தென் ஆப்பிரிக்காவில் பாரத ஜனங்கள் – மகாகவி பாரதியார்

தென் ஆப்பிரிக்காவில் பாரத ஜனங்கள் (“விஜயா” 3 டிசம்பர் 1909 & சூரியோதயம் 5 டிசம்பர் 1909) ஓரு நிருப நேயர் பின்வருமாறு எழுதுகிறார். (ஒரு “நிருப நேயர்” என்பது பாரதியின் புனைபெயர்)

திரான்ஸ்வாலிலும் நேட்டாலிலும் இந்தியர்கள் தினந்தோறும் சிறைக்குள் அடைக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமே. இதைப் பரிசீலித்தோமானால், பின்வரும் பாடத்தை நாம் பெறலாம். எவர் ஒருவரும் தன் சுதந்திரத்தை இழக்கக்கூடாது. ஒருவனுக்கு அடிமையாக இருப்பதைவிடச் சிறையிலிருப்பது மேல். திரான்ஸ்வாலிலுள்ள நமது சகோதரர்கள் பார்லிமெண்டில் இடம் பிடிப்பதற்காகப் போராடவில்லை. ரெயிலில் பிரயாணம் செய்தல், கடற்கரையில் நடத்தல், வியாபாரம் செய்தல், பள்ளிக்கூடத்தில் படித்தல் போன்ற சாதாரண ஜனங்களுக்குரிய உரிமைகளையே அவர்கள் கேட்கிறார்கள். ‘அடிமை ஜாதியான இந்தியர்களுக்கு இந்த உரிமைகளை ஏன் கொடுக்க வேண்டும்?’ என்று வெள்ளையர்கள் கேட்கிறார்கள். ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, பதினான்கு வயதுக்கு மேற்பட்டதால் ஒரு முகமதியச் சிறுவனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக “ஆப்பிரிக்க வர்த்தமானி” பத்திரிகையில் சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. இதற்குக் காரணம் அச்சிறுவன் ஓர் இந்தியன். கிறிஸ்தவர்களுக்கும் முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏமாற்றுத்தனமான கவுன்சில் சீர்திருத்தங்கள் வழங்கப்படலாம்; வெறும் விளையாட்டு பொம்மைகள் போன்ற சில விசேஷ சலுகைகள் முகமதியர்களுக்கு வழங்கப்படலாம்; வெள்ளையர் மீது கிறிஸ்தவர்களுக்கு விசுவாசமிருக்கலாம்; ஹிந்துக்களில் பலர் அரசாங்கத்திற்கு விசுவாசமாயிருக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்கவில் இவர்களில் எவருக்கும் உயர் கல்வி கிடைக்காது. அவர்கள் சுவாசிக்க சுதந்திரக் காற்று கிடைக்காது. தென் ஆப்பிரிக்க சமாச்சாரங்களைப் படித்த பின்பும் நீங்கள் வாளாயிருந்தால் தர்ம தேவதை சகிப்பாளா? வெறு எந்த தேசமும் உங்களைப் போல் மெத்தனமாய் இருக்குமா? அர்ஜூனன், குரு கோவிந்தர், சிவாஜி ஆகிய வீர புருஷர்களின் ரத்தம் உங்கள் நாளங்களில் ஓடவில்லையா? ஜப்பானியர் இத்தகைய அவமானத்தைச் சந்தித்தால் என்ன நடக்கும்? 300 வருஷங்களுக்கு முன்பு, ஒரு ஸ்பானிஷ்காரன் ஓர் ஆங்கிலேயனின் காதை அறுத்ததால் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு யுத்தம் நடந்தது. சரித்திரம் அறிந்த வாசகர்களுக்குத் தெரியும். பாரத ஜனங்களால் பராக்கிரமச் செய்கைகளில் ஈடுபட முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ‘வர்ஜனம்’* (*புறக்கணித்தல்) என்ற பேடித்தனமான திட்டத்தையாகிலும் அனுஷ்டிக்கலாகாதா? அந்நிய வஸ்துக்கள், சட்டசபைகள், ராஜாங்க சேவை முதலானவற்றை வர்ஜனம் செய்யாமல், மழைக் காலத்தில் புறப்படும் விட்டில் பூச்சிகள் போல் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட முந்துகிறார்கள். இவர்களையெல்லாம் ஜாதி பிரஷ்டம் செய்யும் தைரியம் பொது ஜனங்களுக்கு எப்பொழுதுதான் வருமோ? ஓ! பாரதமாதா! நீ ஏன் மெளனமாயிருக்கிறாய்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு’ என்றார் ஏசுபிரான். ‘பகைவர்களை அழியுங்கள், அநீதியை ஒழியுங்கள், சுபிட்சமாய் வாழுங்கள், அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்’ என்றார் கிருஷ்ண பரமாத்மா. இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சீடர்களும் அவர்களது போதனைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கிருஷ்ண பரமாத்மாவையும், ஆரியர்கள் கிறிஸ்துவையும் சந்தோஷப் படுத்துகின்றனர் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். ஆரியர்களின் இரண்டொருவரே முனிபுங்கவர்களாக முடியும், மற்றவரெல்லாம் கிருஹஸ்தர்களாகத் தம் கடமையைச் செய்ய வேண்டும். ஓ! ஆரியர்களே! இதை உங்கள் மனதில் வையுங்கள். இதன்மீது பத்திராதிபர் பின்வருமாறு எழுதுகிறார்: பிரெஞ்சு இந்தியாவிலுள்ள குருட்டு கிறிஸ்தவர்களும் போலி ஹிந்துக்களும் இதைப் படித்தேனும் பாடம் கற்றுக்கொண்டு, வெள்ளையர்கள் விதித்த அடிமைச் சேவகத்தை விட்டொழிப்பார்களா? வெள்ளையர்களும் ஹிந்துக்களும் சமம் என்பதை ஓர்ந்து, ஓர் இந்தியரையே வைஸிராயாகத் தேர்ந்தெடுப்பார்களா?

