காந்திஜி காண விரும்பிய நாடு – அண்ணா

“பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ணவேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கவேண்டும். மக்களில், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்.”

இதுவே, உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம் என்று அறிவிக்கிறார் பண்டித நேரு.

ஒரு நாடு, அன்னியரிடம் அடிமைப்பட்டு விடுதலைப் போர் தொடுத்து, பிறகு தன்னாட்சி பெறுவது, மகத்தானதோர் சம்பவம் – உலக வரலாற்றில், ஒவ்வொரு சமயம், படைபலத்தாலோ, இராஜதந்திர பலத்தாலோ, ஏதேனும் ஒரு நாடு பிற நாடுகளை அடிமை கொள்வதும், அடிமைப்பட்ட நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதும், உலக வரலாற்றிலே, எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு விஷயமல்ல – அந்த வரலாற்றிலே, மிக முக்கியமான பகுதியே, இந்தச் சம்பவத்தைக் கொண்டதுதான்.

web5ph080அலெக்சாண்டர், ஜுலியஸ் சீசர் போன்ற ஆதிகால மகா வீரர்கள் கால முதற்கொண்டு, பெர்லின் சர்வாதிகாரி ஹிட்லர் காலம் வரையிலே, இந்த நாடு பிடிக்கும் போக்கு, இருந்த வண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே, போர்த் திறனோடு வீர உணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டப்பட்ட மக்கள் உண்டாயினர். அந்தந்த நாடுகளில். அவர்களைப் பலி பொடுத்து அந்த மாவீரர்கள், மண்டலம் பல வென்று கடைசியில் மாநில முழுவதையுமே தமது ஏகபோக ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற பேராசை கொண்டு, நின்றனர். அதேபோது, போதுமான பலமும், தக்க தலைவரும் இல்லாமல், உள்நாட்டுக் குழப்பமும் பேத நிலையும் கொண்டு இருந்த நாடுகள், புயலில் சிக்கிய நெடு மரங்களெனச் சாய்ந்தன. சரிந்த அரசுகளின் மீது வெற்றி பெற்றவர்கள், சர்வாதிகாரம் செலுத்தினர். அடிமைப்பட்ட நாடுகளிலே, மக்கள் அழுகுரல் கிளம்பி, பிறகு, விம்முவதாகிய அது குறைந்து பிறகு ஏக்கமாகி, பிறகு, அதை வெளியே காட்டுவதும் குற்றம் என்று கோல் கொண்டோன் மிரட்ட, அதனையும் நீக்கிவிட்டு உணர்ச்சியற்றுப்போன நிலையும் பிறந்ததுண்டு. ஆனால் இந்த இருள், நிலைத்திருப்பதில்லை – ஒளி கிடைக்க தாமதம் ஏற்படினும், இடையே சொல்லொனாச் சங்கடம் விளையினும், விடுதலைச் சுடரொளி, எப்படியும் கிளம்பித் தன் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்திருக்கிறது. அவ்வப்போது, ராணுவ பலத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு சாம்ராஜ்யங்கள், சில பல காலத்துக்கப் பிறகு, சிதறி, பழையபடி தனி அரசு கொண்ட பல நாடுகளாகிவிட்டன. விடுதலைப்போர் முரசொலி, அடியோடு எங்கும் எப்போதும், அழிந்து படுவதில்லை. முரசு இருந்து, அதைக் கொட்டும் திறம் படையோர் முன் வராமல் இருந்ததுண்டு. முரசறையும் திறமுடையார் இருந்து, முரசு அமையாது இருந்ததுண்டு. ஆனால் அடிமைப்பட்ட எந்த நாடும், எப்பாடுபட்டேனும், எத்தனை முறை தோற்றேனும், விடுதலையைப் பெறாமல் போனதில்லை. ஏறத்தாழ, இயற்கையின் கட்டளை, இந்த விடுதலை வேட்கை. எனவேதான், எவ்வளவு பெரிய பலமுள்ள நாட்டின் பிடியிலே சிக்கிவிட்டாலும்; ஒருநாள், விடுதலை பெறுவோம் என்ற எண்ணம், கருகுவதி்ல்லை.

