ஏசு கிறிஸ்துவின் வார்த்தை – ஏசுவும் காந்தியும்

மகாகவி பாரதியாரின் கட்டுரையில் இருந்து :-

ஏசுவிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து, “சுவாமி! எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?”, என்று கேட்டான்.

அதற்கு ஏசு சொன்னர்:-

ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விபசாரம்  பண்ணாதே,கொல்லாதே,திருடாதே,பொய் சாட்சி சொல்லாதே,வஞ்சனை பண்ணாதே,தாய் தந்தயரைப் போற்று” என்று. வந்த மனிதன்: “நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் செய்து வருகிறேன்” என்றான். அப்பபோது ஏசு கிரிஸ்து:- “ஒரு குறை இன்னும் உன்னிடத்தில் இருக்கிறது. வீட்டுக்குப்போய் உன் சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. உனக்கு மோக்ஷச் செல்வம் உண்டாகும். சிலுவையைக் ( அதாவது கேள்வி விரதத்தை ) கைக்கொண்டு என்னுடன் வா” என்றார்.

வந்த மனிதன் இந்த வார்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப்போனான். அவன் பெரிய பணக்காரன். அவ்வளவையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு ஏசுவின் பின்னே போவதில் அவன் மனதிற்கு இன்பம் தோன்றவில்லை. அப்போது ஏசு கிறிஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் “ செல்வமுடையார் மோக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது” என்றார். சீடரெல்லாம் இதைக்கேட்டு வியப்பெய்தினர். ஸஹஜந்தானே? பணம் நிரம்ப வைதிருப்போர் யார்? ராஜா, மந்திரி,ஸேனாதிபதி,வியாபரிகள்,ஜமீந்தார்,கோயிலதிகாரிகள்,மடாதிபதிகள் – இத்தனை பேருக்கும் மோக்ஷம் ஸந்தேஹமென்று சொன்னால் கேட்போருக்கு வியப்புண்டாவது ஸஹஜந்தானே? குருக்கள் கூட நரகத்துக்குத்தானா போகவேண்டும்?

ஏசு கிறிஸ்து பின்னும் சொல்கிறார்:

மக்களிலே செல்வமுடையோர் ஈசனுலகத்திற்குள்ளே புகுதல் மிகவும் அரிது. ஊசித்தொளையில் ஒட்டகை நுழைவதைக் காட்டிலும், செல்வன் மோக்ஷத்துக்குள் நுழைவது கடினம்” என்றார். அப்போது பேதுரு என்ற சீடன் சொன்னான்:- “நாங்கள் அனைத்தையும் விட்டு உம்முடன் வந்திருக்கிறோம்.” என்று அப்போது “ என் பொருட்டாகவும் வேதத்தின் பொருட்டாகவும் எவனொருவன் வீட்டையேனும், உடன் பிறந்தாரையேனும், தாய் தந்தையரையேனும்- விட்டு வருகிறானோ, அவனுக்கு அவை அனைத்தும் நூறு பங்கு பெருகிவரும். இஹத்தில் உடன் பிறந்தார்,தாய் தந்தையர்,பெண்டு பிள்ளைகள்,பூமி எல்லாம் திரும்பக்கிடைக்கும்; ஆனால் கொடுமை அனுபவிக்க வேண்டும். பரதத்தில் நித்ய வாழ்வு கிடைக்கும்; ஆனால் இப்போது முதற்பட்டிருப்போர் கடைப்படுவார்கள்” என்று ஏசு சொன்னார்.

gandhiJesus

மேற்படி கதையை ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சில தினங்களின் முன்பு பிரயாகையிலே ஒரு அர்த்த சாஸ்திர சபையின் முன்பு செய்த பிரசங்கத்தின் கருத்து என்னவென்றால்:-“ஐரோப்பியர் செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்து விட்டார்கள். அப்படி நினைத்தபடியால், அவர்களுக்குப் பலவித அசெளகர்யங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக் கூடாது‘ என்பதேயாம்.

ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்: “இது கொண்டே முற்காலத்திலும் பணந்தேடும் காரியங்களுக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்கள். லௌகீக ஆசையெல்லாம் நிறுத்திவிடவேண்டுமென்று நான் சொல்ல வில்லை. பொருள் தேடுவதையே நோக்கமாகக் கொண்ட கூட்டமொன்று நம்முள்ளே இருக்கலாம். ஆனால் அந்த நோக்கம் சர்வ உன்னதமன்று.மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ், கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்; அமெரிக்காவின் செல்வத்தை அளவெடையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே எல்லாத் தேசத்தாருக்கும் அமெரிக்காவைக் கண்டால் பொறாமை. நமது தேசத்தில் சிலர் அமெரிக்காவைப்போல நாமும் செல்வம் தேடுவதே சரியென்றும், ஆனால் அந்தமாதிரி நாம் வேலைசெய்ய வேண்டாமென்றும் சொல்லுகிறார்கள். இந்த முயற்சி ஈடேறாது. ஒரு மனிதன் ஏக காலத்தில் உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிலைமையிலும் இருக்க முடியாது….யந்திரசாலை, ஆலை இவற்றால் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார் நவீன யந்திர தந்திரங்களினாலும் அவற்றால் விளையும் செல்வத்தினாலும் இன்ப முண்டாகா.”

இங்ஙனம் ஸ்ரீமான் காந்தி யேசுநாதரை மாத்திரமே யல்லாமல் முஹம்மது, நானக், கபீர், சைதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகளை எல்லாம் காட்டி, இவ்வனைவரும் வறுமையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றதையும், உலகத்துக்கு நல்ல வழி காட்டியதையும் ஞாபகப் படுத்துகிறார். ஆதலால் வறுமை விரதமே உயர்வு என்கிறாரா? ஒரேஅடியாக அப்படியும் சொல்லவில்லை. “பொன்னைக் காட்டிலும் அதிக உண்மை காட்டவேண்டும்; அதிகாரத்தைக் காட்டிலும் அதிக தீரம், சுயநலத்தைக் காட்டிலும் அதிக ஈகை இவை வேண்டும். நமது வீடுகளையும், அரண்மனைகளையும் கோவில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக்கோலம் அதிகமாகவும் விளங்கச்செய்வோமானால், நம்மிடத்தில் பாரமான சைன்யமில்லாமலே எதிர்த்து வரும் சேனைக் கூட்டங்களைத் தடுக்கலாம்” என்று ஸ்ரீமான் காந்தி சொல்லிவருவதில் எனக்குப் பெரும்பாலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்‘என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன். தெய்வத்தின் ‘அருள் பெற்றால் மற்றச் செல்வங்களெல்லாம் கூடி வரும்’ என்று யேசுகிருஸ்து சொல்லியதைக் காந்தி எடுத்துக் காட்டுகிறார். அதுவும் வேதவாக்கியமாம். ஆனால் அவர் சொல்வது துறவு நெறி. அது சிலருக்குச் சில காலங்களில் பயன்படலாம். இக்காலத்தில் பலருக்கு அது தீமை உண்டாக்கும். தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக்வேதம் இது போலவே சொல்லுகிறது.

Image Source : virtualmuseum.ca

பின்னூட்டமொன்றை இடுக