bharathiyar தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டங்கள் (“விஜயா” 8 டிசம்பர் 1909)

அந்நியர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், நம்மை அடிமைகளாக நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் தென் ஆப்பிரிக்காவில் போராடும் நம் சகோதரர்கள் படும் கஷ்டங்களை எண்ணிப்பார்க்க, துக்கத்தாலும் சந்தோஷத்தாலும் நம் நெஞ்சம் நிரம்புகின்றது. துக்கத்திற்கான காரணம் வெளிப்படை. சமத்துவத்திற்காகவும் சுதந்திரத் திற்காகவும் நமது சகோதரர்கள் எவ்வளவுதான் கஷ்டமனுபவித்தாலும், சுபிட்சம் சமீபித்துள்ளது என்று நினைக்க மிக்க மகிழ்ச்சி உண்டாகின்றது. பாரத மக்கள் எப்போது மீண்டும் ஆண்மை பெறுவர் என்று தர்மதேவதை காத்திருந்தாள். அந்தக் காலமும் வந்துவிட்டது. மனிதத் தன்மையே இல்லாத பன்றிகளும் ஓநாய்களும் டிரான்ஸ்வாலை ஆள்கின்றன. மனிதர்கள் அத்தேசத்தை ஆளும்பட்சத்தில் காந்தி போன்ற மகான்கள் கஷ்டப் படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், தேசத்தின் பொருட்டும் தர்மத்தின் பொருட்டும் ஒருவன் அனுபவிக்கும் கஷ்டங்கள் பெரிதில்லை என்று காந்தி சொல்கிறார். பெரிய வார்டரின் கக்கூசைச் சுத்தம் செய்யுமாறு ஸ்ரீ காந்தியை மற்றொரு வார்டர் ஏவியபொழுது, அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் அதைச் செய்தார். “இதைப் போன்ற கஷ்டங்களைச் சுமத்துவதன் மூலம் எங்கள் மனோதைரியத்தைக் குலைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளட்டும்” என ஸ்ரீ காந்தி எழுதுகிறார். இதைவிடக் கொடிய துன்பங்களைச் சுமத்தினாலும் காந்தியினதும் அவரது தலைமையிலான பிற பாரத வீரர்களினதும் மனங்கள் குலையமாட்டா. நமது ஜாதீய கவுரவத்தைக் காக்கும் பொருட்டு நம்மவர்கள் காட்டும் தைரியத்தை வாயால் பாராட்டினால் மட்டும் போதுமா? தமது பெண்டிரும் குழந்தைகளும் பட்டினியால் வாடினபோதும், நம் சகோதர ரத்தினங்கள் அமைதியாகச் சிறை புகுந்துள்ளார்கள். அவர்களுடைய மனைவியரும்கூட, தேசத்தின் பொருட்டாக அவர்கள் உழைக்க ஊக்குவிக்கிறார்கள். அந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சகாயம் புரிவது நமது கடமையல்லவா?”