விடுதலைப் போர் நடத்தப்படும் காலம், நாட்டின் வரலாற்றிலே சுவையுள்ள பகுதி – வீரச்செயல்கள், தியாக நிகழ்ச்சிகள் நிரம்பிய பகுதி. குன்றுகள் கோட்டைகளாகி, வீதிகள் போர் முகாமாகி, வீடுகளெல்லாம் பாசறையாகி, நாட்டு மக்கள் வீரர்களாகும் வேளை அது. அப்போதெல்லாம் அவர்களின் ஒரே நோக்கம், ஒரே லட்சியம், தன்னாட்சி பெறுவது என்பதுதான் தோட்டத்துக்குள்ளே புகுந்த புலியை விரட்டி அடித்துக் கொல்லவேண்டுமென, தோட்டக்காரர், தன் துணைவருடன் கூடி ஆயுதமெடுத்து, புலி தப்பி ஓடாதபடி நாற்புறமும் நல்ல முறையில் காவல் அமைத்து, தீரமாக உள்ளே நுழைந்து புலியுடன் போராடுகிறபோது, எப்படியாவது இந்தப் புலியை அடித்துக் கொன்றுவிட்டால் போதும் என்ற ஒரே எண்ணம்தான் தோன்றும். புலி கொல்லப்பட்டதும், “அப்பா! கொண்றுவிட்டோம் புலியை. இனிப் பயமி்ல்லை” என்ற ஆறுதல் தோன்றும் – ஆயாசமும் ஏற்படக் கூடும். அதுபோலவே பல்வேறு நாடுகளிலே, விடுதலைப்போர் நடந்த காலங்களிலெல்லாம், எப்படியாவது, நம்மை அடிமைப்படுத்திய அன்னிய ஆட்சியை ஒழித்து நாட்டிலே தன்னாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் ஒரே இலட்சியமே தலைசிறந்து விளங்கிற்று. அந்த ஒரே குறிக்கோளுடனேயே, மக்கள் வீரமாகப் பணியாற்றினர் – அவர்களை நடத்திச் சென்ற தலைவர்களும் பல நாடுகளிலே, விடுதலை வேட்கையை மட்டுமே, முக்கியமாகக் கருதினார். பல நாடுகளிலே, விடுதலை கிட்டியதும், மக்கள், தமது நோக்கம் ஈடேறி்விட்டது; அன்னியன் விரட்டப்பட்டான்; தாய்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. சுதந்திரக்கொடி கெம்பீரமாகப் பறக்கிறது; ஆகவே நமது வேலை முடிந்தது; இனிச் சொந்த வேலையைப் பார்ப்போம் என்ற எண்ணி அங்ஙனமே, பழையபடி ‘பிரஜைகள்’ஆகிவிடுவதே முறை எனக் கொண்டனர் – புலியைக் கொன்றான் பிறகு தோட்டக்காரன், தன் வேலை முடிந்தது என்று எண்ணிவிடுவது போலவே புலி புகுந்ததால் எற்பட்ட சேதம், ஆகியவைகளைப் போக்குவது, வேறு ஏதேனும் துஷ்ட மிருகங்கள் புகாதபடி பாதுகாவல் அமைப்பது போன்ற காரியங்களைக் கூட தோட்டக்காரன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியால், கொஞ்சகாலம் பொறுத்துத்தான் செய்ய முற்படுவான். அது போலவே, அடிமைப்பட்டிருந்த போது ஏற்பட்ட அவதிகளையும் அல்லல்களையும் துடைத்திடும் அரும்பணியை, விடுதலைப்போரில் வெற்றி பெற்ற பல நாடுகள் செய்யாமல் இருந்துவிட்டதுண்டு – காலங்ககடந்தபின் செய்யத் தொடங்கியதுண்டு.

இந்தியாவின் விடுதலை சம்பந்தமாகக் கவனித்தாலோ, இவைபோல மட்டுமல்ல, மற்ற நாடுகளிலே, ஏற்படமுடியாத நிலைமை இங்கு இருக்கக் காணலாம்.

அடிமைப்பட்ட பல நாடுகளிலே ‘சுதந்திரம் வேண்டும்’ என்பது மட்டுமே பிரச்னை – இங்கோ, சுதந்திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்கவேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கிய போது, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும், என்பது மட்டும், முழக்கமாக இல்லை – அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகச் தெரியவி்ல்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை – ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும என்ற ஒரே ஒரு முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாது,

அன்னிய ஆட்சி ஒழியவேண்டும்.
மக்களாட்சி மலர வேண்டும்.
இந்து – முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்.
தொழில்கள் பெருக வேண்டும்.
கல்வி பரவ வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
தீண்டாமை போக வேண்டும்.
கிராமம் சீர்படவேண்டும்.
வறுமை போக வேண்டும்.
சுரண்டல் முறை ஒழிய வேண்டும்.

