிட வேண்டியதுதான். ஆனால் இன்னமும் அப்படி ஆகிவிடவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் நாளில் அது அடியோடு அழிந்துபோகிறதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் நான் நினைத்துவிடவில்லை. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டியதை முழு மூச்சோடு செய்தால் அதை புது தெம்போடு எழுந்திருக்கப் பண்ணலாம் என்றே நம்புகிறேன். மற்றத் தொழில் பிரிவினைகள் எப்படிக் கலந்து போனாலும் போகட்டும். எல்லாவற்றுக்கும் உயிர் நாடியாக இருக்கப்பட்ட வேதாத்யயனம் இன்னமும் அங்கங்கே ஒரொரு பாடசாலையில் பழைய வழி தப்பாமலே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கணிசமான வசதிகளை செய்து கொடுத்து வேத வித்தைப் பரப்புவதற்காக எடுத்திருக்கிற பிரயத்தனங்களுக்கும் உற்சாகமான வரவேற்பு இருக்கிறது. நிறைய வித்யார்த்திகள் சேருகிறார்கள். அடுத்த தலைமுறையில் வேதம் என்று ஒன்று இருக்கப் பண்ணுவதற்கு ஒரு சின்னக் கூட்டமாவது நிச்சயமாக இருக்கிறது. இதை இருக்கப் பண்ணுவதும் மேலும் விருத்திப் பண்ணப் பாடுபடுவதும்தான் என் கடமை. இது ஒன்று இருந்துவிட்டால் மற்ற வர்ணங்களில் ஏற்படுகிற குழறுபடிகளால் உண்டாகும் தோஷங்களுக்கும் நிவிருத்தியாக வழி பிறக்கும். ஓர் உதாரணமாக (example), வழிகாட்டிகளாக (guide) பிராம்மணம்-அத்தனை பிராம்மணர்களும் இப்படி செய்யாவிட்டாலும், ஒரு சிலராவது–தன் பிராசீன வழியிலேயே உறுதியாக இருந்து கொண்டிருந்தால், இதுவே மற்றவர்களையும் அவரவர்களுக்கான தர்மத்தில் திருப்பி விடுகிற சக்திக்காக (influence) இருக்கும்.

காந்தியும் என்னைப் போலவே வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தவர்தான். ஆனால் அது, யதார்த்தத்தில் கெட்டுப்போய் விட்டது. அதை சீர்திருத்த முடியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நானோ இந்தத் தர்மம் மங்கிததான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும், அடியோடு அணைந்துவிடவில்லை, இருக்கிற பொறிகளை ஊதி ஊதி நன்றாக மூட்டிவிட முடியும், என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதை விட்டால் சமூதாயத்துக்கு மகத்தான கஷ்டம்தான் வருகிறது என்பது நம் தேசத்தின் கடைசீ ஐம்பது வருஷ சரித்திரத்தைப் பார்த்தாலே தெரிகிறது, வர்ண தர்மம் இல்லாத மற்றத் தேசங்களின் பெரிய நாகரீகங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தாலும் தெரிகிறது.

மெஷின்கள், பெரிய ஆலைகள் வந்ததுதான் பழைய பாரம்பரியத் தொழில்கள் நலிவதற்கு முக்கியமான காரணம். எளிய வாழ்க்கையில் மெஷினுக்கு அதிக இடமில்லை. கைத்தொழில்களே செய்து எல்லோரும் எளிமையாக வாழ்ந்தால் பழைய ஏற்பாடுகளைக் காப்பாற்றி விடலாம். ‘மநுஷ சக்தியைக் கொண்டுதான் காரியங்கள் நடக்க வேண்டும். ராக்ஷஷ மெஷின்கள் கூடாது; வாழ்க்கையே ரொம்ப எளிமையாக இருக்க வேண்டும்; அத்யாவசியத் தேவைக்கு அதிகமாகத் துளிக்கூட டாம்பிகமே உதவாது’ என்றெல்லாம் காந்தியும்தான் ஓயாமல் சொல்லி வந்தார். இப்படி அவர் சொன்னதெல்லாம் வர்ண தர்மத்தை நிலைப்படுத்துவதற்கு அநுகூலம்தான்.

ஆனால் இப்போது சர்க்கார் திட்டங்கள், ஜனங்களின் மனப்பான்மை எல்லாமே இந்த எளிய வாழ்க்கை, கைத்தொழில்கள் இவற்றுக்கு வித்தியாசமாக ஆகியிருக்கின்றன. ஆனால் இன்னமும் வாயால் ‘காந்தி’ ‘காந்தி’ என்று ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருப்பதை மட்டும் விடக்காணோம். ஏனென்றால் அவர் நிச்சயமாகவே சமுதாயத்துக்கு நல்லதை நினைத்து, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட சீர்திருத்தவாதிதானே தவிர, பழசு என்பதற்காகவே சாஸ்திருத்தங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிற ‘முரட்டு ஸநாதனி’ அல்ல என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் இப்படி நடுநிலையிலிருந்து பார்க்கப்பட்டவர் வர்ணாசிரமத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று எடுத்துச்சொன்னால், அது உங்களுக்கு மனஸில் கொஞ்சம் அழுத்தமாகவே பதியக்கூடும் என்று நினைத்தேன்.

மேலும் … 

–  சந்திரசேகர சரஸ்வதி

மஹாத்மா காந்தி அஹிம்ஸகர். ஆனால் அவரை ஒருவன் சுட்டுக் கொன்றான் என்றால் அவருடைய அஹிம்ஸையும் பூர்ண அஹிம்ஸை அல்ல என்று ஏற்படுகிறது. சரித்ரத்தில் அவர் தம் வீட்டில் ஓர் கன்று சாகும் தருவாயில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததைக் சகிக்காமல் அதைக் சுட்டுக் கொன்று அதன் துக்கத்தை போக்கினார் என்று படிக்கிறோம். தேசத்தில் உணவு பற்றாத சமயம் அவர் சமுத்ரத்தில் உள்ள மீன்களைப் பிடித்து உண்ணலாம் என்று அறிக்கை விடுத்ததும் அஹிம்சைக்குப் புறம்பானதே.

ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8 அஹிம்ஸையின் தத்துவம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s