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்

டிசம்பர் 8, 1906

ஓநாய் ஆட்டுக்குட்டிகளிருக்கும் இடத்திற்கு வந்தால் ஓநாயின் பாடு வெகு உல்லாசம்தான். ஆனால் ஓநாய்கள் இருக்குமிடத்திற்கு ஆட்டுக்குட்டி செல்லுமானால் இதன் பாடு வெகு கஷ்டம். இந்தியர்களுக்கும் வெள்ளை ஜாதியாருக்கும் இப்போதிருக்கும் சம்பந்தம் மேற்கண்ட விதமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு ஐரோப்பியன் வந்தால் அவனுக்கு வேட்டகத்திற்கு வந்த மாப்பிள்ளைக்கு நடக்கும் உபசாரங்களெல்லாம் குறைவின்றி நடக்கின்றன. அவன் திரும்பின இடத்திலேயெல்லாம் உத்தியோகம். அவன் கால் வைத்த இடம் எல்லாம் பணம். சென்ற இடமெல்லாம் மதிப்பு. கையிலே அரைக்காசு இல்லாமல் இங்கே வந்து சேர்கிறான். திரும்ப ஊருக்குப் போகும்போது பிரபுவாகப் போகிறான். அவனுடைய தசை அப்படியிருக்கிறது. இது நிற்க.

ஆங்கிலேய ஆட்சிக்க்குட்பட்ட திரான்ஸ்வால், கேப் காலனி, ஆஸ்டிரேலியா முதலிய தேசங்களில் இவன் (இந்தியன்) கதி மஹா பரிதாபகரமாய் விடுகிறது. இவர் வர்த்தகம் செய்து செழிப்படையவிடுகிறதில்லை. உத்தியோகங்களென்று மூச்சுவிடக்கூடாது. “அங்கே நடக்கக்கூடாது இங்கே வீடு கட்டக்கூடாது, தண்ணீர் சாப்பிடத் தீர்வை கொடுக்க வேண்டும், மூச்சுவிட வரி செலுத்த வேண்டும்” என்பதாக எண்ணிறந்த இடைஞ்சல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நமது “காருண்ய”! கவர்ன்மெண்டாரிடம் முறையிட்டுத் தொண்டை வற்றிப்போய்விட்டதேயொழிய ஒரு காசுக்குப் பயன் கிடையாது. சிறிது காலத்திற்கு முன்பு திரான்ஸ்வாலில் “ஏஷ்யாக்காரர்விதி” (Asiatic Ordinance) என்பதாக ஒரு விதியேற்படுத்தப்பட்டது. இது இந்தியர்களுக்கு வெகு அவமானமான விதி. இதை மாற்றவேண்டுமென்ற திரான்ஸ்வாலின் இந்தியர்கள் பிரதிநிதிக் கூட்டமொன்று இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் பிரார்த்தனை புரிந்தது. எத்தனையோ பிராயாசைக்கப்பால் இங்கிலாந்து கவர்ன்மெண்டார் ௸ விதி கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைக்கப்படுமென்றும், முற்றிலும் மாற்றிவிட வேண்டுமானால் அது மிகவும் யோசனை செய்து முடிவுவேண்டிய காரியமென்றும் சொல்லி இருக்கிறார்கள். இது என்ன அவமானம்! என்ன நிந்தை! ஆரிய புத்திரர்களே! தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்கவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்கள்!

—- மகாகவி பாரதியார்

Advertisements

One thought on “தென் ஆப்பிரிக்காவில் பாரத ஜனங்கள் – மகாகவி பாரதியார்

  1. Pingback: பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? – பாரதி | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s