என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப்போர் சூழ்நிலைக்கும், நமது நாட்டிலே விடுதலைப் போர் நடந்த போதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் – இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமம் இருக்கிறது.

சூதாடி ராஜ்யத்தைத் தோற்றுவிட்ட நளன் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற கதைக் காலத்திலிருந்து, மகத ராஜ்யத்தை சேதி நாட்டரசன் பிடித்துக் கொண்டான், என்றுள்ள சரிதக் காலம் வரையிலே, ஒரு ராஜ்யம், ஒரு அரசன் கரத்திலிருந்து வேறோர் அரசனிடம் சிக்கி, மீண்டும், சொந்த அரசனிடம் வந்து சேரும் – சம்பவம், கொடிகள் மாறுவது, அதிகாரிகள் மாறுவது என்ற இவ்விதமான அளவோடுதான் இருக்கும். ஆனால், இக்காலத்தில், அதிலும் இந்தியாவில், நடைபெற்ற விடுதலைப்போர், கொடிமாற்றமோ, அதிகார மாற்றமோ மட்டும் குறிக்கோளாக அமைந்ததல்ல – தன்னாட்சி மட்டுமல்ல, இலட்சியம்; அந்தத் தன்னாட்சி மக்களாட்சியாக, அந்த மக்களாட்சியும் நல்லாட்சியாக, அந்த நல்லாட்சியும் மக்களுக்குப் புதிய வாழ்வை, முழு வாழ்வைத் தரக்கூடிய ஆட்சியாக அமைதல் வேண்டும் என்ற இவ்வளவு உன்னதமான இலட்சியத்தையும் உள்ளடக்கியதுதான் – எனவேதான் இங்கு விடுதலைப் போரின்போது கிளம்பியது ஒரு முழக்கமல்ல; பரந்த இலட்சியம். எனவேதான் மறைந்த உத்தமர் அன்னியராகிய வெள்ளையர் நீங்கிய, இந்தியர் அரசாள்கிற இந்தியாவைக் காண்பதே எனது இலட்சியம் என்று மட்டும் கூறாமல், பண்டிதர் எடுத்துக் காட்டியதுபோல,

ஏழை ஈடேற வேண்டும்.
ஏழை உரிமை பெறவேண்டும்.
ஜாதிபேதம் ஒழியவேண்டும்.
ஒற்றுமை மலரவேண்டும்.

என்று கூறினதுடன், ‘இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்’ என்றும் கூறினார். மற்ற நாடுகளின் நலிவு அன்னிய ஆட்சியின்போது, அதன் விளைவாகவே ஏற்பட்டதால், அந்த நாடுகளிலே தோன்றிய தலைவர்கள், நாட்டின் நலிவை நீக்க அன்னியரை விரட்டினாலே போதும் என்று கருதினர். அவர்கள் அங்ஙனம் கருதினதில் தவறுமில்லை. அதுபோல இங்கு அன்னியர் விரட்டப்பட்டு, நாடு, தன்னாட்சி பெறுவது மட்டும் போதும் என்று கருதினால்,நிச்சயமாகத் தவறு – ஏனெனில் இங்கு, அன்னிய ஆட்சியினால் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே, நமக்கென்று தோன்றிய சில அரசர்களாலும் அவர்கள் அனுஷ்டித்த முறைகளாலும், நமது சமூக அமைப்பினாலும் அதன் பயனாக ஏற்பட்ட பழக்க வழக்கங்களாலும் நமது வாழ்க்கை இலட்சியத்தினாலும் அதை ஒட்டி கட்டிவிடப்பட்ட வெட்டி வேதாந்த முறைகளினாலும், நமது மத அமைப்பினாலும் அதைப் பயன்படுத்திக் கொண்ட தன்னலக்காரரின் போக்கினாலும், பலப்பல கேடுகள் முளைத்துக் காடெனக் கிடந்தன.

(காந்திஜி மரணமடைந்தபோது, பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை)

Advertisements

One thought on “காந்திஜி காண விரும்பிய நாடு – அண்ணா

  1. Pingback: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு – அண்ணா | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s